ஒசாமா வாழ்ந்ததாக கூறப்படும் அப்போதாபாத் பிரதேச மக்களின் கருத்தை பிரஸ் ரிவி ஒளிபரப்பியது. அப்பிரதேச மக்கள் ஒசாமா அங்கு வாழவில்லை என்று கூறுகின்றார்கள்.
இது விடயமாக பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் முறுகல் நிலை தோன்றி வருகிறது.
ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்புத் தரப்பு நாளுக்கு நாள் முரண்பாடான கருத்துக்களைக் கூறிவருவதாக 04.05.2011 அன்று இரவு பிபிஸி தமிழோசை செய்தி வெளியிட்டது.
இதுதான் அந்த செய்தி:
பின் லாடன் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் அமெரிக்க வெள்ளை மாளிகை தாங்கள் முதலில் வெளியிட்ட விபரங்களை மாற்றிக்கொண்டுள்ளது.முதலில் சொல்லப்பட்டதுபோல தாங்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய போது பின் லாடன் ஆயுதம் எதனையும் ஏந்தியிருக்கவில்லை என்று வெள்ளை மாளிகை இப்போது கூறுகிறது. அப்படியானால் வேண்டுமென்றே சுட்டுக் கொல்வதற்காக நடத்தப்பட்ட ஒரு நடவடிக்கை இதுவா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
மேலும் பில் லாடனின் மனைவிகளில் ஒருவர் கொல்லப்பட்டார் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கொல்லப்பட்டது பின் லாடன் மனைவி அல்ல என்று பிற்பாடு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.அவசர அவசரமாக நிறைய தகவல்களை வெளியிட வேண்டி வந்ததால் விபரங்களில் இவ்வாறான திரிபுகள் நிகழ்ந்துவிட்டிருக்கலாம் என்று அமெரிக்க அதிபரின் ஊடகத்துறைச் செயலர் ஜே கார்னி தெரிவித்துள்ளார்.
ஒஸாமா பின் லாடன் தன் மனைவியை முன்னால் பிடித்துக்கொண்டு அவரை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தி துப்பாக்கி சூட்டில் இருந்து தப்பிக்க முயன்றிருந்தார் என்று முன்னர் கூறப்பட்டது. ஆனால் அவர் அப்படி செய்திருக்கவில்லை என்றும் இப்போது கூறப்பட்டுள்ளது.