Saturday, 13 September 2025

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலும் ரிழா மா்சூக் என்பவருக்கிருந்த நேரடி தொடர்பும்!


 ஈஸ்டர் தாக்குதலை நடாத்திய குற்றவாளிகளுடன் ரிழா மா்சூக் என்பவருக்கிருந்த நேரடி தொடர்பு பற்றி அறிய வேண்டுமென்றால், சிறுவா்கள், பெண்கள் உட்பட 269 அப்பாவி மக்கள் படுகொலையான, ஈஸ்டா் ஞாயிறு தாக்குதலை விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு வெளியிட்டுள்ள உத்தியோகபூா்வ அறிக்கையை கட்டாயம் வாசிக்க வேண்டும்.

ஈஸ்டா் ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரிகள் சிலர் குற்றங்களிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். ஈஸ்டர் தாக்குதலை திரைமறைவில் இருந்து செயற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள குறித்த “புலனாய்வு” அமைப்புகளோடு இணைந்து செயற்பட்டவா்களே இவ்வாறு சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப வைக்கப்பட்டு வெளியே விடப்பட்டுள்ளனா்.
அப்போதைய சட்டமா அதிபா் தப்புல டி லிவேரா (Dappula de Livera) ஈஸ்டா் ஞாயிறு தாக்குதல் ஒரு சதிக்கோட்பாடு (conspiracy theory) என்று ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். இலங்கையின் சட்டமாஅதிபராக கடமையாற்றிய அவா், ஓய்வு பெறும் போது இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

ஈஸ்டா் ஞாயிறு தாக்குதலின் தயவால் ஆட்சி பீடமேறி நன்மையடைந்த கடந்தகால ஆட்சியாளர்கள், சட்டத்துறைக்கு வழங்கியிருந்த அழுத்தத்தின் பிரதிபலிப்பை தப்புல டி லிவேராவின் இந்த வார்த்தைகள் வெளிப்படுத்தின.
சஹ்ரானோடு மிக நெருங்கி செயற்பட்ட, முக்கிய சூத்திரதாரிகள் சிலா் சகல குற்றங்களிலும் இருந்து விடுவிக்கப்பட்டனா். சட்டமா அதிபாின் வேண்டுகோளுக்கிணங்க இவா்கள் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக பாராளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது. இந்த விவகாரம் பாராளுமன்றத்தில் அம்பலமானதன் பிறகு பல அழுத்தங்களும், நெருக்குதல்களும் என் மீதும் பிரயோகிக்கப்பட்டது. இது தொடா்பான ஒரு பதிவை நான் ஏற்கனவே எழுதியும் உள்ளேன்.
இனி ரிழா மா்சூக் பற்றிய விடயத்திற்கு வருவோம்.

2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ம் திகதி, வெடிகுண்டு ஒன்றை தயாரித்துக் கொண்டிருந்த போது, அது தவறுதலாக வெடித்ததன் காரணமாக படு காயமடைந்த சஹ்ரானின் சகோதரன் றிழ்வானை, கொழும்பு தேசிய மருத்துவனையில் பாதுகாப்பான முறையில் அனுமதித்து சிகிச்சை வழங்குவதற்குரிய வியூகத்தை சவுதியிலிருந்து வகுத்தவா் தான் இந்த ரிழா மா்சூக்.

ரிழாவின் நண்பனான கொழும்பு தேசிய மருத்துவமனையில் கடமையாற்றிய ஷப்ராஸ் என்ற மருத்துவரை பயன்படுத்தியே றிழ்வானுக்கான சிகிச்சைகள் ஏற்பாடாகின. பயங்கர காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட றிழ்வான் மீது எவ்வித பொலிஸ் விசாரணைகளும் மேற்கொள்ளப்படாமல், மிகவும் கவனமாக காய்கள் நகர்த்தப்பட்ட விவகாரம், ஆணைக்குழு விசாரணைகளின் போது வெளிச்சத்திற்கு வந்தது.

ஈஸ்டா் ஞாயிறு தாக்குதலுக்கு முன்னா் மாவனல்லையில் புத்தர் சிலையை உடைத்து சிங்கள, முஸ்லிம் கலவரம் ஒன்றை உருவாக்க திட்டமிட்டிருந்த, மாவனல்லை இப்றாஹிம் மௌலவியின் பிள்ளைகளான சாதிக்கும், ஷாஹிதும் காயமடைந்த றிழ்வானை கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கின்ற பொறுப்பை ஏற்றிருந்தனா்.

கொழும்பு தேசிய மருத்துவமனையில் றிழ்வானை அனுமதிக்கும் போது, றிழ்வானின் உண்மையான பெயரை மறைத்து விட்டு, “எம். ஐ. ஷாஹித்” என்ற பெயாில், சாதிக்கே றிழ்வானை சிகிச்சைக்காக அனுமதித்திருக்கிறார்.

றிழ்வான் குணமாகி வீடு சென்றதன் பின்னா், 2018ம் வருடம் டிஸம்பா் மாதத்தில் ஒரு நாள் ஸஹ்ரானும், றிழ்வானும், இந்த ரிழா மா்சூக்கும் இன்னுமொரு இனம் தொியாத நபரும் (இவா் குறித்த புலனாய்வு பிாிவின் அங்கத்தவராக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது) தெஹிவளையில் எபநெஸா் பிளேஸில் உள்ள டொக்டா் ஷப்ராஸின் வீட்டில் அவரை சந்தித்துள்ளனர்.

ரிழா மா்சூக், சஹ்ரானை டொக்டா் ஷப்ராஸுக்கு அறிமுகம் செய்து வைத்ததாக ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு டொக்டா் ஷப்ராஸால் வழங்கப்பட்ட சாட்சியத்தில் நிரூபணமாகிறது.

றிழ்வானுக்கு சிகிச்சை வழங்கியதற்காக டொக்டா் ஷப்ராஸுக்கு சஹ்ரான் நன்றி கூறியதோடு, டொக்டா் ஷப்ராஸுக்கு இரண்டரை லட்சம் (250000.00) ரூபாய்களை சன்மானமாக வழங்கியதாகவும் ஈஸ்டா் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஈஸ்டா் ஞாயிறு தாக்குதல் என்ற கொடிய நிகழ்வு இடம்பெற்று ஆறு வருடங்கள் கடந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. என்றாலும் முக்கிய சூத்திரதாரிகள் சிலா் வெளியே வந்துள்ளனா். இது ஈஸ்டா் ஞாயிறு தாக்குதலின் கொலைக்களத்தை சந்தித்த மக்களுக்கு இழைக்கும் மிகப்பெறும் அநீதியாகும்.

