Saturday, 6 April 2013

வஹாபிய தூய்மைவாதமும் உலமா சபை எதிர்கொள்ளும் சவால்களும்




சமயத் தூய்மைவாதம், தீவிரவாதம், எளிமை ஆகிய அம்சங்களே வஹாபியத்தின் அடிக்கட்டுமானங்களாகக் கருதப்படுகின்றன. வஹாபியம் சமய உண்மைகளை நேர் பொருளிலேயே விளக்குகின்றது. அக்கொள்கை விளங்குவதற்கும் அதன் பரவுகைக்கும் அது எளிதாக அமைந்தது. இஸ்லாம் எளிமையான மார்க்கம் என்பதை இப்பின்புலத்திலேயே அது விளக்கியது. சமய உண்மைகளுக்கு தமது நோக்கில் விளக்கமளிப்பதற்கும் சிலவற்றை சமயத்திற்கு எதிரானவை என்று நிராகரிப்பதற்கும் எளிமைக் கொள்கை அவர்களுக்கு சாதகமாக அமைந்தது. இது பிற்காலத்தில் முஸ்லிம்களுக்கு மத்தியிலும் அவர்களுக்கு வெளியிலும் ஓர் உளவியல் யுத்தமாக மாறியது.


சமயத்தை நேருக்கு நேராகவும் எளிமையாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற வஹாபிகளின் இறுக்கமான கோரிக்கை செமித்திய மதங்களின் பண்பாடுகளின் பின்புலத்திலிருந்தே நாம் நோக்க வேண்டும். எல்லா உண்மைகளையும் அர்த்தங்களையும் எளிமையாகக் காண்பதில் வஹாபிகள் பிடிவாதமாக இருந்தனர். அதனால் இஸ்லாமிய புனிதப் பிரதிகளின் தர்க்கவியல், தத்துவம், உருவகம், மொழி அழகியல், குறியீடு போன்றவற்றால் வஹாபிகள் சினமூட்டப்பட்டனர். ‘தூய இஸ்லாத்தின் பக்கம் திரும்புங்கள்’ என்பதே வஹாபிகளின் சர்வதேச அழைப்பாகும். ஆனாலும் வஹாபியம் வேறுபல கூறுகளையும் சமாச்சாரங்களையும் தன்னகத்தை கொண்டுள்ளது என்பதையும் நாம் மறந்துவிடலாகாது. அதில் அரபுத் தேசியவாதமும் ஒன்றாகும். அரபுத் தேசங்களில் பரவிய துருக்கிய, பாரசீக ஆதிக்கத்தையும் அவர்களின் சமயக் கொள்கைகளையும் மறுவாசிப்புக்களையும் முற்றாக எதிர்த்தது. இவற்றுக்கு எதிராக அரபு மண்ணில் எழுந்த அரபிஸத்திற்கு வஹாபியம் உறுதுணையாக இருந்தது. அரபு மண்ணிலிருந்து துருக்கியை வெளியேற்றியதில் வஹாபியத்திற்கு நேரடியான பங்கிருந்தது.

வஹாபிய எழுச்சி ஐக்கிய அரபுத் தேசத்தையும் அரபு மைய அதிகாரத்தையும் வலுப்படுத்தியுள்ளது. மத்தியகிழக்கில் நிலைத்து வாழ்ந்தோரும் அசையும் நாடோடிச் சமூகங்களுக்குமிடையில் எழுந்த முரண்பாடுகளையும் மோதுகைகளையும் அழித்தொழிப்பதில் வஹாபிய இயக்கம் வெற்றிபெற்றுள்ளது. வஹாபியத்தின் எழுச்சி ஒரு தற்செயல் நிகழ்வோ, சமயத்தை மட்டும் இலக்காக்க் கொண்டதோ அல்ல. ஏறத்தாழ 300 ஆண்டுகள் நஜ்த் பிராந்தியத்தில் ஏற்பட்டுவந்த சமூக, அரசியல் மோதுகைகளின் விளைவுகளிலேயே இதன் தோற்றமும் வளர்ச்சியும் இடம்பெறுகின்றது. அசையும் நாடோடிச் சமூகங்களுக்கு எதிராக நிலைத்து வாழ்வோர் அணிதிரண்டு போராடியதே வஹாபிய வரலாறாகும். பொருளாதார நெருக்கடி, விவசாயப் பிரச்சினைகள், சமயப் பண்பாட்டு நெருக்கடிகள் யாவும் வஹாபியப் போராட்டத்தில் கலந்திருந்தன.

நிலைத்து வாழ்வோரின் நகரமயமாக்கமும் நகர்ப்புற நாகரிக அபிலாஷைகளும் வஹாபிய சமயத் தூய்மைவாதத்துடன் முரண்பட்டு நின்றன. உலமாக்களின் தீவிரப் போக்கும் அசையும் நாடோடிகளின் கிராமிய மனப்பாங்கும் வஹாபியத்துக்குள் உள்முரண்பாடுகளைத் தோற்றுவித்தன. வஹாபியத் தூய்மைவாதம் பிற்போக்கிற்கு இட்டுச் செல்லும் இறுக்கமான சமயக்கட்டுப்பாடுள்ள வாழ்க்கைக்கு இஸ்லாத்தைப் போதிக்க தயாராக இருந்தது. நவீன தொழில்நுட்ப முன்னேற்றகர யுகத்தில் பின்னோக்கிச் செல்லும் உத்தியின் மூலமே சமயத்தில் உறுதிப்பாட்டைத் தோற்றுவிக்கலாம் என்பதை வஹாபியம் உறுதியாக நம்பியது.

ஆனால் இதற்கு எதிரான நிலைப்பாடு வஹாபியத்தின் உட்கட்டமைப்பிலிருந்தே உருவாகியது. நிலைத்து வாழ்வோரின் நாகரிக உணர்வு வஹாபியத்தில் வெற்றிகண்டதை 1929 இல் அப்துல் அஸீஸின் படைகள் வெற்றிபெற்றதில் அவதானிக்கலாம். சமூகக் கட்டமைப்பிலும் கருத்தியலிலும் மாற்றங்களை ஏற்படுத்தாது புதிய நாகரிக உற்பத்திகளை நுகர்வதற்கு வஹாபிய சஊதி அரசு தயாராக இருந்தது. இதற்கு வஹாபிய சமயத் தூய்மைவாதிகள் எதிர்ப்புக்காட்டினர். ஆகாயவிமானத்தையும் தெலைபேசியையும் இவர்கள் பித்அத் பட்டியலில் இணைத்த அபத்தங்கள் அங்கே நிகழ்ந்தன. பித்அத்துக்கு அவர்கள் வழங்கிய விளக்கங்கள் அதன் எல்லைகளையும் தாண்டிச் சென்று சமூக நடவடிக்கைகளிலும் மானிட முன்னேற்றங்களிலும் நவீனத்துவ நோக்குகளிலும் தலையிட்டது. வஹாபியத்துக்குள்ளே தோன்றிய முன்னேற்றத்திற்கெதிரான சக்திகளுடன் வஹாபியமே போராட வேண்டியிருந்தது.
விஞ்ஞானத் தொழில்நுட்பக் கல்வியையும் அது உருவாக்கிக் கொடுக்கும் கருவிகளையும் வஹாபிய தீவிரவாதிகள் கடுமையாக எதிர்த்தனர். இசைக்கும் அழகியலுக்கும் எதிராக அவர்கள் போர்க்கொடி தூக்கினார்கள். பல நூற்றாண்டுகள் பின்னோக்கிச் செல்லும் அரபு நாடோடித்துவ பிற்போக்கு யுகத்திற்கேற்ற கோட்பாடாக இஸ்லாத்தை அவர்கள் உருவகித்துக் காட்டினர். கவினுறு கலைகள், விஞ்ஞானம், தொழில்நுட்பம், மெய்யியல், சமூகவியல், விளிம்புநிலை மக்களுக்கான இடம் உட்பட பல்வேறு துறைகளையும் கொண்ட இஸ்லாத்தின் பரந்த நாகரிக மரபுகள் ஒதுக்கப்படுவதையும் ஓரங்கட்டப்படுவதையும் வஹாபிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

சமாதிகளையும் கபுறுகளையும் சுவடே தெரியாமல் அழித்தொழிப்பதில் வஹாபிகள் கட்டற்ற தீவிரவாதத்தை வெளிப்படுத்தினர். பதினாலு நூற்றாண்டுகால இஸ்லாத்தின் பண்பாடுகளையும் நாகரிக எச்சங்களையும் பிரதிபலிக்கக்கூடிய ஒரு சிலவற்றையாவது விட்டுவைக்க வேண்டும் என்பதற்கு அவர்கள் இணங்க மறுத்தனர். 1800 களின் ஆரம்பத்தில் நபிகளின் சமாதி மண்டபத்தை உடைப்பதற்கு அவர்கள் முடிவெடுத்த போது அதற்கெதிராக உலக முஸ்லிம்கள் எதிர்ப்புக்காட்டினர். 1920 களில் மீண்டும் உடைப்பதற்கு முயற்சித்த போது இந்தியாவின் கிலாபத் இயக்கம் அதனைக் கடுமையாகக் கண்டித்தது. 1950 களில் இந்திய இஸ்லாமிய அறிஞர் அபுல் ஹஸன் அலி நத்வி, இஸ்லாமிய மரபுச் சின்னங்களின் வரலாற்று முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசினார்.

