நேற்றைய தினம் டி.என்.எல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய கலந்துரையாடலை அடுத்து ஜம் இயத்துல் உலமா ஏன் இந்நிகழ்ச்சியில் பங்கு கொள்ளவில்லை எனும் கேள்வி ஒவ்வொரு இலங்கை முஸ்லிமின் மனதிலும் எழுந்துள்ளது. இன்றைய நிலையில் வெறும் பொதுபல சேனா எனும் அமைப்பின் ஹலால் எதிர்ப்பு எனும் நிலை மாறி பல சிங்கள பெளத்தவாத இயக்கங்களின் முஸ்லிம் எதிர்ப்பாக விஸ்வரூபம் எடுத்து வரும் சமூகப் பிரச்சினைகளைக் கையாள்வதும் உண்மைகளை வெளிக்கொண்டுவருவதும் கூட ஊடகங்களின் கடமையாகும். அந்த வகையில் இது தொடர்பாக நாம் பொதுபல சேனாவை இன்று (13-12-2013 , இலங்கை நேரம் 17.30 ) தொடர்பு கொண்டு நேர்காணல் ஒன்றை நேரடியாக அதன் முகவரியாக விளங்கும் அத்தேஞான சேர தேரரிடமே மேற்கொண்டிருந்தோம். அதன் போது நாம் கேட்ட கேள்விகளும் அவர் தந்த பதில்களையும் இங்கே பிரசுரிக்கிறோம்.
இது தொடர்பாக நாம் ஜம் இயத்துல் உலமாவிற்கும் அறிவித்திருப்பதோடு அவர்கள் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டிற்கான விளக்கத்தையும் தரும்படி தொடர்பு கொண்டிருக்கிறோம். எனினும், இப்பதிவு மேற்கொள்ளப்படும் வரை எமக்கு எந்தப் பதிலும் கிடைக்காத நிலையில் இதனைப் பிரசுரிக்கிறோம். ஜம் இயத்துல் உலமாவின் பதில் கிடைக்குமிடத்து அதனை வாசகர்களுக்காக இணைத்துக்கொள்வோம்.
நேர்காணல் :
“முதலில் எமக்காக நேரம் ஒதுக்கி இணைந்து கொண்டமைக்கு நன்றி உங்களுக்கு, இன்றைய நிலையில் நம் நாட்டில் நிலவும் இனங்களுக்கிடையிலான பதட்ட சூழ்நிலை மற்றும் நேற்றைய தினம் டி.என்.எல் தொலைக்காட்சியில் உங்கள் கலந்துரையாடல் சம்பந்தமாகவும் நேரடியாக சில விளக்கங்களைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறோம்”.
கேள்வி: பொது பல சேனா முஸ்லிம்களையும் ஹலாலையும் எதிர்க்கிறது என்பது இன்று வெளிப்படையாக எங்களுக்கு இருக்கும் கவலை, இதை நீங்கள் ஏன் எதிர்க்கிறீர்கள் என்பது தொடர்பாக பல விளக்கங்கள் தருகிறீர்கள், எனினும் அது குழப்பகரமாகவே இருக்கிறது. நீங்கள் உண்மையில் முஸ்லிம்கள் ஹலால் உணவை உண்பதை எதிர்க்கிறீர்களா அல்லது ஜம் இயத்துல் உலமா இதில் ஈடுபட்டதனால் அதனை எதிர்க்கிறீர்களா?
தேரர்: முதலில் எம்மோடு தொடர்பு கொண்டு இதைப்பற்றிப் பேசவும் உரையாடவும் வந்தமைக்கு உங்கள் ஊடகத்திற்கு நன்றி. நான் நேரடியாகவே சொல்வதானால் ஜம் இயத்துல் உலமா எனும் அமைப்பு கிட்டத்தட்ட “பிரபாகரனின்” எல்.டி.டி.ஈ போன்றது. அதன் கொள்கைகளும் செயற்பாடுகளும் இந்த நாட்டினைப் பிளவு படுத்தும் வகையிலும், இனங்களுக்கிடையிலான ஒற்றுமையைக் குழப்பும் வகையிலும் இருக்கிறது என்பதே எமது ஆதங்கம். மற்றும் படி முஸ்லிம்கள் ஹலால் உணவை உண்பது அவர்களது உரிமை அதை நாங்கள் நிராகரிக்கவில்லை.