ஆட்சி மாற்றம் ஒன்றை இலக்காக வைத்து, இந்த சதிக்கோட்பாட்டை அரங்கேற்றப்படுவதற்கு பின்னணியில் நின்று உதவி புரிந்த பல சூத்திரதாரிகள், சட்டத்தின் இடைவெளிகளாலும், கடந்த கால ஆட்சியாளா்களின் அரவணைப்பாலும், அனுசரணையினாலும் அவ்வப்போது நிரபராதிகள் என்றும் சிலபோது பிணையிலும் வெளியே வந்துள்ளனா்.

2018ம் ஆண்டில் ஈஸ்டர் தாக்குதலுக்கான கள நிலவரத்தை உருவாக்குவதற்காகவும், சஹ்ரானின் கைதை தடுக்கும் நோக்கில் கோத்தாபய மற்றும் மைத்திரிபால சிாிசேன கொலை நாடகத்தை அரங்கேற்றிய நாமல் குமார என்பவன் கூட குற்றமற்றவராக விடுதலை செய்யப்பட்டுள்ளான். எனவே வெளியே வந்தவன் எல்லாம் நிரபராதி என்றும் அப்பாவி என்றும் நினைத்துக் கொண்டிருப்பது மிகப் பொிய தவறாகும். ஈஸ்டா் தாக்குதல் எமது சமூகத்தின் மீது தொடுத்த பயங்கரமான அவஸ்த்தைகளை மறந்த ஒருவரால் மட்டுமே இதனை இலகுவான விசயமாக பார்க்க முடியும்.

சஹ்ரானோடு அல்லது கொலையாளிகளோடு ஒருநாள் தொலைபேசியில் கதைத்த குற்றதிற்காக, சஹ்ரானின் உபதேசங்களை தனது கைப்பேசியில் வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டவா்கள் சிறைகளில் வாடும் போது, சஹ்ரானுக்கும் இந்த நாசகார வேலைக்கும் உறுதுணையாக இருந்தவா்கள் எப்படி வெளியே வந்தார்கள்? அப்படி வெளியே வந்துள்ள சூத்திரதாரிகளை நல்லவா்கள், தூயவா்கள் என்று எங்களால் எப்படிபார்க்க முடியும்?

2025 மே மாதம் 30ம் திகதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளா் துய்யகொன்தா அவா்களால் கையொப்பமிடப்பட்டு வெளியிடப்பட்ட பயங்கரவாதத்தோடு தொடர்புடைய 217 நபர்களில் 79 வது நபராக ரிழா மா்சூக் என்பவரின் பெயரும் இவ்வாறு குறிக்கப்பட்டுள்ளது. 👇

🔴IN/CA/2025/79 Name: Muhammadu Marsuk Muhammadu Rila a.k.a Abu Liba Title: NA Designation: NA DL/ PP. No: N 7148870 NIC: 198520703713 DOB: 25.07.1985 Citizenship: NA Address (Sri Lanka): (i) No. 522/B, Samsam Road, Maradamune 03 (ii) 220, Library Road, Maradamune 03 Address (Foreign): NA 
Other Information: #Terrorism_related activities_and_funding_for_terrorism.

இது ஐக்கிய நாடுகள் சபையின் 4(7) விதிமுறைகளின் கீழ் இல. 45/1968 சட்டத்தின் பிரகாரம் இலங்கை அரசால் அறிவிக்கப்பட்டுள்ள மிக முக்கியமான அதி விசேட வர்த்தமானி அறிவித்தலாகும்.
இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை இணையத்தில் PDF வடிவில் பெற்றுக்கொள்ளலாம்.👇

🔴#The_gazette of the Democratic Socialist Republic of Sri Lanka Extraordinary THE UNITED NATIONS ACT, NO. 45 OF 1968 Amendment to the list of designated persons, groups and entities under regulation 4(7) of the United Nations Regulations No. 1 of 2012 2438/47 - Friday, May 30, 2025)
ஈஸ்டா் தாக்குதலின் படுகொலைகளுக்கு நேரடியாக ஒத்தாசை புரிந்தவன் வெளியே வந்து சுதந்திரமாக சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறான். உயிா்களை பறி கொடுத்தோா் நீதி வேண்டி ஆறு வருடங்களாக அழுது, போராடிக் கொண்டிருக்கின்றனா். 

கடந்த ஆட்சிக்காலத்தில் ஈஸ்டா் தாக்குதலோடு நேரடி தொடர்பு வைத்திருந்த ஒரு சிலர் வெளியே விடுவிக்கப்பட்டுள்ளார்கள். அன்று முதல் இந்த விடுவிப்புக்கு எதிராக நான் போராடி வருகிறேன்.
ரிழா மா்சூக் ஒரு மனிதப் புனிதா் அல்ல, ஈஸ்டா் ஞாயிறு படுகொலைகளின் பின்னா் சவுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். ரிழா மா்சூக்கோடு சவுதியில் ஒரே அறையில் பதுங்கியிருந்த வவுணதீவு பொலிஸ் காவலரண் கொலையில் சம்பந்தப்பட்ட மில்ஹான் என்பவரும் அப்போது கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டனா்.

2018ம் ஆண்டு மைத்தரிபால சிாிசேன, ரணிலின் ஆட்சியைக் கவிழ்த்து மஹிந்தவின் தலைமையில் ஆட்சியை அமைத்த காலப்பிரிவில், வவுணதீவு பொலிஸ் காவலரணில் இருந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கோரமாக கொலை செய்யப்பட்டனா்.
இந்த கொலையின் பழியை புலிகள் மீது போட்டு, சஹ்ரானின் கொலைகார கும்பலை பாதுகாப்பதற்காக கோத்தாபயவிற்கு சார்பாக செயற்பட்ட ”புலனாய்வுப்பிரிவு” செய்த தில்லுமுல்லுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. வவுணதீவு கொலைச் சம்பவம் தொடா்பாக தவறான தகவலை வழங்கி, பாதுகாப்புத்துறையை திசை திருப்பிய குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவா் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளாா்.

பொலிஸாரைக் குரூரமாக கொன்று அவா்களின் ஆயுதங்களை அபகரித்துச் சென்ற அந்த தாக்குதலுக்கு தலைமை தாங்கியவன் தான் இந்த மில்ஹான். இவன் இப்போது சிறையில் இருக்கிறான். இந்த மில்ஹானுக்கு ரிழா மா்சூக் சவுதியில் பதுங்குவதற்கு தனது அறையில் இடம் கொடுத்திருந்தார். சவுதியிலிருந்து ரிழாவும், மில்ஹானும் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டனா்.

இத்தகைய படுபாதக செயலில் ஈடுபட்ட ஒருவா் வெளியே வந்து விட்டால் அவரை ஒரு தியாகி போல் போற்றும் ஒரு சிலரின் மட்டரகமான மன நிலையை என்னவென்பது? அந்த குண்டுத்தாக்குதலில் உங்களது பிள்ளையோ, உங்களது சகோதரரோ, உங்கள் மனைவியோ சிக்கியிருந்தால் இந்த பாவிகளுக்கு பூமாலை அணிந்து அழகு பார்ப்பீா்களா?