சமாதிகளிலும் கபுறுகளிலும் நடாத்தப்பட்ட அனாச்சாரங்களையும் மூட நம்பிக்கைகளையும் கட்டுப்படுத்துவதிலும் இல்லாதொழிப்பதிலும் வஹாபிகள் உண்மையில் ஒரு முற்போக்கான பங்கை ஆற்றினர். போலி அவுலியா வழிபாட்டினால் வளர்ந்த மௌட்டீகம் இஸ்லாத்தினை எவ்விதத்திலும் பிரதிபலிக்கவில்லை. மத்ஹபுகளுக்கு முற்றிலும் கட்டுப்பட்டிருந்த முஸ்லிம் உலகை அவர்கள் விடுதலை செய்தனர். கண்மூடிப் பின்பற்றுவதை கைவிடுமாறு அழைப்பு விடுத்தனர். ஒரு முஸ்லிம் எந்தவொரு விடயத்தைப் பேசினாலும் ஆதாரத்தோடு பேசவேண்டும் என்பதை வலியுறுத்தினர். இஜ்திஹாதுக்கு தனிநபர் சுதந்திர சமயத்தீர்ப்புக்கு இடமுண்டு என்பதை உறுதிப்படுத்தினர். ஆனால் இவை மத்ஹபு வாதிகளின் கடும்போக்கிற்கு எதிராக அமைந்த போதிலும் நவீன உலகிற்கு ஏற்றவாறு இஸ்லாத்தை விளக்கும் பணியில் அவர்கள் பங்காற்றவில்லை என்பது முக்கியமாகும்.

ஆனால் முஸ்லிம்களையே முஸ்லிம்களுக்கு எதிராக கொண்டுபோய் நிறுத்துவதற்கும் தூய இஸ்லாத்தை கடைப்பிடிக்க வில்லை என்ற உளவியல் யுத்தத்தை இன்றுவரை நடத்திக் கொண்டிருப்பதற்கும் முஸ்லிம்களின் வரலாற்றுச் சின்னங்களை அழித்தொழித்து வரலாறற்ற சமூகங்களாக அவர்களை மாற்றுவதிலும் வஹாபிகளுக்கு மகத்தான பங்குண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது.

முஹம்மத் பின் சுஊதின் அரசியல் அபிலாஷைகளுக்கும் அப்துல் வஹாபின் சமயத் தூய்மைவாத மறுமலர்ச்சித் திட்டங்களுக்கும் இடையிலான பரஸ்பர உடன்படிக்கைகளும் ஒத்துழைப்புக்களின் ஊடாகவே இவை அனைத்தும் நடந்தேறின. எண்ணைவளக் கண்டுபிடிப்பும் செல்வப் பெருக்கமும் நவீனத்துவத்துடன் அரேபியா இணைவதை துரிதப்படுத்தின. விஞ்ஞான தொழில்நுட்ப உதவிகளுக்காகவும் உலக வர்த்தகத்தில் பங்குகொள்வதற்காகவும் சஊதி பிரித்தானியாவையும் அமெரிக்காவையும் நாடவேண்டி இருந்தது. மன்னர் சுஊதுக்குப் பின்னர் அப்துல் அஸீஸ், பைசல், பஹ்த் என மன்னராட்சியும் தொடர்ந்து வந்தது. இவர்கள் தாராளவாத கொள்கையை அனுஷ்டித்ததுடன் நாட்டை நவீனப்படுத்தும் திட்டங்களுக்கும் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்தனர். சர்வதேச சட்டங்களிலும் வர்த்தக ஒழுங்குகளிலும் நாட்டின் முன்னேற்றத்திற்கு ஏற்ற வகையில் ஷரிஆச் சட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்தினாலும் குற்றவியல், சிவில், தனிநபர் சட்டங்களில் மாற்றங்களைச் செய்யவில்லை. இப்னு தைமியாவின் சிந்தனைகளும் ஹன்பலி சட்டவியலும் தான் அப்துல் வஹாப் அவர்களை சமயத்தூய்மைவாதத்தை நோக்கி ஆழமாக வழிநடாத்தியதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏனெனில் இவர் பிறந்த நஜ்த் பிரதேசத்தில் ஹன்பலி சட்டமரபு காணப்பட்டமையும் அம்மரபையே அவர் ஆரம்பக் கல்வியாகப் பெற்றமையும் இதற்கான பின்புலமாகும். ஹன்பலி மத்ஹபு தனியார் சட்டங்களில் ஏனைய முஸ்லிம் சட்டப்பள்ளிகளைவிட மிகவும் பழமைவாத தன்மை கொண்டதாக இருந்தது.

இதே காலப்பிரிவில் இலங்கையிலும் மற்றெல்லா சமூகங்களையும் போல இஸ்லாமிய சமூக மறுமலர்ச்சிக்கான முன்னெடுப்புக்களும் போராட்டங்களும் மேற்கிளம்புவதை அவதானிக்கலாம். மேற்கத்திய காலனித்துவ அபாயத்திலிருந்து தற்காத்துக் கொள்ளும் நோக்கோடு இலங்கை முஸ்லிம் சமூகம் பல படிநிலைகளில் தன்னைத் தயார்படுத்திக் கொள்கின்றது. இஸ்லாமியச் சூழலில் மேற்கத்திய கல்விமுறையை முஸ்லிம் பண்பாட்டுக்குள் உள்ளீர்க்கின்ற பணியை அறிஞர் சித்தி லெவ்வை மேற்கொள்கின்ற அதேவேளை மாப்பிள்ளை லெப்பை ஆலிம் இஸ்லாமிய சமய பண்பாட்டுக்குள் தன்னை உட்படுத்திக் கொண்டு புதிய யுகத்திற்கேற்றவாறு இலங்கையின் பல்பண்பாடுகளையும் அனுசரித்த நிலையில் மத்ரஸாக் கல்வி முறையைத் தோற்றுவிக்கின்றார். 19 ஆம் நூற்றாண்டில் மேற்குக் கரையில் தோன்றிய இக்கலாசாலைகள் 1950 களுக்குப் பின் கிழக்குப் பகுதியிலும் பரவ ஆரம்பிக்கின்றன. இஸ்லாமிய பாரம்பரிய கலாநிலையங்களில் கற்று வெளியேறிய ஆலிம்கள் அல்குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரு துறைகளோடு மட்டும் தமது பயில்வை சுருக்கிக் கொள்ளாது பதினான்கு நூற்றாண்டுகளாக தோன்றிய பல துறைகளையும் கற்றவர்களாக வெளியேறினர். இதனால் இலங்கையில் வாழ்ந்த ஏனைய பண்பாடுகளுக்கு இடையில் முரண்பாடுகள் எழா வண்ணம் சகவாழ்வுப் போக்கிலேயே தமது சமய சிந்தனைகளை முன்வைத்து வந்தனர்.

ஆனால் ஐம்பதுகளுக்குப் பின் மத்திய கிழக்கில் தோன்றிய எண்ணெய்வளப் புரட்சியும் செல்வப் பெருக்கமும் காலனித்துவத்திற்கு நீண்டகாலம் உட்பட்டு சுரண்டப்பட்ட இலங்கையிலிருந்து ஆன்மீகம், கல்வி, பொருளாதாரம் இன்னபிற தேவைகளுக்காக மத்தியகிழக்கு நாடுகளுக்கு பயணிக்கும் நிலை ஏற்படுகின்றது. மத்திய கிழக்கில் தோன்றிய வஹாபிய மறுமலர்ச்சிச் சிந்தனையும் அதில் இழையோடும் இஸ்லாமியத் தூய்மைவாதமும் இலங்கை சமூகத்திற்குள்ளும் படிப்படியாகக் கடத்தப்படுகின்றது. யாரை ஒன்றிணைத்தாலும் ஆலிம்களை ஒன்றிணைக்க முடியாது என்று கருதப்பட்ட ஒரு சூழலில் ரியால் மௌலவி போன்ற ஒரு சில ஆலிம்களின் அர்ப்பணிப்புக்களின் காரணமாக முஸ்லிம் சமூகத்தின் செல்வாக்குப் பெற்ற சிவில் அமைப்பாக உலமா சபை உருவாகின்றது. இரண்டு தசாப்தங்களுக்கு முன்பே தனக்கான காரியாலயத்தை கொழும்பில் அமைத்துக் கொண்ட அது, அதற்கு முன்னர் ரியால் மௌலவி அவர்களின் கைப்பையிலேயே இயங்கி வந்தது இங்கு குறிப்பிட வேண்டிய வரலாற்றுண்மையாகும். அந்தளவு பல தியாகங்களுக்கு மத்தியில் மத்ரஸாக்களில் எட்டு வருடங்களை கழித்துவிட்டு வெளியேறுகின்ற மௌலவிமார்களின் மேலதிகக் கல்வி, தொழில் போன்ற பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கக் கூடிய வகையில் இலங்கை உலமா சபை கணிசமான பங்களிப்பை வழங்கியதை யாரும் மறுக்கமுடியாது. அல் ஆலிம் பாடத்திட்டம், இலங்கை பாடசாலையின் இஸ்லாம், அரபு கலைத்திட்டம் போன்றவற்றோடு முஸ்லிம்களின் தொழுகை நேரசூசி, பெருநாட்கள், பிறை விவகாரம் போன்ற பண்பாட்டு விடயங்களில் தேசிய ஒருமைப்பாட்டைப் பேணுவதிலும் அது மிகவும் கரிசனை கொண்டிருந்தது.

