மஹரகம தேசிய புற்று நோய் நிறுவனத்தின் பெயர் அபேக்ஷா மருத்துவ மனை என மாற்றப்பட்டிருக்கிறது.
இந்த பெயர் மாற்றம் தொடர்பாக தகவலை அறிந்ததும் மிகவும் மகிழ்ச்சியடைந்தவர்களில் நானும் ஒருவன்.
2013ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் இறுதியில் வந்த அந்த நாள் என் மனதில் இன்னும் அழியாமல் இருக்கிறது.
மஹரகம மருத்துவமனையின் முகப்பில் புழுதி படிந்த நிலையில் இருந்த அந்த புற்று நோய் வைத்தியசாலை என்ற பெயர் பலகையை ஊடறுத்து சென்ற எமது வாகனம் உள்ளே நுழையும் போது துயரம் என் தொண்டையைக் கவ்விக்கொண்டது.
வாகன சாரதியிடம் ஏதோ பேசமுயன்றேன் என்னால் பேச முடியவில்லை. என் மனைவியும் மௌனமாக வலியின் அவஸ்தையை அடக்கிக் கொண்டிருந்தாள்.
இதுசார்ந்த ஒரு நோயாளியின் தந்தையாக, தாயாக இருப்பதின் வலியை அன்று தான் நான் உணர்ந்தேன். இனம் புரியாத பயமும் கவலையும் இதயத்தை பற்றிக்கொண்டிருந்தது.
சிகிச்சைக்காக முதலாவது முறையாக எனது மகனை மஹரகம மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது எனக்கேற்பட்ட வேதனையை எழுத்தில் வடிக்க முடியாது.
மகனை மேலதிக சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு கொண்டு செல்ல வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது.
வெளிநாட்டு; மருத்துவமனைகளில் புற்றுநோய் என்ற பெயரே அறிவிப்பு பலகைகளில் காணக்கிடைக்கவில்லை. நோயாளிகளை உளவியல் ரீதியாக பாதிக்கும் 'புற்றுநோய் மருத்துவமனை' பெயர் பலகைகள் வெளிநாடுகளில் இல்லாத போது இந்த புழுதி படிந்த பெயர் பலகை இலங்கைக்கு மட்டும் ஏன்? என்ற கேள்வி என்னை வருத்திக்கொண்டே இருந்தது.
எனது மனதிலிருந்த அந்த எதிர்ப்பார்ப்பு இப்போது நிறைவேறியிருக்கிறது.
மஹரகம தேசிய புற்றுநோய் நிறுவனம் என்ற பெயரை அபேக்ஷா மருத்துவமனை
என்று இப்போது மாற்றியிருக்கிறார்கள்.
என்று இப்போது மாற்றியிருக்கிறார்கள்.
சிங்களத்தில் அபேக்ஷா என்றால் எதிர்பார்ப்பு என்று அர்த்தம். நாளுக்கு நாள் வளர்ந்து வரும் மருத்துவம் சார்ந்த அறிவியல் இந்த நோயாளிகளின் மனதில் நல்ல எதிர்பார்ப்பை உருவாக்க வேண்டும்.
புற்று நோய்க்கெதிரான மருத்துவ ஆய்வுகளும், கண்டுபிடிப்புகளும் வளர்ச்சியடைந்து வருகின்றன. அந்த மகத்துவமிக்க அறிவியல் வளர்ச்சியினால் பலர் குணமடைந்திருக்கின்றார்கள். எனது மகன் கூட பூரண குணமடைந்துள்ளான்.
நான் நோயுறும் போது அவனே (அல்லாஹ்வே) எனக்கு நிவாரணம் தருகிறான். (அல்குர்ஆன் 26:80)
மனிதர்களைப் படைத்து பராமரிப்பவனே! நோயைப் போக்கி, அறவே நோய் இல்லாதவாறு குணமளிப்பாயாக! நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். (நூல் : புகாரீ 5675)
எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே!
No comments:
Post a Comment