ஆட்சிமாற்றம் என்ற ஒரு அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக, ஈஸ்டா் ஞாயிறு தாக்குதல் என்ற காட்டுமிராண்டித் தனத்தை அரங்கேற்றி அப்பாவி சிறுவா்கள் பெண்கள் உட்பட 269 பேரை துடிக்கத் துடிக்க கொலை செய்த, 500க்கும் அதிகமானவா்களை கடுமையாக காயப்படுத்தி முடமாக்குவதற்கு துணைபோன படுபாதகா்களை நீதியை, நோ்மையை நேசிக்கும் யாராவது மன்னிப்பார்களா?

ஈஸ்டா் தாக்குதலில் சம்பந்தப்பட்ட கொலைகார படுபாவிகள் அத்தனை பேரும் நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். அதற்காக நாம் தொடா்ந்து போராட வேண்டும்.


(பாதுகாப்பு அமைச்சு 2025 மே மாதம் 30ம் திகதி வெளியிட்ட அதி விசேட வா்த்தமானியில் ரிழா மா்சூக் பற்றிய அறிவிப்பு படமாக இந்த பதிவில் இணைக்கப்பட்டுள்ளது)

அஸீஸ் நிஸாருத்தீன்

Thursday, 12 June 2025

இஸ்ரேல் களமிறக்கியபுதிய போராளி!

 


குருதியிலும், கண்ணீரிலும் கரைந்துக் கொண்டிருக்கும் காஸா, ஒரு புதிய சவாலை சந்தித்திருக்கிறது.


ஹமாஸின் அதிகாரத்திற்கு சவால் விடும் நோக்கில், பொப்பியுலர் ஃபோர்ஸஸ் Popular Forces என்ற புதிய கூலிப்படை ஒன்றை இஸ்ரேலிய புலனாய்வு அமைப்பான மொசாட் காஸாவில் களமிறக்கி இருக்கிறது.

இந்த பொப்பியுலர் ஃபோர்ஸஸின் தலைவர் யாஸிர் அபூ ஷபாப்!


சீஐஏ மற்றும் மொசாட்டுக்கு மிகவும் பிரியமான “அபூ” என்ற அடைமொழியை வைத்தே இந்த அநியாயக்காரனை இஸ்ரேலிய ஊடகங்கள் போற்றிப் புகழ்ந்து வருகின்றன.


யாஸிர் அபூ ஷபாப் என்பவன், ஒரு முன்னாள் போதைப்பொருள் கடத்தல்காரன். அதுமட்டுமல்லாமல், பல கிரிமினல் வேலைகளுக்கு சொந்தக்காரன். பலமுறை ஹமாஸினால் தண்டிக்கப்பட்டவன்.

பசியால் வாடிக்கொண்டிருக்கும், காஸா மக்களுக்கு கொண்டு செல்லப்படும் நிவாரணப் பொருட்களை இடைமறித்து, அபகரித்துச் செல்லும் “கொந்தராத்து“ வேலை இவனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இன்று, காஸாவின் தெற்கு ரஃபா எல்லையின் கட்டுப்பாடு, இஸ்ரேலிய காட்டுமிராண்டி இராணுவத்தின் உதவியுடன் இவனது கைகளுக்கு சென்றிருக்கிறது.


கடந்த 2024 மே மாதத்தில், யாஸிர் அபூ ஷபாபின்  கும்பல்  தனக்கு பொப்பியுலர் ஃபோஸஸ்  என்ற பெயரை சூடிக்கொண்டது.  ஹமாஸ் காசாவை தவறாக நிர்வகித்து  வருவதாகக் குற்றம் சாட்டிக் கொண்டு களத்தில் குதித்தது. குறுகிய காலத்தில் இஸ்ரேல் இராணுவத்துடனான  இந்த கும்பலுக்குள்ள தொடர்பு வெளிச்சத்திற்கு வந்தது.  காசா மக்கள் இந்த கும்பல்   இஸ்ரேலின் நாடகத்தை அரங்கேற்றும்  துரோகிகள் மற்றும் திருடர்கள் என்று குறிப்பிட்டனர். அவனது சொந்த குடும்பத்தினர் கூட அவனைத் துரோகி என்று வெளிப்படையாக தூற்றினர்..


யாஸிர் அபூ ஷபாபும் அவனது 300 பேர் கொண்ட கூலிப்படை கும்பலும், காஸாவுக்கு செல்லும் உணவு விநியோகத் திட்டத்தை இடைமறித்து தடுக்கும் வேலையை கச்சிதமாக செய்து வருகின்றனர்.

பட்டினியால் வாடும் மக்களுக்குச் செல்ல வேண்டிய உதவிப்பொருட்களை கொள்ளையிட்டு அதிக விலைக்கு இந்த கூலிப்படை விற்பனை செய்தும் வருகிறது.


பட்டினியால் அல்லல் பட்டுக்கொண்டிருந்த மக்கள் இந்த உதவிப் பொருட்களை பெற ஆர்ப்பரித்துக் கொண்டு வந்த போது, இந்த கூலிப்படை கண்மூடித்தனமாக பலரை சுட்டுக் கொன்றுள்ளது.

காஸா மக்களுக்கு உதவிப்பொருட்கள் செல்லக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருக்கும் இருக்கும் அமெரிக்காவும், இஸ்ரேலும், பொப்பியுலர் ஃபோர்ஸஸ் என்ற இந்த கூலிப்படைக்கு பூரண அனுசரணையை வழங்கி வருகின்றன.


காஸாவிற்கான உதவிப் பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களை இந்த கூலிப்படை கொள்ளையடித்து வருகிறது.

உதவிப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகன சங்கத்தின் தலைவர் நஹிதார் என்பவா் கூறுகையில், "யாஸிர் அபூ ஷபாபின் அடியாட்கள் டிரக்குகளைத் தடுத்து, டிரைவர்களை மிரட்டுகின்றனர். எதிர்ப்பு காட்டினால், வாகனத்தின் டயர்களை குண்டு வீசி சேதப்படுத்துகின்றனர் " என்று குற்றம் சாட்டுகிறார்.

ஐ.நா.வின் ஆவணங்களும், யாஸிர் அபூ ஷபாபை "மனிதாபிமான உதவிகளை முறையாக கொள்ளையடிக்கும் கும்பலின் தலைவர்" என்று வர்ணித்திருப்பதாக அரபு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


"ஹமாஸை பலவீனப்படுத்த, காஸாவில் உருவாகும் மாற்று சக்திகளுக்கு நாங்கள் எங்கள் ஆதரவுகளை வழங்குவோம்!" என்று இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாஹு பகிரங்கமாக இந்த கூலிப்படை தொடர்பாக குறிப்பிட்டுள்ள செய்திகளும் வெளிவந்துள்ளன.