ஆனால் இலங்கையின் அரசியல்வாதிகளும் முஸ்லிம் வர்த்தக மேட்டுக்குடிகளும் விடுத்த சவால்களைவிடவும் இலங்கையில் உருவாகிய வஹாபிய சக்திகள் உலமா சபையை பலவீனப் படுத்துவதில் பல அந்தர் பெல்டிகளை அடித்துள்ளனர். பன்முகத் தன்மையான பல்பண்பாடுகள், பல் மொழிகள், பல்வகைச் சமூகங்கள் வாழ்கின்ற ஒரு நாட்டில் தட்டையான, ஒருதலைப்பட்சமான போக்கிலேயே அதன் செயற்பாடுகள் அமைய வேண்டும் என்பதில் வஹாபிகள் உறுதியாக இருந்து வந்துள்ளனர். இன்றும் கூட பொதுபல சேன குறிவைத்திருப்பது வஹாபிஸத்தையே அன்றி உலமா சபையை அல்ல. ஆனால் துரதிஸ்ட வசமாக குறிவைக்கப்பட்டவர்கள் உலமா சபைக்கு வெளியிலேயே நிற்கின்றனர். இந்த இரண்டக நிலையை நாம் விளங்கிக் கொள்வது மிகவும் முக்கியமாகும். இன்று உலமா சபைக்கு வஹாபிய முகமூடி அணிவிக்கப்பட்டிருப்பதற்கான காரணங்கள் யாவை என்பதை மிகச்சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். வஹாபியம் வேறு இலங்கை பாரம்பரிய இஸ்லாமிய சிந்தனை மரபு வேறு என்பதை பொதுக்களத்தில் வெளிப்படுத்துவதில் உலமா சபை பின் நின்றதாலும் அண்மையில் இன, மத பேதமில்லாது எதிர்க்கப்பட்ட ரிசானா விவகாரத்தில் உலமா சபை காத்த மௌனமும் எவ்வளவு பேராபத்தில் அவர்களைச் சிக்கவைத்திருக்கிறது என்பதை இன்னும் அவர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. குனூத், தொப்பி, விரலாட்டுதல், தராவீஹ் என எண்ணற்ற மார்க்கத்தின் கிளைப் பிரச்சினைகளில் சொல்லொண்ணா நெருக்கடிகளை இலங்கை முழுவதும் உருவாக்கி, பள்ளிவாயல்களையும் பிரித்து தனியான பள்ளிவாயல்களையும் உருவாக்கி பொலிஸ் ஸ்டேஷன் வரை கொண்டு சென்று முஸ்லிம்களை கைகட்டி, வாய்பொத்தி நிற்கவைத்து இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கேவலப்படுத்திய துர்ப்பாக்கியமான சூழ்நிலையை உருவாக்கிய வஹாபிய தூய்மைவாதத்தை மிகச்சரியாக இனங்கண்டு உலமா சபை எதிர்வினையாற்றவுமில்லை. அவர்களை அறியாமலேயே வஹாபியத்தின் தூய்மைவாத நோக்குமுறைக்குள் அவர்களை உட்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். தெரிந்தோ தெரியாமலோ ஹராம்-ஹலால் தூய்மைவாதம் இந்த வரலாற்றுப் போக்கில் அறியாமல் உள்வாங்கப்பட்டதே. நீண்டகாலமாக முஸ்லிம் புலமைத்துவ வட்டாரத்தில் விவாதிக்கப்பட்டு வந்த கருத்தாக்கமாக அது இருக்கவில்லை. அப்படி இருந்திருந்தால் அதை நடைமுறைப்படுத்துவதற்கான பொறிமுறை நீண்டகால நோக்கில் சிக்கல்கள் எழாதவாறு அமைக்கப்பட்டிருக்கும்.

அரை நூற்றாண்டுக்கு மேலாக உலக விவகாரங்களிலே கிஞ்சிற்றும் அக்கறை செலுத்தாத பள்ளிவாசலுக்குள் உலக விவகாரங்களைப் பேசினாலே நாற்பது நாள் செய்த அமல் போய்விடும் என்று கடைசி வரைக்கும் சொல்லிக் கொண்டு செயல்வாதிகளாக இருந்த தப்லீக் இயக்கம் ஒரு தசாப்தத்திற்கு முன்னால் உலமா சபையை கைப்பற்றுவதை யாராலும் தவிர்க்க முடியவில்லை. இதுவும் கூட வரலாற்றுப் போக்கில் வஹாபியம் கொடுத்த அழுத்தம் காரணமாக தன்னைத் தக்கவைப்பதற்கு தப்லீக் தேடிக்கொண்ட புகலிடமாக உலமாசபை மாறுகின்றது. அப்போதுதான் அவர்கள் தம்முடைய நிகழ்ச்சி நிரலில் இல்லாத இலங்கை முஸ்லிம்கள் அரசியல், பண்பாட்டு ரீதியாக எதிர்கொள்ளும் பல சவால்களுக்கு முகம்கொடுக்க ஆரம்பிக்கின்றனர். அதற்குரிய முதிர்ச்சியும் அதனிடம் இருக்கவில்லை. பொதுமைப்படுத்தப்பட்ட இலங்கையின் எல்லா முஸ்லிம்களையும் பிரதிநித்துவப்படுத்தும் உலமா சபைக்கு அத்தகைய புலமைச் சாகித்தியம் கொண்ட தலைமையே பொறுப்பேற்றிருக்க வேண்டும். ஆனால் இலங்கையின் பல்பண்பாட்டை புரிந்து கொண்ட ஆலிம்சாக்களை கணிசமாகக் கொண்டிருந்த ஒரு சூழலில் தெளிவில்லாத ஆலிம்கள் வந்தமரக்கூடிய இடமாக உலமா சபை மாறியமை இஸ்லாமிய புலமைத்துவத்தின் கையறு நிலையையும் நீண்டகாலமாக முஸ்லிம்களை பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கும் வஹாபிய பிசாசின் பித்தலாட்டமுமே காரணம் என்பதை வரலாறு நிறூபித்துக் கொண்டிருக்கிறது. ஆழமான இஸ்லாமிய புலமைத்துவவாதிகள் உலமா சபைக்கு வெளியே இருப்பது மட்டுமல்ல இலங்கையிலுள்ள இஸ்லாமிய இயக்கங்களுக்கும் வெளியேதான் இருக்கிறார்கள். இலங்கை அனுபவத்தில் பெரிய இஸ்லாமிய புலமைத்துவவாதிகளை திட்டமிட்டு உருவாக்கிய வரலாறுகளும் இல்லை. அவர்களாக சுயமாக வாசித்து பல்வேறு அனுபவ பட்டறிவுகளுடன் உருவாகிக் கொண்டால்தான். இறுக்கமான இயக்க கட்டமைப்புகளும் ஆழமான இஸ்லாமிய புத்திஜீவிகளை உள்வாங்கிக் கொள்வதற்கான நெகிழ்வுத்தன்மைகளும் இல்லாதிருப்பதே இதற்கான காரணமாகும்.

கிழக்கு மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்காக தொடங்கப்பட்ட முஸ்லிம் அரசியல் இயக்கம் எவ்வாறு மேற்கில் பெருந்தேசிய வாதங்களுடன் அல்லது முஸ்லிம் மேட்டுக்குடி வர்த்தக சமூகங்களுடன் சராணகதி அடைந்ததோ அதே போன்றுதான் இலங்கை முழுவதும் பரந்து வாழும் முஸ்லிம் சமூகத்தின் சிந்தனைக் கட்டுக்கோப்பையும் பல்பாண்டுகளுக்கு மத்தியில் சகவாழ்வை மேற்கொள்வதற்கான காலத்துக்கேற்ற சமய சிந்தனைகளையும் மறுசீரமைப்புச் செய்ய வேண்டிய இலங்கை உலமா சபை தொடர்ந்தும் மேற்குப் பகுதி ஆலிம்களாலேயே இதுவரை வழிநடாத்தப்படுகின்றது. இஸ்லாமிய யுத்த தர்மங்களையே ஒட்டுமொத்தமாக மறந்து கிழக்கில் என்னதான் இழப்புக்கள் இருந்தாலும் தொப்புள்கொடி உறவாக இருந்த தமிழ்-முஸ்லிம் உறவை அறுத்தெறியும் நடவடிக்கையாகவே உலமா சபை ஜெனீவா சென்று வக்காலத்து வாங்கியதையும் அதற்குப் பின்னால் இருக்கும் சமய சந்தர்ப்பவாத அரசியலையும் ஒதுக்கிவிட்டு எவ்வாறு பார்க்க முடியும்? இலங்கை முஸ்லிம்களின் மற்ற சமூகங்களின் எல்லா விடயங்களிலும் தொடர்ச்சியான ஊடாட்டம் இருந்து ஒரு முடிவை எடுப்பதற்கும் சிறுபான்மைச் சமூகத்தை பிரதிநித்துவம் செய்கின்ற உலமாசபை போன்ற அமைப்பு திடீரென ஒரு தரப்புக்குச் சார்பாக நிலைப்பாடு எடுப்பதற்கும் வித்தியாசம் இருக்கின்றது.