கேள்வி: ஹலால் உணவை உண்பது முஸ்லிம்களின் உரிமையென்றால் அதனை நெறிப்படுத்த ஒரு அமைப்பு இருப்பது அவசியம் தானே? அதைத்தானே ஜம் இயத்துல் உலமா செய்கிறது? அப்படியானால் நீங்கள் அவர்களை எதிர்ப்பதாக முஸ்லிம்களின் உரிமையை மீறுவது போன்றல்லவா இது இருக்கிறது?
தேரர்: இல்லை, நீங்கள் தவறான தகவலை வெளியிடக்கூடாது. ஜம் இயத்துல் உலமா சபை 3000 பேரை வேலைக்கமர்த்தி ஹலால் எனும் ஒரு விடயத்தைப் புகுத்தி நாட்டில் இருக்கும் சமூகங்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்துகிறது. இந்த நாட்டின் சட்டங்கள் அனைவருக்கும் பொதுவானது, அப்படியிருக்க ஜம் இயத்துல் உலமா எப்படி ஹலால் உணவுகள் தான் சுத்தமானது என்று அறிவித்து அதனை சிங்கள மக்கள் மத்தியில் பலவந்தமாகப் புகுத்த முடியும்? ஒரு பேச்சுக்காகக் கேட்கிறேன், நீங்கள் பன்றி இறைச்சி உண்பதில்லை, ஆனால் அதை உண்ண விருப்பம் உள்ளவர்கள் இருப்பார்கள், அதே போன்று மாட்டிறைச்சி உண்ணும் முஸ்லிம் அல்லாதவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் சேர்ந்து எங்களுக்கு ஹலால் இல்லை எனும் சான்றிதழ் வேண்டும் என ஒரு அமைப்பை ஆரம்பித்தால் என்ன நடக்கும்? இந்துக்கள் எல்லோரும் சேர்ந்து மாட்டிறைச்சியை இந்த நாட்டில் தடை செய்ய வேண்டும் என்று கேட்டால் என்ன நடக்கும்? நாட்டிற்குள் இப்படி ஒவ்வொருவரும் தத்தமது சமய முறைகளுக்கேற்ப சட்டங்களைக் கொண்டுவர விட முடியுமா? சொல்லுங்கள் பார்க்கலாம்.
கேள்வி: நாட்டின் சட்டதிட்டங்களைப் பாதுகாக்க அரசு இருக்கிறது, இப்போது நீங்கள் நம்பும் இந்த விவகாரம் தொடர்பாக அரசிடம் முறையிட்டீர்களா? அதற்கு அவர்கள் என்ன பதில் தந்தார்கள்?
தேரர்: ஆம், நான் நேரடியாகவே இந்த விடயத்தினை ஜனாதிபதியிடம் தெரிவித்தேன், அதற்கு அவர் இதை ஜம் இயத்துல் உலமாவிடமும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறினார். நாங்களும் இதைப்பற்றி அவர்களிடம் எத்தனையோ தடவை பேச முனைந்து விட்டோம் ஆனால் அவர்கள் ஓடி ஒளிக்கிறார்கள் .அதற்கான காரணம் எமக்கும் தெரியவில்லை.
கேள்வி: அப்படியானால் இது அரசு சம்பந்தப்பட்ட விடயம் தானே? அரசு ஏன் இந்த விடயத்தைக் கையாளக்கூடாது? அதை ஏன் நீங்கள் கையிலெடுத்திருக்கிறீர்கள்?
தேரர்: நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம், அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகக் கூறுகிறது, இது குறித்து மேலதிக தகவல்களையும் ஆதாரங்களையும் நாங்கள் சேர்த்துக் கொடுக்கிறோம்.
கேள்வி: ஹலால் சான்றிதழை யாருக்கும் பலவந்தமாக ஜம் இயத்துல் கொடுக்கவில்லை, மாறாக நாடிவருவோருக்குத்தான் அது வழங்கப்படுவதாக ஜம் இயத்துல் உலமா தெளிவாகக் கூறுகிறதே?
தேரர்: இது சுத்தமான பொய்! நான் ஏற்கனவே கூறியது போன்று 3000 பேர் கொண்ட குழுவொன்று இதில் இயங்குகிறது, அவர்கள் ஒவ்வொரு நிறுவனத்துக்கும் சென்று ஹலாலின் மகத்துவம் என்று மார்க்கெட்டிங் (சந்தைப்படுத்தல்) செய்கிறார்கள், அவ்வாறுதான் எல்லா நிறுவனங்களும் இதில் மாட்டிக்கொள்கின்றன. சிங்கள மக்களை இப்படி மாட்டிக்கொள்ள இனியும் அனுமதிக்க முடியாது.