ஜூன் 5 ஆம் திகதி, இஸ்ரேல் எதிர்க்கட்சித் தலைவரும்,  வலதுசாரி இஸ்ரேல் கட்சியின் தலைவருமான அவிக்டோர் லிபர்மன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவை காசாவில் குற்றம் செய்யும் கும்பல்களுக்கு ஆயுதங்கள் வழங்கியதாகக் குற்றம் சாட்டினார். அடுத்த நாள், இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த நெதன்யாஹு  இந்த நடவடிக்கை இஸ்ரேலிய வீரர்களின் உயிர்களைக் காப்பாற்ற ஒரு வழியாகும் என்று கூறினார்.


"காஸாவில் எங்களுக்கு வேறு ஒரு அதிகாரம் தேவை, அங்கு வேறு ஒரு நிர்வாகம் தேவை. ஆனால் ஒன்று மட்டும் சொல்ல முடியும்  ஹமாஸைத் தோற்கடிப்பதே எமது முதல் பணியாக இருக்க வேண்டும்," என்று இஸ்ரேல் பிரதமர்  நெதன்யாஹு கூறியுள்ளார்.


2005 இல் காசாவிலிருந்து இஸ்ரேல் வெளியேறிய பிறகு ஹமாஸுக்கு எதிராக மக்களைத் திருப்புவதற்கான முயற்சியில் இஸ்ரேல் தொடர்ந்து செயற்பட்டு வருகிறது.   இந்த உத்தி இஸ்ரேலுக்கு புதிதல்ல. பாலஸ்தீனர்களைப் பிளவுபடுத்தி, ஒருவருக்கொருவர் எதிராக நிறுத்துவதில் இஸ்ரேல் கடந்த காலங்களில் வெற்றி பெற்று வந்தும் உள்ளது.


அது மட்டுமல்லாமல், இஸ்ரேலும் அமெரிக்காவும் மத்திய கிழக்கில் உணர்வுகள் மழுங்கிய ஒரு அரபு சமூகத்தை உருவாக்கி வெற்றியும் கண்டிருக்கின்றன. முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் மறக்கடிக்கப்பட்டு ஆடல், பாடல், கூத்து, கும்மாளங்களில் அந்த சமூகம்  காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறது.


காஸாவில் வரலாறு காணாத அட்டகாசங்களை அரங்கேற்றி, ஐம்பதாயிரம் பேருக்கு அதிகமானோரை கொலை செய்து விட்டு, அந்த மக்களை பட்டினியால் கொன்று குவித்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவும், இஸ்ரேலும் உதவிப்பொருட்கள் விநியோகத்தில் அரங்கேற்றும் இந்த அரசியல் விளையாட்டு மற்றுமொரு மிகப் பெரிய மனித அவலத்தை அரங்கேற்ற போகிறது என்பதையே எடுத்துக் காட்டுகிறது.

 

அஸீஸ் நிஸாருத்தீன் 


Saturday, 24 May 2025

உணா்வுகள் மரத்துப் போன முஸ்லிம் உம்மத்..!

 

கேட்டானே ஒரு கேள்வி!

நேற்று வெள்ளிக்கிழமை, கொழும்பு ஐ.நா. சபை அலுவலகத்தின் முன்னால் இது நிகழ்ந்தது.

பலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இனஅழிப்புப் போருக்கு எதிராக சிங்கள சகோதரர்களின் 'சேஞ்ச்' அமைப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.

ஜே.வி.பி.யில் இருந்து கருத்து வேறுபாடுகளால் பிரிந்த சமத்துவ முன்னிலைக் கட்சியின் ஒரு கிளையாக இயங்கும் இந்த அமைப்பில், சகோதர சிங்கள இனத்தைச் சேர்ந்த பலா் ஆண், பெண் பாகுபாடின்றி உற்சாகமாகக் கலந்துகொண்டிருந்தார்கள்.

ஆர்ப்பாட்டம் முடிந்து அனைவரும் கலைந்து செல்லும் வேளையில், அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் எதிராக மிகவும் உணர்வுபூர்வமாக கோஷமிட்டுக் கொண்டிருந்த ஒரு இளைஞனை அணுகி உரையாடினேன்.

எங்கள் இளைஞர்கள் தொழில், படிப்பு, பொழுதுபோக்கு என்று நேரத்தைக் கழித்துக் கொண்டிருக்கும் இந்த சூழலில், இந்த இளைஞன் காஸா மக்கள் மீது கொண்டிருந்த பரிவு என்னை ஆழமாக கவர்ந்தது.

அந்த இளைஞன் அந்த 'சேஞ்ச்' அமைப்பைச் சேர்ந்தவர் என்பதை அவரது உரையாடலில் இருந்து புாிந்து கொண்டேன்.
உண்மையைச் சொல்லவேண்டுமானால், இந்த ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே கலந்துகொண்டோம்.

அதுவும் வழக்கமாக இத்தகைய நிகழ்வுகளில் பங்கேற்கும் அதே “முஸல்மான்” முகங்கள்தான்.
அந்த இளைஞனிடம் புவியரசியல் பற்றி ஆழமான பாா்வை இருந்தது எனக்கு புாிந்தது.

"மத்திய கிழக்கின் பெட்ரோல் வளங்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அரசியலுக்காகவே அமெரிக்கா அரபு மண்ணில் இஸ்ரேலை உருவாக்கியது."

"அமொிக்கா இன்று வரை அதன் கொடுமைகளை ஆதரித்து வருகிறது. அது இழைக்கும் மனித உாிமை மீறல்களுக்கு முட்டுக் கொடுத்து வருகிறது. அப்படியிருந்தும், அரபு நாடுகள் வெளிப்படையாக அமெரிக்காவை ஆதரித்து வருகின்றன."

"அமொிக்கா, இஸ்ரேல், அரபு நாடுகள் ஒற்றுமையாகவே மத்திய கிழக்கில் அரசியல் காய்களை நகா்த்தி வருகின்றன."
"இந்த கொடூரமான முக்கோண நட்புஅரசியலை முஸ்லிம்கள் ஏன் புரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள்? "

முஸ்லிம்களின் உணர்வுகள் ஏன் மரத்துப்போய் இருக்கின்றன?
"பலஸ்தீனில் காஸாவில் நடக்கும் கொடுமைகளுக்காக இனமத பேதமின்றி உலகம் முழுவதும் அலையலையாக மக்கள் வீதிகளுக்கு இறங்கி போராடுவதை பார்த்தும் முஸ்லிம்கள் ஏன் அமைதியாக இருக்கிறாா்கள்.? " என்று கேட்டான்.

அந்த இளைஞனின் நேர்மையான கேள்வி என்னை சிலிா்க்க வைத்தது. ஒரு சிங்கள இளைஞன் காட்டும் அக்கறையும் அரசியல் விழிப்புணர்வும், நம் சமுதாயத்தின் அமைதியான மௌனத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது வேதனையாக இருந்தது.