இன்று உலக அளவில் நடைபெற்று வரும் மாற்றங்களை விளங்கிக் கொள்வதிலும் உலமா சபை பின்னுக்குத்தான் நிற்கின்றது. இலங்கை போன்ற தென்னாசிய நாடுகள், அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற வல்லரசு சக்திகளுக்கு மத்தியில் ஒரு அதிகாரப் போட்டிக்குரிய களமாக எவ்வாறு மாறிவருகிறது என்பதை புரிந்து கொள்ளவில்லை. சீனப் பொருளாதாரம், சீன-இலங்கை சமயத் தொடர்புகள், பௌத்த சமூகங்களுக்கு மத்தியில் அது உருவாக்கி வரும் சமயவாதங்கள் குறித்த விரிவான புரிதலுக்குரிய தளங்களையோ, வாதவிவாதங்களையோ, அவற்றுக்குரிய புத்திஜீவித்துவ மட்டங்களையோ இதுவரை உலமா சபை உருவாக்கிக் கொள்ளவுமில்லை.

இலங்கையின் மத்ரஸா வரலாறு கூட குறிப்பிட்ட இயக்கங்களின் சிந்தனைகளை விரிவாக்கம் செய்வதற்காகவே உருவாக்கப்படுகின்றன என்ற உண்மை புரியப்பட்டு பொதுத் தளத்திற்கான இஸ்லாமிய மத்ரஸா கலைத்திட்டத்தை உருவாக்கும் பணியிலோ அவற்றைப் பயில்நிலைக்கு கொண்டுவரும் நிலையிலோ இதுவரை உலமா சபை இயங்கவில்லை. உலமா சபையின் தலைமை மட்டுமல்ல, அதன் நிருவாகக் கட்டமைப்பு இலங்கையின் பல பாகங்களையும் உள்ளடக்கியதாக தகைமை, தலைமைக் காலம் வரையறுக்கப்பட்டு ஆலிம்களின் வாக்கெடுப்புக்கள் பரிந்துரைகளுக்கு மத்தியில் தெரிவு செய்யப்படும் நிலையும் இதுவரை காணப்படவில்லை. உலமா சபை இலங்கை முஸ்லிம்களின் மிகவும் பொறுப்புவாய்ந்த சிவில் சமூகக் கட்டமைப்பு என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. அது ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின் அல்லது நகர்ப்புற மேட்டுக்குடி வலதுசாரி உலமாக்களின் ஆடுகளமாக மாறிவிடக்கூடாது.

இந்த ஹலால் கருத்தியலைக்கூட இதுவரை மிகச்சரியாக முன்வைத்து உரையாடவில்லை என்பதுதான் உண்மை. மனித ஆரோக்கியத்திற்கான இஸ்லாமிய கோட்பாடுதான் ஹலால் என்பது. அதை வைத்து பிழைப்பு நடத்துகின்ற ஒரு கும்பலை இஸ்லாத்தின் பெயரால் உருவாக்குவது நீண்டகாலத்தில் எத்தகைய துஸ்பிரயோகங்களை உருவாக்கிக் கொடுக்கும் என்பது ஒருபுறமிருந்தாலும் போர் முடிவுற்று நான்காண்டுகளுக்குப் பிறகும் அடுத்த சிறுபான்மையான முஸ்லிம்களை கருவறுக்க காத்திருக்கும் ஒரு சூழ்நிலையில் நாம் அறியாமல் உள்வாங்கி இருக்கும் வஹாபியத் தூய்மைவாதம் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் காவுகொள்கின்ற நிலைக்கு இட்டுச் செல்லும் என்பதே தற்போதைய இலங்கை நிலவரமாகும். நிருவாகக் கட்டமைப்பில், ராணுவத்தில், ஊடகத்துறையில், கல்வியில் உறுதியாக கால்பதித்திருக்கும் பெருந்தேசியவாத வர்க்கங்கள் அடுத்து முன்னேற துடியாய்த் துடிப்பது பொருளாதாரமே. அந்தப் பொருளாதாரத்திற்கு முட்டுக்கட்டையாக அமையும் ஹலால் தூய்மைவாதத்தை தூக்கி எறிவதற்கு அவர்கள் தயங்கமாட்டார்கள்.

ஒரு குறித்த காலத்தில் ஆட்சியிலிருக்கும் அரசையோ அரசியல்வாதிகளையோ மட்டும் உலமா சபை இன்னும் நம்பி ஹலால் தொடர்பான கணக்கறிக்கைகளை சமர்ப்பித்துக் கொண்டிருக்க முடியாது. அது நீண்டகாலத்தில் சாதகமான முடிவையே தரும் என எதிர்பார்க்கவும் முடியாது. பொதுவாக போர் முடிந்துவிட்டாலும் இனத்துவ அரசியலும் பௌத்தமயமாக்கலும் காணப்படுவதால் ஹலால் தூய்மை வாதத்தை ஒரு நிறுவன முறையாக தொடர்ந்தும் தக்கவைப்பதற்கான சாத்தியமான வழிகளை பரிசீலிக்க வேண்டியிருக்கிறது. ஹலால் விவகாரம் முடிவதோடு பிரச்சினை முடிந்துவிடும் என்பதல்ல. அடுத்தடுத்து குறிவைக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய தூய்மைவாத இலக்குகள் குறித்தும் அழுத்தங்கள் வரலாம் என்பதைப் பற்றியும் சிந்திக்க வேண்டி இருக்கிறது.

நூற்றாண்டு காலமாக பல்பண்பாடுகளுடன் புளங்கிய சோனக முஸ்லிம் பண்பாட்டு வெளியின் முகம் திடீரென மாற்றமடைவதையும் இங்கு கவனப்படுத்த வேண்டியுள்ளது. உடல் மொழி, தொப்பி, நீண்ட தாடி, நீண்ட அங்கி, கறுப்பு ஹிஜாப், முகத்திரை, கையுறை, புதிய பள்ளிவாயல் என தடாலடியாக மாற்றியமைக்கப்பட்டு வரும் முஸ்லிம் பண்பாட்டு வெளி பெரும்பான்மை சமூகங்களின் மனத்தில் பேரச்சத்தை உருவாக்கி வருகிறது. அடையாளத்தையும் தூய்மைவாதத்தையும் அளவுக்கதிகமாக தூக்கிப்பிடிக்கும் போது மற்றமைகள் வெறுக்கப்படுவதும் மிரள்வதும் இயல்பே. இது பெருந்தேசிய குழுக்கள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் எதிர்ப்பதற்கு ஏதுவாகவும் அமைந்துவிடுகிறது. எந்தவொரு செயல்திட்டத்திலும் மக்கள் பங்கேற்பும் அரச ஆதரவும் இருப்பதே விவேகமானது. இல்லாவிட்டால் அது ஒரு குழுசார்பானதாக மாறிவிடும். உணர்ச்சிகரமான நிலையில் வஹாபியத் தூய்மைவாதத்திற்குச் செல்லாமல் மற்றமைகளையும் கருத்திற்கொண்டு செயற்படுவதே பொருத்தமானது. மேலும் மேலும் முஸ்லிம் சமூகத்தை தனிமைப்படுத்துவதற்கான தூய்மைவாத இலக்குகளைப் பற்றி ஆராயாமல் மற்றமைகளுடன் கலந்து ஊடாடி பண்பாட்டு புரிதலை உருவாக்குவதே எதிர்காலத்தில் ஆரோக்கியமானது.
நன்றி - http://idrees.lk

Saturday, 2 March 2013

ஹலாலும் பொது பல சேனாவும்


[21-02-2013 அன்று நடந்த "ஹலாலும் பொது பல சேனாவும்" என்ற தலைப்பிலான சமூக விஞ்ஞான கற்கை வட்டத்தின் கலந்துரையாடலின் போது பகிரப்பட்ட கருத்துக்களின் தொகுப்பாக இக்குறிப்பு அமைகிறது. அவ்வுரையாடலினைத் தொடக்கிவைத்து உரையாற்றிய அசீஸ் நிசார்தீன் ( badrkalam.blogspot.com ) அவர்களது கருத்துக்களும் கலந்துரையாடலில் கூறப்பட்ட கருத்துக்களும் சுருக்கமாக இக்குறிப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இக்குறிப்பு 28-02-2013 இல் வெளியான சமூக விஞ்ஞான கற்கைவட்டத்தின் செய்திமடல் - 91 இல் பிரசுரமாகியுள்ளது]

ஹலால் என்ற சொல் இஸ்லாமிய நம்பிக்கைகளின்படி "ஆகுமானது" என்ற பொருளிற் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு எதிர்ச்சொல் "ஹராம்" அல்லது "விலக்கப்பட்டது" என்பதாகும். உணவு தொடக்கம் மனிதரின் நடத்தை வரைக்கும் ஆகுமானது எது, விலக்கப்பட்டது எது என்று பிரித்தறியப்படுகிறது. எடுத்துக்காட்டாக, பொய் சொல்வது ஹராம்; உண்மையைப் பேசுவது ஹலால். நாணயமாக நடந்துகொள்வது ஹலால்; ஏமாற்றி மோசடி செய்வது ஹராம்.