கேள்வி: முஸ்லிம்கள் ஹலால் பொருட்களை விரும்பி வாங்குவார்கள், மத்திய கிழக்கு போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் ஹலால் சான்றிதழ் தேவைப்படுகிறது. எனவே, நாடி வருவோருக்கு மாத்திரம் தான் ஹலால் சான்றிதழ் வழங்கப்படுகிறது என்று ஜம் இயத்துல் உலமா கூறுகிறதே?
தேரர்: இதுவெல்லாம் நம்பத்தகுந்த கதையல்ல, இந்த நாட்டில் இருக்கும் உணவுப் பண்டங்களுக்கு ஹலால் சான்றிதழ் கொடுக்க ஜம் இயத்துல் உலமா யார்? அவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?
கேள்வி: அதாவது உங்கள் கருத்துப்படி ஜம் இயத்துல் உலமா எந்தவித அரச அனுமதியுமில்லாமல் இதைச் செய்கிறதா?
தேரர்: அதைத்தானே நாங்கள் சொல்கிறோம், ஜம் இயத்துல் உலமா தன்னிச்சையாக இதைச் செய்கிறது, அதன் மூலம் சமூகங்களுக்குள் பிளவும் நாட்டில் ஒரு குறிப்பிட்ட மதத்தவருக்காக புதிய சட்டமுமாக இருப்பதை எவ்வாறு அனுமதிக்க முடியும்? முஸ்லிம்கள் எம்மோடு எப்போதும் சகோதரத்துவத்துடன் தான் வாழ்கிறார்கள் ஆனால் இந்த ஜம் இயத்துல் உலமா தான் அதைப் பிரிக்கிறது. எமக்கு முஸ்லிம்களது சமய வழிமுறைகளில் எந்தக் குரோதமும் இல்லை. அப்படித்தானே இவ்வளவு காலம் வாழ்ந்திருக்கிறோம். இப்போது திடீர் என முளைத்த ஜம் இயத்துல் உலமா எவ்வாறு இந்த நாட்டை ஒரு சமயத்துக்கு ஆதரவான சட்டங்களுக்கு அடிபணிய வைக்க முடியும்? அண்மைக்காலங்களில் ஜம் இயத்துல் உலமா பொருளாதார ரீதியாக வேகமாக முன்னேறியிருக்கிறது, அதற்கான பணம் எங்கிருந்து வந்தது? இது ஒரு சிங்கள பெளத்த நாடு, இந்த நாட்டில் சகல இனங்களும் வாழ்வதற்கு சமமான சட்டதிட்டங்கள் இருக்கிறதே தவிர ஒரு இனத்தின் தேவைக்காக நாட்டின் வளங்களை சுரண்ட அனுமதிக்க முடியாது.
கேள்வி: சரி, நேற்றைய பகிரங்க விவாதம் குறித்து நீங்கள் ஜம் இயத்துல் உலமாவுக்கு அறிவித்தீர்களா? அல்லது அவர்களை அழைத்திருந்தீர்களா?
தேரர்: ஜம் இயத்துல் உலமா சபை ஒளித்துப் பிடித்து விளையாடியதே தவிர ஒழுங்கான பதில் தரவில்லை. நேற்றைய தினம் நிகழ்ச்சி நடைபெற இருக்கும் வரை நாங்கள் முயன்றோம். நிகழ்ச்சியை நடத்திய சுகத் முடியாமல் போன கட்டத்தில் தான் வேறு மூவரை அணுகினார். அந்த மூவரையும் பலியாடுகளாகத்தான் அனுப்பியது ஜம் இயத்துல் உலமா.
கேள்வி: அவர்கள் மூவரையும் அனுப்பியது யார்? ஜம் இயத்துல் உலமாவா?
தேரர்: இல்லை, ஆனால் இப்போது பதில் சொல்கிறோம், அப்போது பதில் சொல்கிறோம் என்று காலத்தை இழுத்தடித்து விட்டு இறுதி வரை ஜம் இயத்துல் உலமா பதில் சொல்லாததால் சுகத் மூலம் தான் இவர்கள் அழைக்கப்பட்டார்கள். என்னைப் பொறுத்தவரை அவர்கள் வெறும் பலியாடுகள்.அவர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை. நாம் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லும் திறனோ தகவலோ அவர்களிடம் இருக்கவில்லை. ஜம் இயத்துல் உலமா திரை மறைவில் இருந்து வேடிக்கை பார்க்கிறது, ஆனால் அவர்களால் இந்த நாட்டில் சமூகங்களுக்கிடையில் பிளவு ஏற்படுகிறது, அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
கேள்வி: நல்லது, உங்கள் பேட்டிகள் மற்றும் அறிக்கைகளில் கூட நீங்கள் அடிக்கடி “சம்பிரதாய முஸ்லிம்கள்” என்று ஒரு பிரிவினர் பற்றிக் குறிப்பிடுகிறீர்கள் அவர்கள் யார்?