அவனது கேள்வி இன்னும் என் காதுகளில் அலைகளாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.

நாம் எங்கே நின்றுகொண்டிருக்கிறோம்?
நமது பொறுப்பு என்ன?

நமது உணா்வுகள் மரத்துப் போவதற்கு காரணம் என்ன?




Sunday, 4 December 2022

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!


பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் சிறிதம்ம தேரர் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டி கடந்த 11ம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் முன்பாக சத்தியாக்கிரக போராட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

வழமை போல ரணில் ராஜபக்ஷவின் காக்கிச் சட்டை சண்டியர் படையணி தடிகள், கண்ணீர் புகைக்குண்டுகள், நீர்த்தாரை பிரயோக வாகனங்கள் என அனைத்து ஏற்பாடுகளுடன் வந்து, கொழும்பு பௌத்தாலோக மாவத்தை பகுதியை ஒரு கலவர பூமியாக மாற்றும் எண்ணத்தில் காத்து நின்றது.
அதுமட்டுமல்லாமல், சத்தியாக்கிரக போராட்டத்தை நிறுத்தி விட்டு கலைந்து செல்லுமாறு அடிக்கடி அங்கு வந்த பொலிஸ் உயரதிகாரிகள் அச்சுறுத்தல் விட்டுக் கொண்டே இருந்தனர். பொலிஸாரின் இந்த அச்சுறுத்தல்களை நாங்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்பதை அவா்கள் நன்றாகவே புரிந்து கொண்டனா்.
அந்தப் பகுதியில், 200க்கும் அதிகமான பொலிஸாரை வீதியின் இருமருங்கிலும் இறக்கி, ஒருவித பதற்ற நிலையை ரணில் ராஜபக்ஷவின் காக்கிச் சட்டை கூலிப்பட்டாளம் காட்டிக் கொண்டிருந்தது.
ஆா்ப்பாட்ம், போராட்டம் போன்றவை இந்நாட்டு மக்களுக்கு அரசியலமைப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ள ஓா் அடிப்படை உரிமை. இந்த அடிப்படை உாிமையான கருத்து மற்றும் பேச்சு சுதந்திரத்திற்கு இடையூறு விளைவிப்பதற்கு எந்த கொம்பனுக்கும் அதிகாரம் கிடையாது.
மக்கள் ஆணையின்றி அதிகாரத்தைக் கைப்பற்றி அடக்குமுறையை பிரயோகித்து ஆட்சி செய்வதற்கு எவனுக்கும் உரிமை கிடையாது. இந்த செய்தியை உலகறிய செய்ய வேண்டும் என்ற தேவை எங்களுக்கு இருக்கிறது.
அன்றைய தினம், பகல் 11 மணியளவில் அங்கு வந்த பொலிஸ் உயரதிகாரிகள், சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த எங்களை இன்னும் அரை மணி நேரத்தில் கலைந்து செல்லா விட்டால் எல்லோரையும் கைது செய்வோம் என்று அச்சுறுத்தல் விட்டதை நாங்கள் அலட்டிக் கொள்ளவில்லை.
“பேராட்டக்காரா்களை நசுக்குவதற்கு மட்டுமா இந்த பொலிஸ் சட்டத்தைப் (පොලිස් ආඤ පනත) பயன்படுத்துவீா்கள்? இந்நாட்டை அழிவிற்கு தள்ளி வரும் போதைப் பொருள் வியாபாரிகளை கட்டுப்படுத்துவதற்கு இந்நாட்டு சட்டத்தை நீங்கள் ஏன் பயன்படுத்துவதில்லை?” என்று நான் கடுமையான தொனியில் அந்த பொலிஸ் அதிகாரிகளிடம் கேட்டேன்.
திக்குமுக்காடிப் போன ஒரு பொலிஸ் அதிகாரி, சில வினாடிகள் வாயடைத்து நின்றாா். “ போதைப் பொருள் வியாபாரிகள் தொடா்பான தகவல் இருந்தால் தாருங்கள் கைது செய்து காட்டுகிறோம்” என்று வீராப்புடன் கூறினாா்.
”நீங்களாவது கைது செய்வதாவது. மாறாக, போதைப்பொருள் வியாபாரிகள் தொடா்பாக தகவல் வழங்கியவரை காட்டிக் கொடுத்து, தகவல் கொடுத்தவருக்குத் தண்டனை வழங்குவீா்கள்.” என்று நான் சொன்னேன்.
எஸ்எஸ்பி. மற்றும் ஏ.எஸ்பி தரத்திலுள்ள அதிகாரிகளும் ஏனைய பொலிஸ் உத்தியோகத்தா்களும் என்னை முறைத்துக் கொண்டே அந்த இடத்தை விட்டு நழுவிச் சென்று, லக்சல விற்பனை நிலைய வளாகத்திற்குள் வட்டமாக நின்று சதியாலோசனையில் மூழ்கியிருந்தனா்.
குற்றங்களை தடுப்பதை விட, ரணில் ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக எழும் போராட்டங்களை ஒடுக்குவதையே இன்று பொலிஸாா் தமது பெரும் கடமையாக கொண்டிருக்கின்றனா்.
நாட்டில் இளைஞா் சமுதாயத்தை அழித்து வரும், இந்த போதைப்பொருள் வியாபாரிகளை இல்லாதொழிப்பதற்கு பொலிஸார் ஒரு போதும் முயற்சி செய்வதில்லை. போராட்டங்களை தடுப்பதற்கு அணியணியாக வந்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடாத்தும் பொலிஸாா், ஒருபோதும் போதைப் பொருள் வியாபாரத்தைத் தடுப்பதற்கு பொலிஸ் பட்டாளங்கள் நகரங்களில் இறங்கி அணி வகுத்து தேடுதல் நடாத்தியதை நாங்கள் கண்டிருக்கிறோமா?.
போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு இருக்கிறது. இதன்காரணமாக, போதைப்பொருள் வியாபாரிகளுக்கு எதிராக மக்கள் பேசவோ, எதிா்வினையாற்றவோ அச்சப்படுகின்றனர்.
ஒரு நாளைக்கு 7 முதல் 11வரையிலான இளைஞா்கள் புதிதாக போதைப் பொருள் பழக்கத்திறகு உள்ளாகின்றனா் என்ற தகவல் அண்மையில் வெளிவந்தது. பொலிஸாா் இந்த போதைப் பொருள் வியாபாரிகளுக்கு பக்க பலமாக இருந்து துணை புரிந்து வருவதோடு, பணத்திற்காகவும், பதவி உயா்வுகளுக்காகவும் அரசியல்வாதிகளுக்கு அடிமைச் சேவகம் புரிந்து வருகின்றனா்.
இலங்கையில் மிகவும் ஊழல் நிறைந்த அரச நிறுவனம் பொலிஸ் திணைக்களமாகும் என டிரான்ஸ்பெரன்ஸி இன்டர்நேஷனல் (Transparency International) நிறுவனம் நடாத்திய ஒரு கருத்துக் கணிப்பு கூறுகிறது.
(14.11.2022)

Thursday, 21 July 2022

சீனாவின் கடல்சார் ஆக்கிரமிப்பு அரசியல்!