எல்லாச் சமூகங்களிலும் இருப்பதுபோல இஸ்லாமியச் சமூகத்திலும் ஏற்கப்பட்ட உணவுகளும் விலக்கப்பட்ட உணவுகளும் உள்ளன. இவ்வேற்பும் விலக்கும் இஸ்லாமிய நம்பிக்கைகளின் அடிப்படையில் வந்தவை. இறந்த விலங்கு ஒன்றினை வெட்டி அதன் இறைச்சியை உண்பது விலக்கப்பட்டுள்ளது. பன்றி இறைச்சி விலக்கப்பட்டுள்ளது. அதுபோல விலங்கொன்றைக் குறித்த வழிமுறைகளின்படி வெட்டி எடுக்கப்படும் இறைச்சியே ஹலால் ஆக்கப்பட்டுள்ளது.

2005இல் ஹலால் சான்றிதழ் இலங்கையில் வழங்கப்படத் தொடங்கும் வரைக்கும், நம்பிக்கையான முஸ்லிம் கடைகளில் இறைச்சியை வாங்குவதன் மூலமும் சந்தேகத்துக்கிடமான நிறுவனங்கள் தயாரிக்கும் உணவுகளைத் தவிர்ப்பதன் மூலமும் உணவில் ஹலால் விடயத்தினை முஸ்லிம்கள் கையாண்டு வந்தார்கள்.

இலங்கையில் ஹலால் சான்றிதழ் முறைமை நடைமுறைக்கு வந்தமை இலங்கையிலுள்ள முஸ்லிம்களின் கோரிக்கை காரணமாக மட்டுமே அல்ல. அது இஸ்லாமியர் அல்லாதவர்களும் உள்ளடங்கிய பன்னாட்டு/உள்நாட்டு வணிகர்கள், முதலாளிகளின், பெரு நிறுவனங்களின் தேவைக்காகவும் நடைமுறைக்கு வந்தது.  உணவுப்பொருட்களை விற்பனை செய்த அப்பன்னாட்டு/உள் நாட்டு நிறுவனங்களுக்கு முஸ்லிம்களின் சந்தை மிகவும் தேவையானதாக இருந்தது. மரபான முஸ்லிம் உணவுப்பழக்கங்களை விட்டு வெளியில் வராத சமூகமாக இருந்த முஸ்லிம்களின் உணவுப்பழக்கத்தை மாற்றி தமது வாடிக்கையாளர்களாக ஆக்குவதன் மூலம் பெரும் இலாபம் சம்பாதிக்கவேண்டுமானால் அவர்களைத் தம்பக்கம் இழுப்பதற்கான ஒரு கருவி தேவைப்பட்டது. அக்கருவியாகவே ஹலால் சான்றிதழ் அந் நிறுவனங்களால் கருதப்பட்டது. இதுதவிர, அரபு நாடுகளுக்கு உணவுப்பொருட்களை ஏற்றுமதி செய்வோரின் நலனும் இதில் அடங்கியுள்ளது.

இதனைத்தொடர்ந்தே முஸ்லிம்களை நம்பிச் சிறு சிறு இறைச்சிக்கடைகள், கோழிப்பண்ணைகள், உணவுக்கடைகள் வைத்துப் பிழைத்து வந்த சாதாரண முஸ்லிம் தொழில் முனைவோர்கள் நட்டப்பட்டுக் காணாமற்போனார்கள். மதம் சார்ந்த ஒரு விடயமான இந்த "ஹலால்" என்பது இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார மாற்றங்களுக்கும், சிறு உள்ளூர் வியாபாரிகள் ஒழிந்து பெரும் நிறுவங்கள் காலூன்றுவதற்கும் எவ்வாறு பங்களித்துள்ளது என்பதனை நுணுக்கமாக விளங்கிக்கொள்ளவேண்டியுள்ளது.

ஹலால் சான்றிதழினை நடைமுறைப்படுத்தும் உலமாசபையானது முழுக்க முழுக்க இலங்கையின் ஆளும் வர்க்கத்தின் நிழலில் அவர்களுக்குச் சார்பான அமைப்பாகவே இயங்குகிறது. இலங்கையில் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்களை மறுத்து இலங்கை அரசாங்கத்தை நியாயப்படுத்த ஜெனீவா வரை சென்று வாதாடிய மத அமைப்பாக அது இருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, "ஹலால்" பற்றிய சரியான விளக்கம் முஸ்லிம்களிடையே வலியுறுத்தப்படுவதற்கு மாறாக, உணவோடு சம்பந்தப்படுத்திய மிகக்குறுகிய மேலோட்டமான விளக்கமே பரவலாக்கப்பட்டிருக்கிறது. பன்றி இறைச்சியைக்கண்டு அருவருத்து வெறுத்து ஒதுங்கும் முஸ்லிம்கள் அதேயளவுக்கு ஹராமாக்கப்பட்டுள்ள வட்டி, மோசடி, மது, கடத்தல், வியாபாரத்தில் மோசடி, பொய் போன்றவற்றைக்கண்டு பொதுவாக அந்தளவு அருவருப்பதில்லை. இது இஸ்லாத்தின் "ஹலால்" பற்றிய அடிப்படைகளையே நடைமுறைப்படுத்தத் தவறும் ஒரு நிலையாகும்.

ஹலால் சான்றிதழானது உணவுகளை மேலோட்டமாக வகைபிரிக்க உதவுகிறதேயன்றி அதன் நடைமுறைச்சாத்தியம் கேள்விக்குரியதே. ஹராமான வட்டிப்பணத்தினை முதலிட்டு உருவாக்கப்படும் இஸ்லாமிய வட்டியில்லா வங்கிச்சேவைகளுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கப்படுகிறது. மக்களிடம் பொய் சொல்லி மோசடி செய்யும் நிறுவங்களின் உற்பத்திப்பொருட்கள் வெறுமனே அவற்றின் உணவுப் பொருட் கலப்பை மட்டுமே கருத்திற்கொண்டு ஹலால் சான்றிதழளிக்கப்படுகின்றன.

இவ்வாறாக, ஹலால் சான்றிதழின் தோற்றம், அதனால் ஏற்பட்ட விளைவுகள், அதன் நடைமுறைச்சாத்தியம் போன்ற கேள்விகள் இருக்கவே செய்யும் நிலையில் ஹலால் சான்றிதழுக்கெதிரான சிங்கள பவுத்த பேரினவாதிகளின் பிரசாரமும் போராட்டங்களும் தோன்றியுள்ளன. இவ்வமைப்புக்களின் நோக்கம் ஹலால் சான்றிதழின் நடைமுறை, நோக்கங்கள், இஸ்லாமிய சமூகத்தின் நன்மை போன்றவற்றின் மீதான அக்கறை அல்ல. மாறாக, இனவாதத்தைத்தூண்டிவிட்டு தமது சுயநல அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ளுவதேயாகும்.

இலங்கையில் இவ்வாறான அமைப்புக்களுக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. இவ் இனவாத அமைப்புக்கள் சிங்கள மக்களுடைய நன்மைகளுக்காகக்கூட என்றைக்கும் போராடியது கிடையாது. ஆளும் வர்க்கத்துக்கும், ஏகாதிபத்தியங்களுக்கும், பிற்போக்குவாதிகளுக்குமாகவே இவ்வமைப்புகள் இயங்கிவந்துள்ளன.  இவை நாட்டு மக்களிடையே தமது சுயநலங்களுக்காக உருவாக்கிவிடும் பிளவுகளும் சந்தேகக் கண்ணோட்டங்களும் மக்களது நல்ல எதிர்காலத்தையே நாசப்படுத்தி, போரும் அலைச்சலும் நிம்மதியற்றதுமான வாழ்வையே உருவாக்கியிருக்கிறது. இவ்வமைப்புக்களை அளவிற் சிறியனவென்றோ, கணக்கெடுக்கக்கூடாதென்றோ புறக்கணித்துவிட முடியாது. ஏனெனில் இவை சிறுகச்சிறுகச் சிங்கள பவுத்தர்கள் மத்தியில் விதைக்கும் இனவாதக்கருத்துக்கள் சிங்கள சமூகத்தின் அடியாழம் வரைக்கும் போய் நிலைத்துவிடக்கூடியனவாக இருக்கின்றன.

ஏழை எளிய முஸ்லிம்களின் பிரச்சினைகளை மூடி மறைப்பதுடன், முஸ்லிம் அதிகார வர்க்கத்தினால் சாதாரண முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் ஒடுக்குமுறைகளையும், முஸ்லிம்களிடையே உள்ள பல்வேறு வேறுபாடுகள் முரண்பாடுகள் போன்றவற்றையும் ஒரேயடியாக மறுத்து, "முஸ்லிம்கள்" என்றொரு வெறுப்பு முலாம் பூசப்பட்ட ஒற்றை அடையாளத்தினுள் ஒட்டுமொத்த இஸ்லாமியச்சமூகத்தையே அடக்கி முத்திரையிட்டு அவ்வடையாளத்தின் மீதான வெறுப்பாயும் தாக்குதலாயும் இவ்வரசியல் கட்டமைக்கப்படுகிறது.