தேரர்: நாங்கள் சம்பிரதாய முஸ்லிம்கள் என்று குறிப்பிடுவது இந்த நாட்டில் சமத்துவத்துடன் காலகாலமாக வாழும் முஸ்லிம்களை ஆனால் ஜம் இயத்துல் உலமா இறக்குமதி செய்யும் வஹாபிஸமும், ஸலபிசமும் தான் அவர்களையும் எம்மிடமிருந்து பிரிக்கிறது.
கேள்வி: நல்லது, உங்களிடம் இறுதியாக ஒரு கேள்வி, இப்போது நாங்கள் விபரம் அறியும் நோக்கிலேயே உங்களைத் தொடர்பு கொண்டோம். எனினும், முஸ்லிம் மக்களுக்கு உங்களிடம் கேட்பதற்கு ஏராளமான கேள்விகள் இருக்கிறது. அவற்றை எமது வாசகர்களிடமிருந்து பெற்றுத்தந்தால் அவற்றுக்கு நீங்கள் பதிலளிப்பீர்களா?
தேரர்: நிச்சயமாக பதிலளிப்பேன், நீங்கள் கேள்விகளைக் கொண்டு வாருங்கள், அதற்கான பதில்களை எனது குரலிலேயே ஒலிபரப்புங்கள் அதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. முஸ்லிம் மக்கள் எம் சகோதரர்களே அவர்களை நாங்கள் பிழையாக நினைக்கவில்லை அவர்களுக்கு எங்களிடம் கேள்வியிருந்தால் அதற்கான பதிலை எந்நேரத்திலும் தரத் தயாராக இருக்கிறோம்.
நேர்காணலின் போது தேரர் நிதானமாகக் காணப்பட்டாலும் ஒரு சில இடங்களில் உணர்ச்சிவசப்பட்டதுடன் ஜம் இயத்துல் உலமா சார்ந்த இடங்களில் ஜம் இயத்துல் உலமாவை சாடும் போது “சங்கடத்துக்கரிய” வார்த்தைகளையும் பிரயோகித்ததனால் அதன் ஒலி வடிவம் இங்கு தவிர்க்கப்படுகிறது. எனினும், எமது கேள்விகளுக்கு பதில் தர அவர் இணங்கியிருப்பதனால் வாசகர்கள் உங்கள் கேள்விகளை ஆங்கிலத்திலோ, தமிழிலோ, சிங்களத்திலோ இங்கே பின்னூட்டம் மூலம் அல்லது எமது பிரதான மின்னஞ்சலுக்கு வேண்டுமானாலும் அனுப்பலாம்.
பொதுபல சேன அமைப்பினுள் மும்மொழிகளிலும் தேர்ச்சிபெற்றவர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் ஞாயிறன்று தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் இது குறித்த கலந்துரையாடல் ஒன்றிலும் அவர்கள் பங்கெடுக்கவிருப்பதாகவும் அறிய முடிகிறது.
எவ்வாறாயினும், பொதுபல சேனாவின் கையில் நாட்டின் சட்டத்தைக் கையளிக்க சமாதானத்தை விரும்பும் எந்த இலங்கையரும் விரும்பப் போவதில்லை. பொதுபல சேனா ஒரு அமைப்புத்தானே ஒழிய அது நாட்டின் காவலர்களில்லையே என்று நாம் சுட்டிக்காட்டிய போது நாம் பெளத்த மதத்தின் காவலர்கள் என்று அவர்கள் கூறுகிறார்கள், அதே நேரம் அவர்களின் முழு நேர வேலையே ஜம் இயத்துல் உலமாவை எதிர்ப்பதாகவும் இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இது இலங்கையின் முஸ்லிம் சமூகத்தைப் பெருமளவு பாதிக்கிறது ! முஸ்லிம்களின் மனது புண்பட்டிருக்கிறது ! அதைப் பார்த்து அரசும் மெளனமாக இருக்கிறது எனும் உண்மையையும் மறுக்க முடியாது.
நன்றி - சோனகர் டொட் கொம் http://www.sonakar.com/2013/02/
No comments:
Post a Comment