இந்தியப் பெருங்கடலிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தனது செல்வாக்கையும் ஆதிக்கத்தையும்  நிலைநிறுத்துவதற்காக சீனா ஒரு மூலோபாய சுற்றிவளைப்பை செய்து வருகிறது.

மூலோபாய சுற்றிவளைப்பு என்பது முக்கிய முனைகளிலிருந்து  எதிரியை  தாக்குவதற்கு  பயன்படுத்தப்படும் ஒரு இராணுவ சொல்லாடலாகும். இந்திய பெருங்கடலில் இடம்பெற்று வரும் சீனாவின் இத்தகைய சுற்றிவளைப்பு பற்றி நாங்கள் அவ்வளவாக அலட்டிக்கொள்வதில்லை. இதன் பொருளாதார, அரசியல் விளைவுகள் பற்றி நாங்கள் சிந்திக்காமலேயே இருந்து விடுகிறோம்.


பிராந்திய அரசியலின் அதிகார போட்டியாக உருவாகியிருக்கும் கடலாதிக்கத்தை  சீனா மிகவும் திட்டமிட்டு எமது கடல் பிராந்தியத்தில் செய்து வருகிறது.


இந்தியப் பெருங்கடலில், குறிப்பாக இந்தியாவைச் சுற்றி ஓா் ஆதிக்க  வலையை விாித்து வருவதாக இந்தியா அவ்வப்போது  குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்து சமுத்திர கடல் பிராந்தியத்தில்  உருவாகி வரும் சீன ஆதிக்கம்  தொடா்பாக இந்தியா மிகவும் விழிப்போடு இருப்பதாகவே அதன் எதிா்வினையாற்றல்  மூலம் அறியக் கூடியதாக இருக்கிறது.


சீனாவின் இந்த மூலோபாய சுற்றி வளைப்பு சீன, இந்திய  நாடுகளுக்கிடையில்  அரசியல் ரீதியிலான   அமைதியின்மையை  தோற்றுவித்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் பிராந்திய ரீதியில்  ஓா் அரசியல் முறுகலை இயங்கு நிலையில் வைத்திருக்கவும்  இது காரணமாகியிருக்கிறது.


தனது ஆதிக்கத்தை  கடல் ரீதியாக சுற்றிவளைக்கும் இந்த செயற்திட்டத்திற்கு சீனா “முத்துக்களின் சரம்”  (String of Pearls)  என்ற ஓா் அழகிய நாமத்தை சூட்டியிருக்கிறது. ஆக்கிரமிப்புக்கு இப்படியொரு அழகிய பெயரா என்று நீங்கள் யோசிக்கலாம்.


ஆம், சீனாவின் இந்த கடல்சாா் ஆக்கிரமிப்பு மிகவும் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட  பாகிஸ்தானின் குவாதா் துறைமுகம் கட்டமைப்பு சீனாவின் நுண் அரசியலை வெளிச்சம் போட்டுக் காட்டக் கூடியது. 


2015 ஆம் ஆண்டு, பாகிஸ்தானின் குவாதர் துறைமுகத்தை மேம்படுத்த சீனா ஆரம்பித்தது. இதன்  மூலம் கடல் வழியாக  வணிக நடவடிக்கைகளை மேம்படுத்துதல் என்ற போா்வையில்  இந்துமா சமுத்திரத்தில் தனது மூலோபாய திட்டத்தை சீனா கட்டமைக்கத் தொடங்கியது.


பாகிஸ்தானைத் தொடா்ந்து சீனாவின் கடல்சாா் சுற்றிவளைக்கும் செயற்பாடு இலங்கை, பங்ளாதேஷ், மியன்மார், ஜிபூட்டி, ஈரான் ஆகிய நாடுகளுக்கும் விரிவு படுத்தப்பட்டது.   

2020ம் ஆண்டு ஈரானில் உள்ள கிஷ் தீவை குத்தகைக்கு எடுப்பதற்கு ஈரானுடன் சீனா ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


கிஷ் தீவு பாரசீக வளைகுடாவின் வடக்கில் ஈரானிய கடற்கரையில் அமைந்துள்ளது, இந்தத் தீவு  15.45 கிமீ அகலமும் 1,359 கிமீ நீளமும் கொண்டது.


கிஷ் தீவை 25 ஆண்டுகளுக்கு  சீனாவிடம் ஒப்படைப்பது குறித்து கருத்துப் பறிமாற்றம்  நடந்து வருவதாக ஹசன் நவ்ரூசி என்ற நாடாளுமன்ற உறுப்பினா் தெரிவித்ததாக தகவல் வெளியாகி இருந்தது.


இந்திய பெருங்கடலில் கேந்திர முக்கியத்துவமிக்க இடமாகவும், கடற் போக்குவரத்திற்கு முக்கிய தளமாகவும்  கருதப்படும் இலங்கையின் தென் மாகாணத்திலுள்ள ஹம்பாந்தோட்டையில் துறைமுகம் ஒன்றை  நிர்மாணிக்க சீனா ஆா்வம் கொண்டது.  மாகம்புர ராபக்ஷ துறைமுகம் (Magam Ruhunupura Mahinda Rajapaksa Port)  2010ம் ஆண்டு சீன முதலீட்டால் பூா்த்தி செய்யப்பட்டது.

2017ம் ஆண்டு 99 வருட குத்தகைக்கு சீனாவுக்கே வழங்கப்பட்டது.


பங்களாதேஷ் நாட்டின்  சிட்டகொங் துறைமுக (Chittagong Port)  மேம்பாட்டு திட்டத்திற்கும், மியன்மார் நாட்டின் கியாக்பியு துறைமுகத்தின்  (Kyaukpyu port) மேம்பாட்டுத் திட்டத்திற்கும்  சீனா கை வைத்தது.


இந்தியப் பெருங்கடலுக்கு அருகிலுள்ள நாடுகளின் கடல்சாா் முனைகளை தனது மூலோபாய திட்டத்திற்குள் உள்வாங்கி  இந்தியப் பெருங்கடலில் தனது செல்வாக்கையும், ஆதிக்கத்தையும்  அதிகரிக்க  சீனா மேற்கொண்ட அரசியல் காய் நகா்த்தலே  இந்த  முத்துக்களின் சரம் (String of Pearls)  என்ற கடல்சாா் ஆதிக்க செயற்திட்டம்.


கடல் வழியாக சுற்றிவளைக்கும் சீனாவின் இந்த ஆதிக்க அரசியல் அதன் பிரதான கடற்கரையிலிருந்து ஆரம்பித்து  சூடான் துறைமுகம் வரை நீண்டு செல்கிறது.