இப்பேரினவாத இயக்கங்கள் இன்று ஹலால் சான்றிதழைச் சாட்டாக வைத்து முன்னெடுக்கும் அரசியலானது இந்நாட்டின் பல்லினத்தன்மையையும் மதசார்பற்ற தன்மையையும் கேள்விக்குள்ளாக்கி, இதனைச் சிங்கள பவுத்த நாடு என்று நிறுவுவதன் பாற்பட்டது. இத்தகைய போக்கு ஓர் இராணுவச் சர்வாதிகார ஆட்சிக்குச் சாதகமானதாகும்.

எனவே, இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் ஹலால் சான்றிதழின் தேவை பற்றியும் அதன் நடைமுறைகளைப்பற்றியும் ஆக்கபூர்வமாக விமர்சிப்பதும் உரையாடுவதும் ஒருபுறம் நடைபெற்றுக்கொண்டிருக்க, ஹலாலை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் இத் தீவிர இனவாதப் பரப்புரையினை முறியடிக்க வேண்டிய தேவையும் உள்ளது.

ஹலாலோடு நின்றுவிடாத இந்தப் பேரினவாத நிகழ்ச்சிநிரல் படிப்படியாக இலங்கையின் சிறுபான்மைத் தேசிய இனங்கள், குழுக்கள் யாவற்றின் மீதும் தனது தாக்குதலைச் செய்யும். தாமே உருவாக்கும் குண்டுவெடிப்புக்கள், கலவரங்களைச் சாதகமாக்கிக்கொண்டு ஆயுதப்போராட்டத்தைக்கூட இவை முஸ்லிம்கள் மீது திணிக்கலாம். அதன்போது சிறுபான்மைத் தேசிய இனங்களும் குழுக்களும் சிங்கள பவுத்தர்களுள் இருக்கும் நட்புச்சக்திகளையும் இணைத்துக்கொண்டு ஒன்றிணைந்து போராடவேண்டிய தேவை உருவாகும்.

முஸ்லிம்கள் மீதான ஒடுக்குமுறையைச் சாதமாக்கிக்கொண்டு குறுகிய அடிப்படைவாதக் கண்ணோட்டங்களை முஸ்லிம்கள் மத்தியில் விதைக்க முயற்சிக்கும் சக்திகளை இனங்கண்டு முறியடிப்பதும் இப்போது முஸ்லிம்கள் முன்னால் எழுந்துள்ள சவாலாகவிருக்கிறது. ஒவ்வொரு நாடுகளிலும் வாழும் இஸ்லாமியர்களின் பலவகையான பண்பாட்டுக்கூறுகளை மறுதலித்தும், அவர்களது வரலாற்றுச் சின்னங்களைச் சிதைத்தழித்தும் பரப்பப்பட்டுவரும் ஒற்றைப்படுத்தப்பட்ட வகாபிச சிந்தனைகள் இத்தகைய போக்குக்களுக்கான ஓர் எடுத்துக்காட்டாகும்.

தமிழர்கள் மீதான ஒடுக்குமுறையைச் சாதகமாக்கிக்கொண்டு குறுகிய தமிழ்த்தேசியவாதம் தமிழரின் விடுதலைப்போராட்டத்தினுள் ஊடுருவி இடம்பிடித்துக்கொண்டமை பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தியது. இந்நிலை முஸ்லிம்களுக்கும் ஏற்படாமல் முஸ்லிம் அரசியல் இயக்கங்கள் கவனம் செலுத்தவேண்டியுள்ளது.

முஸ்லிம்களின் அரசியல் அமைப்புக்கள் தம்மை ஏனைய ஒடுக்கப்படும் சமூகங்களிலிருந்து தனிமைப்படுத்திக்கொள்ளாமல், எல்லா ஒடுக்கப்படும் மக்களுடைய போராட்டங்களிலும் தம்மை இணைத்துக்கொண்டு இலங்கையின் பேரினவாத ஒடுக்குமுறையை முறியடிப்பதன் மூலம் மட்டுமே சனநாயக விரோத ஆட்சி ஒன்றின் அடிப்படைகளையும் இனப்பிளவுகளையும் இலங்கையிலிருந்து அகற்ற முடியும்.

Saturday, 23 February 2013

பொதுபல சேனாவின் ஹலாலும் முஸ்லிம் அரசியலின் ஹராமும்


ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

                                                                                    ஏ.எச்.சித்தீக் காரியப்பர்


இந்நாட்டில் வாழும் முஸ்லிம் சமூகம் இன்று பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. இலங்கையின் முதலாவது சிறுபான்மையின தமிழ்ச் சமூகம் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்த, முகங்கொடுத்துக்கொண்டிருக்கும் நிலையிலேயே இரண்டாவது  சிறுபான்மையின முஸ்லிம் சமூகமும் இன்று பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அடுத்த இனரீதியான அடக்குமுறை முஸ்லிம்களுக்கே என்பது பலராலும் அன்று எதிர்வு கூறப்பட்டிருந்த நிலையில் அது இன்று நிறைவேறத் தொடங்கி விட்டது.

 விடுதலைப் புலிகள் தோற்கடிக்கபட்ட பின்னர் இலங்கையில் இனி இனவாதம், மதவாதம் ஒன்றுமே இல்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  அடிக்கடி கூறிக் கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் கூறிக் கொண்டிருக்கும் போதே இன்று முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் தெற்கிலிருந்து தோற்றம் பெற்றுள்ளது.

தென்னிலங்கை சிங்கள பௌத்த கடுங்கோட்பாட்டுக் கொள்கையைக் கொண்ட சகல தரப்பினரினதும் மொத்த இனவாத தீ நாக்கானது முதலில் தம்புள்ளை வரை மட்டுமே நோக்கி நீண்டிருந்தது. இன்று அது நாடளாவிய ரீதியில் வளைந்து சென்று கொண்டிருக்கிறது. பள்ளிவாசல்கள், ஹலால் உணவுகள், முஸ்லிம் பெண்களின் பர்தாக்கள் என அனைத்தினையும் வெறுப்புடன் பகிரங்கமாகப் பயமின்றி விமர்சித்து அவற்றுக்கு எதிராகச் செயற்படும் நிலை உருவாகியுள்ளது. இதன் இறுதி உச்சத்தின் ஒரு கட்டமாக முஸ்லிம் வர்த்தக நிலையங்களில் பொருட்களைக் கொள்வனவு செய்யக் கூடாது என்ற பகிரங்க அறிவித்தலும் இந்த பௌத்த சிங்கள கடுங்கோட்பாளர்களால் விடுக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, முஸ்லிம் பெயர் கொண்ட வீதிப் பெயர் பலகைகளும் நிறம் பூசி அழிக்கப்பட்டு அவை சிங்கள பெயர்களப் பெயர்களாக மாற்றப்படும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது. சித்திலெப்பை வீதி இன்று சித்தார்த்த வீதியாகிப் போயுள்ளது.

இன்னுமொன்றைக் கூறப் போனால், எண்பது சத வீத சிங்கள பௌத்தர்களைக் கொண்ட இந்த நாட்டில் எட்டு வீதமான முஸ்லிம்களின் ஹலால் உணவு எதற்கு? அதனை சிங்களவர்கள் பயன்படுத்த வேண்டிய தேவையில்லை என்ற அளவுக்கு இனவாதம் இன்று சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு அவர்களது உணர்வுகளும் உசிப்பி விடப்பட்டுள்ளன. இதனை முஸ்லிம்களுக்கு எதிரான நாடளாவிய ரீதியிலான கலவரம் ஒன்றின் கட்டியம் என்று கூறினாலும் மிகையாகாது.
 கிராமம் கிராமாகச் சென்று முஸ்லிம்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன. பெரும்பான்மைக்குள் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்கள் இன்று அச்ச உணர்வுடனேயே ஒவ்வொரு நாளையும் எதிர்நோக்கின்றனர்.

 இந்த நாட்டின் சிங்கள அமைச்சர்களில் ஒருவரான பாட்டாலி சம்பிக்க ரணவக்க அண்மையில் தெரிவித்திருந்த கருத்துகள் கூட அவரது மட்டகரமான சிந்தனையை வெளிப்படுத்தியிருந்தன. ‘தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அன்று ஆயுதங்களின் மூலம் செய்ய நினைத்தவற்றை இன்று அகில இலங்கை ஜமயத்துல் உலமா சபை ஹலால் மூலம் செய்ய முயற்சிக்கின்றது. முழுநாட்டையும் உற்பத்திகளையும் இஸ்லாமிய மயப்படுத்த முயற்சிக்கின்றனர்.” என்றெல்லாம் நரம்பில்லாத நாக்கினால் வரம்பின்றி அபாண்டங்களை கட்டவிழ்த்து விட்டிருந்தார்.
 ஆனால், இவையெல்லாம் ஒரு புறமிருக்க, இந்த வியடம் தொடர்பில் பெரும்பாலான முஸ்லிம் அரசியல் தலைமைகளின் நிலைப்பாட்டை நோக்கும் போது வெட்கித் தலைகுனிந்து வேதனைப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

 1. மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி ஆக்கினால் முஸ்லிம் பள்ளிவாசல்களில் பாங்கு சொல்ல அனுமதிக்கமாட்டார் என்று புத்தளத்தில் ஒலித்த குரல்…..

2. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஊடாக எமது கட்சி இந்தத் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் நான் வெட்கித் தலைகுனிய வேண்டியிருந்திருக்கும். இன்று எத்தனையோ பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டு விட்டன என்று கிழக்கில் ஒலித்த குரல்…

3. மஹிந்தவை ஜனாதிபதி ஆக்கினால் முஸ்லிம்களின் நிலை மோசமாகி விடும் என கண்டியில் ஆரூடம் தெரிவித்த அரசியல் குரல்கள்.. என அடுக்கிக் கொண்டே போகலாம்.

குறித்த முஸ்லிம் அரசியல்வாதிகளால் இப்படியெல்லாம் அன்று கூறியவைகள் என்னவோ இன்று நடந்தேறி வருகின்றனதான். ஆனால், இவற்றுக்கெல்லாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காரணம்  அல்ல என்று கூறினாலும் ஜனாதிபதி மஹிந்த மீதே இவை அனைத்துக்குமான குற்றத்தை அந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் அன்று சுமத்தியதன் காரணமாக முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீதே அதிருப்தி கொள்ளும் நிலையும் உருவாகியுள்ளது.

 இவ்வாறெல்லாம் கூறி அன்று ஜனாதிபதிக்கும் அவரது அரசுக்கும் எதிராகப் குரல் கொடுத்து இந்த நாட்டு முஸ்லிம்களின் உணர்வுகளை உசுப்பி விட்டு அவர்களைப் பகடைக்காய்களாக மாற்றிய அதே நபர்கள், அதே முஸ்லிம் அரசியல் பிரமுகர்களே இன்று முஸ்லிம்களுக்கு ஒன்றுமில்லை. அவர்கள் இந்த நாட்டில் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் வாழ்கிறார்கள். ஜனாதிபதி கடவுள் போன்றவர். அவர் முஸ்லிம்களைப் பாதுகாப்பார் என்று கூறுமளவுக்கு வெட்கம் கெட்டுப் போய் உள்ளனர். தங்களது அரசியல் இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்காக சமூகத்தை ஏலத்தில் விட்டு இன்று அரசுடன் இணைந்து, ஆதரவு வழங்கி அரசுக்கு சந்தனம் பூசி, சாமரம் வீசும் அளவுக்கு படியிறங்கிப் போன முஸ்லிம் அரசியல்வாதிகளால் முஸ்லிம் சமூகம் நாதியற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

 1 பொது பல சேனா போன்ற இயக்கங்கள் இனவாதத்தையும் மத வாதத்தையும் ஊக்குவித்து நாட்டை மற்றுமொரு அழிவை நோக்கி வழிநடத்துவதாக தென் மாகாண சபை அரச தரப்பு உறுப்பினர் பதேகம சமித்த தேரர் ஒரு  புறத்தில் எச்சரிக்கிறார்…

 2. மறுபுறத்தில்… முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கிறார் சுமந்திரன் எம்.பி.

 இவ்வாறு கூட்டணியின் பத்தேக சமித்த தேரரும் கூட்மைப்பின் சுமந்திரன் எம்.பியும் முஸ்லிம்களுக்காகப் பரிந்து பேச, அதனைக் கூட ஜீரணிக்க முடியாத சில முஸ்லிம் அரசியல்வாதிகள் எதிர் அறிக்கை விடும் அளவுக்கு நிர்வாண அரசியல் நடத்துவது வெட்கக் கேடானது. முஜிபுரும் முஸ்ஸமிலும் முஸ்லிம்களுக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்தாலும் அதற்கும் பதில் அறிக்கை தயாரிப்பதும் அதே முஸ்லிம் அரசியல்வாதிகளே. இவ்வாறெல்லாம் இவர்கள் செயற்படுவது யாரைத் திருப்திபடுத்திக் கொள்ளவோ, எதனைப் பெற்றுக் கொள்ளவோ?

இன்னுமொரு விடயத்தையும் இங்கு குறிப்பிட வேண்டும் கடந்த செவ்வாய்க்கிழமை ஐக்கிய தேசியக் கட்சியின் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், அந்தக் கட்சியின் மாகாணசபை உறுப்பினர்கள்,முக்கிய பிரமுகர்கள், மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சிலைச் சேர்ந்த பிரமுகர்கள் போன்றோர் பொது பலசேன அமைப்பின் தலைமைகளை நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் சந்தித்த போது, முஸ்லிம்கள் தரப்பில் சில கருத்துகள் முன்வைக்கப்பட்டிருந்தன. முஸ்லிம் சமூகம் சனத்தொகையைப் பெருக்கி வருகிறது என்ற குற்றச்சாட்டுக்கும் அங்கு பதிலளிக்கப்பட்டிருந்தது.

 ஆனால், முஸ்லிம் சனத் தொகை அதிகரிப்பு தொடர்பான பொது பல சேனாவின் இதே குற்றச்சாட்டுக்கு  முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் முன்னர் இவ்வாறானதொரு கருத்தைத் தெரிவித்திருந்தார்.

 அதாவது, முஸ்லிம் பெண்களின் திருமண வயது எல்லையை மாற்றுவது தொடர்பில் ஆலோசிக்கப்படவுள்ளதாக அவர் கூறியிருந்தார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இதன் மூலம் பொது பல சேனாவின் குற்றச்சாட்டை அவர் ஏற்றுக் கொண்டு அதற்கேற்ப சட்டத் திருத்தம் செய்யவும் அவர் விரும்புகிறார் என்பதே இதன் மூலம் புலப்படுகிறது. தன் வீட்டுக்கு வெளிச்சம் வரவேண்டும் என்பதற்காக பக்கத்தான் வீட்டுக் கூரையைக் கூட எரிக்கத் தயங்காத இவ்வாறான அரசியல்வாதிகள் தொடர்பில் இந்நாட்டு முஸ்லிம்கள் பொதுபல சேன தொடர்பில் காட்டும் கவனத்தை விட அதிக அவதானம் செலுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.

 முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் அண்மையில் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் எழுந்திருந்தன. ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முஸ்லிம்கள் தொடர்பில் ஆதரவாகப் பேசியிருந்தார். அப்போது அவரது உரைக்கு எதிர்ப்புகள் எந்தத் தரப்பிலிருந்து அதிகளவில் வந்தன என்பது அனைவரும் அறிந்த விடயமே. அதே போன்று அரச தரப்பு அமைச்சர் ஒருவர் ரணிலின் கூற்றை மறுத்துப் பேசிய போது கைதட்டி ஆரவாரம் செய்து பக்கப்பாட்டு பாடியவர்கள் எந்தத் தரப்பினர் என்பதும் அப்பட்டமாகத் தெரிந்த விடயமே. அரசு தரப்பு அறிக்கையானது, தனது கருத்துக் கேட்டே தயாரிக்கப்பட்டதாகக் கூறிய அமைச்சர் ரவூப் ஹக்கீம், பின்னர் தான் அப்படிக் கூறவில்லை என்றும் ஊடகங்கள் தனது உரையைத் தவறாகப் புரிந்து கொண்டன என்றும் வழமையான அறிக்கையை விட்டதனையும் யாரும் அறியாமல் இல்லை.

முஸ்லிம் பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டதாகத் தேர்தல் கால பிரசாரம் செய்தோர் தேர்தலின் பின்னர் அரசுடன் ஒட்டிக் கொண்டு, இன்று அப்படி ஒன்றுமே நடக்கவில்லை என்ற அரச தரப்பாரின் கூற்றுக் கூற்றுக்கு நற்சான்றிதழ் வழங்கும் சூடு சொரணையற்ற நிலையிலேயே இன்று முஸ்லிம் அரசியலில் கோலோச்சுகிறது.

பொதுபல சேனா என்பது பௌத்த, சிங்கள கடுங்கோட்பாடு கொண்டதொரு அமைப்பு. அந்த அமைப்பைச் சேர்ந்தோர் நிச்சயமாக இனவாதிகளாகவே இருப்பர். இதில் பெரிதாக ஆச்சரியப்படத் தேவையில்லை. ஆனால், இந்த விடயத்தில்  இன்றைய முஸ்லிம் அரசியல்வாதிகளில் பலரின் நடவடினக்கைள் அதனை விட மிக மோசமாக, ஹராமாக அமைந்துள்ளன என்பதனை நாட்டின் ஒவ்வாரு முஸ்லிம்மும் உணர வேண்டியதும் இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.

