Monday 9 April 2018

மைத்திரி ஒரு விலாங்கு மீன்!


மைத்திரி ஒரு விலாங்கு மீன். பாம்புக்கு தலையையும் மீனுக்கு வாலையும் காட்டும் அரசியல் தந்திரத்தை நன்றாக செயற்படுத்துபவர் தான் நமது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.
சிங்கள இனவாதிகள் மற்றும் முஸ்லிம்களுடனான இவரின் நிலைப்பாடு இப்படித்தான் இருக்கிறது.
பாகிஸ்தானுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரியோடு முஸ்லிம் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் சென்றுள்ளனர். தனது வெளிநாட்டு விஜயங்களின் போது குறிப்பாக முஸ்லிம் நாடுகளுக்கான விஜயங்களின் போது கறிவேப்பிலையாக இந்த முஸ்லிம் பிரதிநிதிகள் பயன்படுத்தப் படுகின்றார்கள்.

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக வளர்ந்து வரும் சிங்கள பௌத்த இனவாதத்தை கண்டும் காணாதது போல் இருந்துகொண்டு இனவாதிகளுக்கு எதிராக எவ்வித சட்டநடவடிக்கையும் எடுக்காதவர் தான் எங்கள் ஜனாதிபதி மைததிரிபால சிரிசேன.
அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகளுக்கு நாட்டின் ஜனாதிபதி என்ற ரீதியில் இவருக்குள்ள பொறுப்பை இவர் நிறைவேற்றினாரா என்று பார்த்தால் அது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.
காலி கிந்தோட்டை, அம்பாறை, கண்டி என நகரும் இனவாத வன்முறை அலையை தடுத்து நிறுத்த இந்த நல்லாட்சி நாயகர்களான ஜனாதிபதியும், பிரதமரும் ஒழுங்கான உருப்படியான எந்த எதிர் நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. முப்படைகளின் தளபதியான ஜனாதிபதியும், சட்டம் ஒழுங்கு அமைச்சரான ரணில் விக்ரமசிங்கவும் கண்டியின் முஸ்லிம்களின் சொத்துக்கள் கருகி முடிந்ததன் பின்னர்தான் கண் விழித்தனர்.
தமக்கு வாக்களித்து ஆட்சியதிகாரத்தை தமது கைகளுக்கு வழங்கிய ஒரு சிறுபான்மை சமூகத்தை பாதுகாத்திட வக்கில்லாமல், முதுகெலும்பில்லாமல் இருக்கும் இந்த 'நல்லாட்சி'யின் நாயகர்கள், தமக்கு எதிராக, எதிர் அரசியல் தளத்தில் நின்று செயற்பட்ட அரசியல் சக்திகளின் இனவாத வன்முறைகளுக்கு பின்புலமாக ஒத்தாசை வழங்கும் நன்றிகெட்ட, வெட்கம்கெட்ட நிகழ்ச்சி நிரலை மிகவும் கச்சிதமாக நயவஞ்சகத் தனமாக அரங்கேற்றி வருவதாகவே முஸ்லிம்கள் எண்ணுகின்றனர்.
அம்பாறையில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் பின்னர் அம்பாறைக்கு ஜனாதிபதி மைத்திரி விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
''வன்முறையாளர்களுக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும். இனங்களுக்கிடையிலான நல்லுறவை வளர்க்க வேண்டும்'' என மேடையில் முழங்கிய மைத்திரி, அம்பாறையில் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகளுக்கு காரண கர்த்தாவாகிய, கிழக்கு மாகாணத்தில் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக இனவாதத்தைக் கக்கித் திரியும் அம்பிட்டியே சுமணரத்ன தேரரை அவரது விகாரைக்கு சென்று சந்தித்து அவரின் ஆசியையும் பெற்று வந்தார். ஜனாதிபதி சிறிசேனவின் நயவஞ்சகத்தனமான அரசியல் நாடகத்திற்கு இது ஒர் உதாரணம் மட்டுமே.
இம்மாத ஆரம்பத்தில் கண்டியில் முஸ்லிம்களுக்கெதிராக இடம்பெற்ற உயிர், உடைமை, சொத்து அழிப்புகளுக்கு முன்னணியில் நின்று செயற்பட்டவர் ஜனாதிபதி சிறிசேன ஆசிபெற்று வந்து ஆதரவு தெரிவித்து வந்த இதே மங்களாராம விகாதிபதி சுமணரத்ன தேரர்தான்.
கண்டி திகன வன்முறைக்கும் காரணமாக இருந்த இவர் அம்பாறையிலிருந்து கண்டிக்கு பல தேரர்களையும், வன்முறையாளர்களையும் அழைத்து வந்து வன்முறைகளுக்கு வழிகாட்டிய நிகழ்வுகள் காணொளிகளாக சமூக ஊடகங்களில் பரவிக் கிடக்கின்றன.
ஆனால் இதுவரை இந்தத் தேரர்கள் யாரையும் இதுவரை இந்த நல்லாட்சியின் நாயகர்கள் கைது செய்யவில்லை. செய்யப்படும் கைதுகள் கூட ஒரு கண் துடைப்பாக மாறும் சாத்தியங்களும் நிறையவே இருக்கின்றன.
ஞானசார தேரருக்கும் மைத்திரிக்கும் உள்ள உடன்பாடு பற்றி சொல்லத்தேவையே இல்லை.
நான்கு பொலிஸ் குழுக்கள் அமைத்து, பல நாட்கள் தேடிய ஞானசார தேரரை ஒரு மணித்தியாலத்திற்குள் மூன்று நீதிமனனற்ங்களில் பிணை வழங்க ஏற்பாடு செய்தவரும் இந்த மைத்திரிதான். மைத்திரியின் ஜப்பான் விஜயத்தின் போது ஞானசார தேரரும் கலந்து கொண்ட விடயம் பெரும் சர்ச்சையை கிளப்பியது நாம் அறிந்த விடயமே.
இப்படி இனவாத வன்முறை சக்திகளுக்கு தனது ஜனாதிபதி அதிகாரத்தை பயன்படுத்தி அடைக்கலம் வழங்கும் மைத்திரி, தனக்குத் தேவையான போது முஸ்லிம்களையும் அவ்வப்போது அரவணைக்கத் தவறுவதில்லை.
முஸ்லிம் நாடுகளுக்கான அவரின் விஜயங்களின் போது எமது முஸல்மான் அரசியலவாதிகளை அழைத்துச் சென்று அந்தந்த நாடுகளின்; தலைவர்களுக்கு இந்த முஸல்மான்களைக் காட்டி உதவி ஒத்தாசைகளையும் பெற்று 'முஸல்மான் மார்க்கட்டிக்' ஐ கச்சிதமாக செய்து வருகிறார் இந்த சிறிசேன.
கண்டி திகன மக்களின் காயங்கள் ஆறுவதற்கு முன்னர் சிறிசேனவின் பாகிஸ்தான் விஜயத்திற்கு இந்த முஸல்மான் முதுகு சொறியும் கூட்டமும் உறுதுணையாக சேர்ந்திருக்கிறது.
சிங்கள இனவாதிகளின் வன்முறையினால் எரிந்து, கரிந்து, கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கும் கண்டி திகண மக்களின் முனகல்களை இந்த முதுகு சொறிந்து எச்சில் உண்டு வாழும் முஸல்மான் கூட்டம் நிச்சயமாக அந்த நாட்டு தலைவர்களிடம் மூடிமறைத்தே இருக்கும்.

No comments:

Post a Comment

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...