Sunday 3 February 2013

பௌத்த கடும்போக்காளர்களின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள் : முஸ்லிம் கவுன்சில்

ஜெனீவாவில் அடுத்தமாதம் இலங்கை தொடர்பான பிரேரணை கொண்டுவரப்படவுள்ள நிலையில் நாட்டில் பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் கலவரத்தை தோற்றுவித்து அதன்மூலம் இலங்கைக்கு சர்வதேச ரீதியில் அபகீர்த்தியை ஏற்படுத்த சில வெளிநாட்டு சக்திகள் முயற்சி செய்வதாக சிறீலங்கா முஸ்லிம் கவுன்சில் குற்றம்சாட்டியுள்ளது.

முஸ்லிம்களுக்கு எதிராக அண்மைக்காலமாக பௌத்த தீவிரப் போக்குடைய அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் பிரசாரங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று காலை கொழும்பு ரண்டமுத்து ஹோட்டலில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே சிறீ லங்கா முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் என்.எம்.அமீன் இவ்வாறு தெரிவித்தார்.


தொடர்ந்தும் அவர் இங்கு கருத்து வெளியிடுகையில்இலங்கைக்கு எதிராக சர்வதேச ரீதியில் அவப் பெயரை ஏற்படுத்தி அதன் மூலம் இலாபம் தேட முனையும் தீய சக்திகள் இன்று பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் மோதலை ஏற்படுத்தி வேடிக்கை பார்க்க முயற்சிக்கின்றன. இதற்கு நாம்ஒருபோதும் இடமளிக்கக் கூடாது.இந்த நாட்டுக்கு சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னரும் சுதந்திரம் கிடைத்த பின்னரும் முஸ்லிம்கள் மிகவும் விசுவாசமாகவே வாழ்ந்து வந்துள்ளார்கள். பிரிவினையை ஏற்படுத்தவோ முரண்பாடுகளைத் தோற்றுவிக்கவோ முஸ்லிம்கள் ஒருபோதும் முயற்சி செய்ததில்லை.


இவ்வாறான நிலையில் இன்று முஸ்லிம்கள் இந்த நாட்டைச் சூறையாட வந்தவர்கள் போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தி பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்த ஒரு குழுவினர் முயற்சி செய்து வருகின்றனர். இது தொடர்பில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.முஸ்லிம்கள் இந்த நாட்டில் ஜிஹாத் போராட்டத்தை நடத்த முனைவதாக பொய்யான ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். நாம் ஜிஹாத் செய்ய வேண்டிய எந்தத் தேவையும் இந்த நாட்டில் கிடையாது. இந்த நாட்டு முஸ்லிம்கள் தமக்குக் கிடைக்க வேண்டிய சகல உரிமைகள் மற்றும் சலுகைகளைப் பெற்றிருக்கையில் ஏன் ஜிஹாத் செய்ய வேண்டும்? என்றும் அவர் இதன்போது கேள்வியெழுப்பினார்.


இவ் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி கருத்து வெளியிடுகையில்முஸ்லிம்களாகிய நாம் இலங்கையர்களாக இருப்பதையிட்டு பெருமைப்படுகிறோம். இந்த நாட்டில் வாழும் சகல இன மக்களோடும் ஒற்றுமையாகவும் ஐக்கியமாகவும் வாழ்ந்து வருகிறோம். அவ்வாறே தொடர்ந்தும் வாழ விரும்புகிறோம்.ஆனால் இன்று சில வெளிநாட்டு சக்திகள் ஒரு சிறு குழுவினருக்கு நிதியுதவியளித்து அவர்கள் மூலமாக பிரச்சினைகளை தோற்றுவிக்க முனைகின்றனர். போர் முடிவுக்கு வந்த பின் நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்ல அரசாங்கம் முயன்று கொண்டிருக்கையில் மீண்டும் நாட்டை படுகுழியில் தள்ள வேண்டும் என சிலர் விரும்புகின்றனர். இதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கக் கூடாது என்றார்.


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.எம்.சுஹைர் இங்கு கருத்து வெ ளியிடுகையில் இந்த நாட்டில் மீண்டும் ஒரு ஜூலைக் கலவரம் ஏற்பட நாம் இடமளிக்கக் கூடாது. ஜூலைக் கலவரத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து நாம் நன்கு அறிந்திருக்கிறோம். மீண்டும் அவ்வாறானதொரு நிலைமையைத் தோற்றுவிக்கவே இவ்வாறான சக்திகள் முனைகின்றன. இதற்கு சமூகத் தலைமைகளும் அரசியல்வாதிகளும் ஊடகங்களும் இடமளிக்கக் கூடாது என்றார்.




நன்றி- நல்ல நண்பன்@att.net

No comments:

Post a Comment

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...