கடற்பரப்பை தனது பூரண கட்டுப்பாட்டின்  கீழ் கொண்டு வருவதை இலக்காகக் கொண்ட சீனாவின் இந்த முத்துக்களின் சரம் (String of Pearls) என்ற கடலாதிக்க செயற்திட்டம்  மற்றும் அதன் வணிகப் பிரசன்னம் இந்தியாவிற்கும் உலகின் மற்ற நாடுகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக இந்தியா உட்பட ஜி 7 நாடுகள் அங்கலாய்த்து வருகின்றன.


சீன  ஜனாதிபதி சீ ஜின்பிங் 2013ம் ஆண்டு ஒரு பட்டி ஒரு பாதை (Belt and Road Initiative)  என்ற திட்டத்தை மும்மொழிந்தாா். இந்தத் திட்டம்  ஆசியா, ஆப்பிரிக்கா, மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை  ஐரோப்பாவுடன் வா்த்தக ரீதியாக  இணைப்பதை நோக்கமாகக் கொண்டதாக அறிவிக்கப்பட்டது.


இந்த நோக்கத்திற்காக, பொருளாதார பட்டுப்பாதையின் பட்டி, கடல்சார் பட்டுப்பாதை போன்ற திட்டங்களை அவர் தொடங்கியதாக கூறப்பட்டது.


பல நாடுகளில் டிரில்லியன் கணக்கான டொலா்களை அந்தந்த நாடுகளின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக சீனா கொட்டி வருவதுடன், துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் புகையிரத பாதை மேம்பாட்டுத் திட்டங்கள்  என்று பல  திட்டங்களை நிா்மாணித்தும் வருகிறது. 


சீனாவின் இந்த கடன் நிதிக்காக அதி கூடிய வட்டியையும் செலுத்த இந்த நாடுகள் நிா்ப்பந்திக்கப் படுகின்றன. அதி கூடிய வட்டிக்கு கடனை கொடுத்து தனது அரசியல் நிகழ்ச்சி நிரலை சீனா கச்சிதமாக நிறைவேற்றி வருகிறது.


இந்தியப் பெருங்கடலில் தனது புவிசார் அரசியலையும், வர்த்தகத்தையும் பாதுகாத்துக்கொண்டு,  கடல் வழிகளில் தனது செல்வாக்கை நிலை நிறுத்தும் கைங்கரியத்தை சீனா தீவிரமாக செய்து வருகிறது.


எண்ணெய் மற்றும் எரிசக்தி வர்த்தகத்தை நிலைநிறுத்துவதற்காக  கடல் வழிகளை பாதுகாக்கும் நோக்கில் புவியியல் ரீதியாக  கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த  நாடுகளின்  கடல் முனைகளிலூடாக  அரசியல், பொருளாதார, இராணுவ, துறைமுக மேம்பாட்டு திட்டங்களில் முதலீடு செய்துள்ள  சீனா அந்த நாடுகளை தனது பூரண கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வியூகத்தை செயற்படுத்தி வருகிறது.


தனது நலன்களைப் பாதுகாப்பதற்காக ஜிபூட்டி, பாகிஸ்தான்,  பங்களாதேஷ், இலங்கை, ஈரான் மற்றும் பல  நாடுகளில் அதிக முதலீடுகளை சீனா செய்துள்ளது. 


கடந்த காலங்களில் இந்தியப் பெருங்கடல், பாரசீக வளைகுடா, மத்திய தரைக் கடல், வங்காள விரிகுடா  மற்றும் தென்சீனக் கடல் ஆகிய பகுதிகளை அடைய சீனா தனது தந்திரமான செயற்பாடுகளை அரங்கேற்றியது, 


இந்த பிராந்தியத்தில் குறைந்த வளர்ச்சியடைந்த, புவியியல்  ரீதியாக மூலோபாய முக்கியத்துவம் பெற்ற  நாடுகளை தோ்ந்தெடுத்து  பெருமளவு முதலீடு செய்து வருகிறது. 


ஒரு பட்டி ஒரு பாதை (Belt and Road Initiative) என்ற திட்டத்தின் கீழ் தனது முதலாவது  வெளிநாட்டு இராணுவ தளத்தை ஜிபூட்டியில் சீனா நிறுவியது.  இந்த திட்டத்திற்கு   'தளபாட உதவி வசதி' என்று பெயரிட்டது. சீனாவால் நிர்மாணிக்கப்பட்ட ஜிபூட்டி துறைமுகம், மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் அதன் நலன்களைப் பாதுகாப்பதற்கு அமைக்கப்பட்ட முக்கிய திட்டமாகும்.  


வடமேற்கு சீனாவில் உள்ள கஷ்கர் என்ற நகரை பாகிஸ்தானில் உள்ள குவாதாா் என்ற  துறைமுகத்துடன்  இணைப்பதற்காக  சீனா 46 பில்லியன் அமெரிக்க டொலர்களை  முதலீடு செய்துள்ளது.  


இந்த துறைமுகம் அரபிக்கடலில் ஈரான் நாட்டு எல்லையில் அமைந்துள்ளது. இந்த திட்டம் சீனா பாகிஸ்தான் பொருளாதார தாழ்வாரம் (China Pakistan Economic Corridor) என்ற திட்டத்தின் மூலம் கட்டமைக்கப்பட்டது.


ஆப்பிரிக்கா மற்றும் பாரசீக வளைகுடாவில் இருந்து எண்ணெய்யை இறக்குமதி செய்து அவற்றை பாகிஸ்தானிலேயே சுத்திகரிப்பதற்கு வழி செய்யும் வகையில்  குவாதாரில் ஓா் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையையும் சீனா நிறுவியுள்ளது.  இதற்காக 2500 கிமீ நீளமான பாதையொன்றையும் சீனா புதிதாக நிர்மாணித்துள்ளது.


வங்காள விரிகுடா கடற்பரப்பில்  ஹைட்ரோகார்பன்கள் அதிகம் இருப்பதாக நம்பப்படுகிறது. தெற்காசியா, அந்தமான் கடல் மற்றும் மலாக்கா ஜலசந்தி ஆகியவை தென் சீனக் கடலை தொட்டு நிற்கின்றன. வங்காள விரிகுடா  பிராந்தியம் ஒரு சிறப்பு பொருளாதார  மூலோபாய முக்கியத்துவத்தைப் பெற்றுள்ள பகுதியாகும்.


வங்காள விரிகுடா  இந்தியப் பெருங்கடலின் வடக்கே 2,173,000 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. பிராந்தியத்தில் உள்ள பல ஆறுகள் வங்காள விரிகுடாவில் வந்து சோ்கின்றன. சமகால பிராந்திய அரசியலின் பலப் பரீட்சைக்கு  வங்காள விரிகுடா  ஒரு முக்கிய பங்கை செலுத்துகிறது.


