1990 ஒக்டோபர் மாதம் 30ம் திகதி அந்த நாள் என்றும் என் நினைவில் நின்று அகலாத நாள்.
வட மாகாண முஸ்லிம்கள் தனது சொந்த மண்ணிலிருந்து வேரோடு பிடுங்கி எறியப்பட்ட நாள். அன்று மன்னாரிலிருந்து அகதிகளால் நிரம்பிய லொரி ஒன்று கொழும்புக்கு நகர்ந்துக்கொண்டிருந்தது. அது பிரேமதாஸ ஜனாதிபதியின் ஆட்சிக்காலம்.
கொழும்புக்கு அகதிகள் வந்துவிடக் கூடாது என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் கடுமையான தடைகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அதையும் மீறி இந்த வாகனம் வந்துக்கொண்டிருந்தது. நவீன தொடர்பாடல் வசதிகள் அறவே இல்லாத அந்தக்காலத்தில் வாகனம் வருகின்ற ஒவ்வொரு ஊர்களையும் மிகவும்சிரமத்தோடு எமக்கு 'அப்டேட்' செய்துகொண்ருந்தார்கள்.
இரவு 9.00 மணியைத் தாண்டியது. வாகனம் பேலியாகொடை பகுதியை கடந்து கொழும்பு நகர எல்லைக்குள் வர வர எமக்கு பதற்றம் அதிகரித்தது. நானும் இதற்காக காலை முதல் உழைத்துக்கொண்டிருந்த சில நண்பர்களும் மருதானை ஸாஹிரா பள்ளிவாசலுக்கு போனோம். பள்ளிவாசல் வாயிற்கதவு 10 மணிக்கு மூடிவிடுவார்கள். அதற்குள் இந்த வாகனத்தை பள்ளிவாசல் முன்றலுக்குள் எடுக்க வேண்டும். என்னோடு வந்தவரில் மிகவும் வயதில் கூடியவர் ஷாஹுல் ஹமீத் நானா, இடது சாரி அரசியலில் பரிச்சயமானவர். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பாசறையில் வளர்ந்து பிற்காலத்தில் கொழும்பு நகர சபைக்கு ஜேவிபியில் போட்டியிட்டவர். வயதில் முதிர்ச்சியிருந்தாலும் இளைஞர்களின் உணர்வுகளோடு ஒன்றித்துப் போகிறவர்.
வாயிற்கதவை மூடுவதற்கு மருதானை பள்ளிவாசல் காவலாளி தயாராகிக்கொண்டிருந்தார். இந்தக் காவலாளி ஷாஹுல் ஹமீத் நானாவுக்கு மிகவும் அறிமுகமானவர். பள்ளிவாசல் வாயில் கதவடியில் எங்களைக் கண்டதும் அவர் மூடுவதை நிறுத்திக்கொண்டு ஷாஹுல் ஹமீத் நானாவோடு மிகவும் நேசமாக பேச்சுக்கொடுத்தார். இந்த உறவை வைத்து இந்தக் காரியத்தை சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை என் உள்ளத்தில் உறுதியாகியது.
அவருக்கு இந்த அகதிகள் பிரச்சினை தொடர்பாக அவ்வளவு பெரிதாக ஒன்றும் தெரியாது. இன்னும் சிறிது நேரத்தில் அகதிகளை சுமந்து வந்துக்கொண்டிருக்கும் வாகனம் மருதானைக்கு வந்துவிடும். அதற்குள் இவர் வாயிற்கதவை மூடாமல் இருக்கவேண்டும். ஷாஹுல் ஹமீத் நானா ஒரு வியூகத்தை வகுத்தார்.
''கடைக்குப் போய் தேநீர் ஒன்று குடிப்போம் வாரீயா? என்று காவலாளியிடம் கேட்டார். கதவை மூட வேண்டுமே! நேரம் சரியாகி விட்டது. மூடிவிட்டு வருகிறேன் என்றார் காவலாளி. இல்லை தேனீர் குடித்து வந்து மூடுவோம். ஒரு நண்பர் வரும்வரை இவர் இங்கே இருப்பார் என்று என்னைக்காட்டிச் சொன்னார் ஷாஹுல் ஹமீத் நானா. நானும் தலையசைத்தேன். வாயிற் கதவை மெதுவாக சாத்திவிட்டு இருவரும் ஹோட்டலை நோக்கி நகர்ந்தார்கள்.
நொடிப்பொழுதில் மருதானை பொலிஸ் நிலையத்;திற்கு முன்பாக வலது பக்கம் சிக்கனல் இட்டவாறு புகாரி ஹோட்டல் பக்கத்திலிருந்து லொறியொன்று வந்துக்கொண்டிருந்தது. பொரளை பக்கம் செல்லும் வாகனம் மருதானை பொலிஸுக்கு முன்னால் பள்ளிவாசல் பக்கம் திரும்ப முடியாது. என்றாலும் நான் வாயிற் கதவை திறந்தவாறு பள்ளிவாசல் வளவுக்குள் வண்டியை வருமாறு சைகை செய்தேன். மிகவும் வேகமாக வாகனத்தைத் திருப்பிய சாரதி பள்ளிவாசலுக்கு முன் இருந்த மைதானத்தில்; வந்து நிறுத்தினார்.
அழுகையும் கண்ணீரும் கதறல்களோடும் லொரியில் இருந்து இறங்கிய பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் என் இதயத்தை உருகச்செய்தனர். சுமார் பத்து மணித்தியாலங்களுக்கு மேலாக இவர்கள் வாகனத்தில் அடைக்கப்பட்டு பயணம் செய்ததாக அறிய வந்த போது என் கண்கள் குளமாகின.
விடிந்தால் வெள்ளிக்கிழமை நாளைய ஜும்ஆ நிகழ்வு அசம்பாவிதங்கள் உள்ள ஒரு நாளாக கொழும்பை மாற்றிவிடுமோ என்ற அச்சத்தில் பாதுகாப்புத் தரப்பும், அரசாங்க உளவு அமைப்புகளும் உசாராகின. வடமாகாணத்திலிருந்து கொழும்புக்கு வந்த முதலாவது அகதிகள் குழு இதுவாகத்தான் இருக்கும் என்பதே எனது அபிப்பிராயம்.
அடுத்த நாள் எனக்கு எதிராக மருதானை பொலிஸில் ஸாஹிரா வளாகத்திற்குள் அத்துமீறி பிரவேசித்ததாக முறைப்பாடோன்றை பள்ளிவாசல் நிர்வாகம் இட்டிருந்தது. அதற்கும் தைரியமாக முகம் கொடுத்தேன்.
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில், கண்ணீரால் எழுதப்பட்டுள்ள வடமாகாண வெளியேற்றத்தின்; கதைகளின்; பக்கங்களில்... துயரமும் துக்கமும் மிகுந்த இந்த நினைவுகளில்... என் கண்ணீரும் கலந்திருக்கிறது.
அந்த வலிகளை வைத்து 2006ம் ஆண்டு நான் ஒரு பாடலை உருவாக்கினேன. அபாபீல் என்ற இறுவட்டில் வரும் அந்தப் பாடல் வடமாகாண முஸ்லிம்களின் வலியை சொல்லும் விரல்விட்டு எண்ணக் கூடிய டிஜிட்டல் ஆவணங்களில் ஒன்றாக என்றும் இருக்கும் என்றே நம்புகிறேன்.