கல்வி! இஸ்லாம் உயரிய இடம் வழங்கிய உன்னதமான சொத்து!
கல்வியின் மகத்துவம் குறித்து சமூகத்தில் அடிக்கடி விவாதிக்கப்பட்டாலும் இலங்கையின் தேசிய மட்டத்தில் மட்டுமல்ல சர்வதேச மட்டத்திலும் கூட அதன் நிலை பின்னடைந்தே இருக்கின்றது.
“முஸ்லிம்கள் ஓர் வர்த்தகச் சமூகம் அவர்களுக்கு கல்வியில் அக்கறைக் கிடையாது”என்ற கருத்து திட்டமிட்டு பரப்பப்பட்டும் வருகிறது. இந்தக் கருத்து கல்வியில் கரிசனையில்லாத எமது செயற்பாடுகளினால் ஊர்ஜிதமாகியும் வருகிறது.
எமது பாடசாலைகளில் நிலவும் வளப்பற்றாக்குறை, பெற்றோரின் கவனயீனம், புத்திஜீவிகளின் பாராமுகம் போன்றவை எதிர்கால சமூகத்தின் முன்னேற்றத்தை வெகுவாக பாதித்திருக்கிறது.
கல்வியில் ஊக்கத்தை ஏற்படுத்துவதற்கும், அதன் தரத்தை உயர்த்துவதற்கும் சகல பாடசாலைகளையும் இணைத்த ஒரு நிகழ்ச்சி நிரல் அவசரமாக தேவைப்படுகிறது.
பள்ளிவாசலும் பாடசாலையும் சமூகத்தின் இரு கண்களாக வர்ணிக்கப்பட்டாலும் பள்ளிவாசலைப் பார்க்கும் விதமாக பாடசாலைகள் நோக்கப்படுவதில்லை.
வணக்க வழிபாடுகளுக்காக பளிங்கு மாளிகைகளாக பள்ளிவாசல்களைக் கட்டிப்போடும் நமது சமூகம் கல்வி ஒரு இபாதத் என்பதை மறந்தே செயற்படுகிறது.
பாடசாலைகள் முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளன. கல்வியின் மேம்பாடு தொடர்பான கருத்தரங்குகள், மாநாடுகள், கலந்துரையாடல்கள், சொற்பொழிவுகள் எல்லாம் சம்பிரதாயமாக மாறியிருக்கிறது. உப்புசப்பில்லாமல், உணர்வில்லாமல் வெறுமனே கூடிக்கலைகின்ற ஒன்றாகவே கல்வி தொடர்பான கூட்டங்களை குறிப்பிடவேண்டியிருக்கிறது.
சமகாலத்தில் முஸ்லிம் பாடசாலைகளை உயிர்ப்பித்து சமூகத்தின் அறிவுக் கண்ணை திறந்து வைப்பதற்கு உருப்படியான எந்த ஒன்றையும் யாரும் இதுவரை செய்யவில்லை.