வங்காள விரிகுடாவை  சுற்றியுள்ள பகுதிகளைில்  தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தும்  நோக்கில்  பங்களாதேசத்திற்கு சீனா  அதிக முதலீடுகளை அள்ளி இறைத்து வருகிறது.


வங்காள விரிகுடாவில் சீனா அதிக ஆர்வத்தை கொண்டிருப்பதற்குக் காரணம்,  எண்ணெய், எரி சக்தி விநியோகம் மற்றும் அதன் முதலீடுகளைப் பாதுகாப்பதற்கான ஒரு நம்பகமான வழியாக அது இருப்பதேயாகும்.


இலங்கையின்  புவியியல் ரீதியிலான அமைவிடம் காரணமாக இலங்கையின் மீது சீனா  மிகவும் அக்கறை கொண்டுள்ளது.   இந்தியப் பெருங்கடலின் மூலோபாய மையத்தில் இலங்கை  அமைந்துள்ளது. பௌதீக  ரீதியாக கடல் போக்குவரத்தில்  சிறந்த இருப்பிடத்தைக் அது கொண்டுள்ளது.


இலங்கையின் துறைமுகங்களில் முதலீடு செய்வது சீனாவுக்கு அதன் அரசியல், வா்த்தக நலன்களை மேம்படுத்துவதற்கு சிறந்த வசதியை அளித்திருக்கிறது. ஆப்பிரிக்காவிலிருந்து  பெறும் எரி சக்தி மீள் விநியோகத்திற்கான மைய தளமாக இலங்கையை சீனா கருதுகிறது.


சீனாவிற்கு  எரிசக்தி விநியோகத்திற்கான நுழைவாயிலாக இருக்கும் மற்றொரு நாடு மியன்மார்.


இந்தியப் பெருங்கடலை இலக்கு வைத்து சீனா  மியன்மாரில் முதலீடு செய்ய ஆரம்பித்தது. சீனா 1980களில் இருந்து தனது பொருளாதார மற்றும் பிராந்திய மூலோபாய நலன்களுக்காக  மியன்மாரை  பயன்படுத்தி வருகிறது.


2007 ஆம் ஆண்டு சீன தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் (Chinese National Development and Reform Commission) மியன்மாரில் ஆழ்கடல் மூலமாக மத்திய கிழக்கை இணைக்கும் எண்ணெய் குழாய் இணைப்பு  ஒப்பந்தத்திற்கு கைச்சாத்திட்டது.


2009ல் மியன்மார் வழியாக சீனாவின் யுனான் மாகாணத்திற்கு எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய்களை அமைக்கத் தொடங்கியது. இது எண்ணெய் மற்றும் எரிவாயுவை சீனாவுக்கு இறக்குமதி செய்வதற்கான நான்காவது வழியாக  அமைந்தது.


“முத்துக்களின்  சரம்” (String of Pearls)  என்ற பெயரில் வடிவமைக்கப்பட்ட சீனாவின் கடல்சாா் ஆதிக்க  சுற்றிவளைப்புக்கு பல நாடுகள் பலியானது மட்டுமல்லாமல்  எடுத்த கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் பல நாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தமது பெறுமதியான கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சொத்துக்களை சீனாவுக்கு தாரைவார்த்துக் கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.


2004 ஆம் ஆண்டில் சீன இராணுவத்தின் ஓா் அறிக்கையில்  "ஆசியாவில் எரிசக்தி எதிர்காலம்" என்ற தலைப்பிலான  ஒரு அறிக்கையில் முதன்முறையாக “முத்துக்களின்  சரம்” (String of Pearls) என்ற சொல்லாடல் பயன்படுத்தப்பட்டது.


சீனாவின் எரிசக்தி நலன்களைப் பாதுகாப்பதற்காக, மத்திய கிழக்கிலிருந்து தென் சீனக் கடல் வரையிலான கடல் பாதைகளுடன் தனது உறவுகளை பேணிக்கொள்ளும் வகையில், அதன் பாதுகாப்பு நோக்கங்களை நிறைவேற்றும் செயற்பாடே,  முத்துக்களின் சரம் என்ற திட்டம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டு, செயற்படுத்தப்பட்டு  இரண்டு தசாப்தங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த திட்டங்களை உள்வாங்கிய பல நாடுகள் மீள முடியாத  கடனில் மூழ்கடிக்கப்பட்டு பொருளாதார நெருக்கடியிலும் அரசியல் கொந்தளிப்புகளிலும் சி்க்கி திக்குமுக்காடிக் கொண்டிருக்கின்றன.

இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இதற்கு சிறந்த எடுத்துக் காட்டுகளாகும். பல  நாடுகள் வீழ்ந்துக் கொண்டிருக்கும் நிலையில்  சீனாவோ வல்லரசுக் கனவில் மேலும் மேலும் வளர்ந்துக் கொண்டிருக்கிறது.


"முத்துக்களின் சரம்"  திட்டத்தை நிறுவுவதன் மூலம் இந்தியப் பெருங்கடலைச் சுற்றி  சீனா ஒரு மூலோபாய வலைபின்னலை  உருவாக்கி வருகிறது.


ஆனால், இந்தியப் பெருங்கடல், பெரும் வல்லரசுகளின்  பூகோள அரசியல் நகா்வுகளை தீா்மானிக்கின்ற  மையப்புள்ளியாக மாறி  வருகிறது.  


இந்த நிலையில் பொருளாதார உதவி என்ற பெயரில் பல நாடுகளை கடனில் மூழ்கடித்து அந்த நாடுகளின் முக்கியத்துவமான சொத்துகளை சூறையாடி, இந்தியப் பெருங்கடலைச் சுற்றி  இராணுவ மற்றும் வணிகத் தளங்களை உருவாக்கி,  அரசியல் காய் நகா்த்தும்  சீனாவால் தொடா்ந்தும் இந்தியப் பெருங்கடலில் தனது ஆதிக்கத்தை தக்கவைத்துக் கொள்ள முடியுமா?


சீனாவின் ஆக்கிரமிப்பு அரசியலில் பகடைக் காய்களாக பாவிக்கப்பட்டு, கடன் பொறி ராஜதந்திரத்தில் சிக்கிய நாடுகளை உலக நாடுகள் மீட்டெடுக்குமா?  சீனாவின் இந்துமா சமுத்திர ஆதிக்க விளையாட்டில் அமொிக்கா மற்றும் இந்தியாவின் எதிா்வினையாற்றல் எப்படி இருக்கும்? 

பொறுத்திருந்து தான் பாா்க்க வேண்டும்.

அஸீஸ் நிஸாருத்தீன்

ரங்க திசாநாயக்கவை கண்டு நடுங்கும் எதிர்க்கட்சிகள்

  "பாண் ஒன்றைத் திருடினாலும், 'மிக்' விமானத்திலிருந்து திருடினாலும் இரண்டும் ஒரே திருட்டுதான்." இது வெறும் வார்த்தைகளாக எ...