இதேவேளை, தற்போது முஸ்லிம்களுக்கு எதிராக எழுந்துள்ள நிலைமைகள் தொடர்பில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்களான ஏ.எச்.எம். பௌஸி, ரவூப் ஹக்கீம், ஏ.எல்.எம். அதாவுல்லாஹ், றிஷாத் பதியுதீன் ஆகியோர் ஒன்றுபட்டுக் குரல் கொடுத்து கருத்துத் தெரிவித்தாகச் செய்திகள் வெளிவந்தன. அங்கு  ஒரு சிங்கள அமைச்சரால் முஸ்லிம்களுக்கு எதிராக கருத்துகள் முன்வைக்கப்பட்ட போது அதற்கெதிராக இந்த நான்கு முஸ்லிம்களும் கிளர்ந்தெழுந்தனர் என்றும் கூறப்படுகிறது. வரவேற்கப்பட வேண்டும். இதன் பிரதிபலிப்புகள் எவ்வாறு அமையப் போகின்றன என்பதனையும் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். ஏனெனில் முஸ்லிம் மக்கள் இன்று முஸ்லிம் அரசியலில் நம்பிக்கையற்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்பதே இதற்கான காணரமாகும். எதனையும் அவர்கள் ஸ்திரமாக நம்ப மறுக்கும் ஒரு நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர் என்பதும் உண்மையே.

நன்றி - http://www.thinakkathir.com

Friday, 15 February 2013

விஸ்வரூபம்’ - காயத்தை ரத்தத்தால் கழுவும் கதை | நன்றி: கீற்று.காம்


கருத்துச் சுதந்திரம் பாகம் 1
'விஸ்வரூபம்’ என்ற, திரைக்கு வந்து சில நாட்களே ஆன 'திரைக் காவியத்தைக்' காண நேர்ந்தது. சர்ச்சையே அப்படத்திற்கு விளம்பரத்தைத் தேடித் தந்தது. முஸ்லீம் அமைப்புகள் எதிர்ப்பு தெரித்தவுடன், நான் நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று கமல் அறிவித்தார். பிறகு அவர்களிடம் பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு வெளியேறும் முடிவை தள்ளிப் போட்டிருக்கிறார். தேசப்பற்று காரணமாக இருக்கலாம்.
விஸ்வரூபம் திரைப்படம், முஸ்லீமாக இருக்கும் கதாநாயகன், விஷ்ணுவின் ரூபம் எடுக்கிற படம். அதாவது நல்லது செய்யும் எந்த முஸ்லீமுக்கும் ஓர் இந்து சாயல் இருக்க வேண்டும்.
அவரது ‘விஸ்வரூபம்’ திரைப்படம் புரியவில்லை என்று பலர் கூறுகின்றனர். அதெல்லாம் பொறாமை காரணமாக சொல்கிறார்கள். அது மிக எளிதாக புரியும் படம். ஏதாவது ஒரு ‘கான்’ வில்லனாக வரும் சில அமெரிக்க ஜேம்ஸ்பாண்ட் படங்களின் காட்சிகளையும், பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடித்த சில இந்தி சினிமாக்களின் காட்சிகளையும், இந்திய ‘தேசபக்தி’ பொங்கும் சில தமிழ் சினிமாக்களின் காட்சிகளையும் வெட்டி ஒட்டிவிட்டு, 11வது அவதாரத்தில் ஒரே ஒரு பாடல் மட்டும் சேர்த்துவிட்டால் அதுதான் இந்த விஸ்வரூபம். ஆனால் கமல்சார் இதற்காக ஏன் சொத்தை அடகுவைத்தார் என்று புரியவில்லை.
இப்படத்தில் கமலின் பெயர் விஸ்வநாதன். புத்திசாலியான அதிகாரியாக ஒருவர் நடித்தால் நாயகன் ஒன்று ‘ராகவனாக’ இருப்பார் அல்லது இந்த படத்தின் பாத்திரம் போல ‘விஸ்வநாதனாக’ இருப்பார். ஏதாவது ஒரு அம்பிமார். கமல் இந்தப் படத்திலும் ஒரு பார்ப்பனர். இதனால் அவர் சாதிப்பற்று கொண்டவர் என்று நீங்கள் தவறாக புரிந்துகொள்ளக் கூடாது அல்லவா! அதனால், அவாள் பாசையில் அச்சுப்பிசகாமல் பேசும் அவரது மனைவி, கோழிக்கறி விரும்பிச் சாப்பிடுவார். இப்படி ஆராய்ச்சி செய்வது சரியா என்று யாராவது என்னைக் கேட்டால் நடிகர் ரஜினிகாந்த், கமலைப் போல அடிக்கடி பார்ப்பன வேடத்தைப் பூணுவதில்லையே, ஏன் என்ற கேள்விக்கு பதில சொல்வீர்களாக.
கமல் சாரின் பார்ப்பன மனைவி ‘அடக் கடவுளே’ என்று சொல்லும்போது கமல் ‘எந்தக் கடவுளே’ என்று கேள்வி கேட்டு, தான் நாத்திகன் என்று சொல்லிக் கொள்கிறார். ஆனால் முஸ்லீம்கள் இப்படத்தின் நோக்கத்தைக் கேள்வி கேட்பார்களே என்பதற்காக கமல் உண்மையிலேயே தொழுகை நடத்தக் கூடிய முஸ்லீமாம். மச்சம் மட்டும் வச்சு மாறுவேடம் போடும் நாயகன் மாதிரி, இதுல முஸ்லீம் பாத்திரம் மச்சம் வச்சவரு மாதிரி இருக்கும். விஸ்வநாதன் என்ற தொழிலுக்காக வேடம் போடும் பாத்திரத்துக்கு பார்ப்பன‌ குடும்பமே இருக்கு.. ஒரு பாட்டு இருக்கு.. கமல் பரத நாட்டியம் ஆடுகிறார் மாமிகள் புடை சூழ. ஆனால் படத்தில் நிஜமாக வரும முஸ்லீம் பாத்திரம் அம்புட்டு அநாதை. படத்துல வரும் கமல்பாய் பேரு 'தௌபீக்’கா அல்லது நாசரா என்று என்னால் இதுவரை கண்டே பிடிக்க முடியவில்லை. கவுண்டமணி சொல்ற மாதிரி நல்ல டகால்ட்டி. 
கருத்துச் சுதந்திரம் பாகம் 2 
முல்லா ஒமர் மதுரையிலும், கோவையிலும் தங்கியிருந்ததாக சொல்லியிருக்கிறார். இன்னும் ஏதாவது ஒரு முஸ்லீமின் ரேஷன் கார்டையும் சேர்த்து காண்பித்திருக்கலாம். நோக்கம் இனிதே நிறைவேறியிருக்கும். அகில உலகமெங்கும் உளவுத்துறை வலைப்பின்னலை வைத்திருக்கும் அமெரிக்க சி.ஐ.ஏ அதிகாரிகளை விஞ்சிய அகில உலகநாயகனாக நீங்கள் ரெண்டு சண்டை போடுவதற்கும், நாலு பாட்டும் பாடுவதற்கும் முஸ்லீம்கள் பலிகடாக்களா? தசாவதாரத்தில் அதிபர் 'புஷ்' வேடமே போட்டாச்சு அப்பறம் ஏன் கமல் சார் தேவையில்லாம இப்படியொரு ஜீனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.
நீங்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவேன் என்று சொன்னதை விட நேராக அமெரிக்கா போகிறேன் என்று சொல்லியிருக்கலாம். கமலஹாசனில் ‘ஹாசன்’ என்ற வார்த்தைக்காக தங்களை ஜட்டியைக் கழற்றி சோதனை போட்ட நல்ல நாடான அமெரிக்காவிற்கு தாங்கள் போய் வாருங்கள்; நாங்கள் வழியனுப்பி வைக்கிறோம். ஜார்ஜ் பெர்னாண்டஸை.. ஷாரூக்கானை.. அப்துல் கலாமை அதேபோல் சோதனை நடத்திய அமெரிக்கா, தங்களுக்குப் பிடித்த நாடு. இப்படி எந்த அரபுநாடும் நம்நாட்டின் பிரபலங்களை இழிவுபடுத்தியதாகத் தெரியவில்லை. ஆனால், அரபுநாடுகளின் மீது உங்களுக்கு என்ன கோபமோ?
கருத்துச் சுதந்திரம் பாகம் - 3
ஓர் இந்திய உளவு அதிகாரி நம்ம கமல். உளவுப்பணிக்காக தனது துணைவியாரையே தாரை வார்த்து அவர் உளவு பார்க்கிறார். அந்த நாயகி ஆன்ட்ரியாவை அபூர்வ சகோதரன் படத்தில் வரும் ஏட்டு போல ‘தெய்வமே நீங்க எங்கயோ போயிட்டீங்க’ என்று கமல் சொல்லாத குறையாக, கூடவே சொட்டர போட்டுக்கிட்டு அலையவிடுகிறார். அரவாணியாக இருக்கும் நாயகன் கமலை மணந்தவள் மற்றொருவரை விரும்புவதை வில்லத்தனமாகக் காட்டுகிறார். ‘அமெரிக்காவில் மழை பெய்யாதா போயிட்டுப் போது’ என்று நாயகி கலக வசனம் பேசினாலும் மொத்தத்தில் அவளை வில்லியாக்கி விடுகிறார். நல்ல பெண்ணுரிமைவாதி நீங்கள்.
ஆண் அடையாளத்தைத் துறந்து, தாம்பத்தியத்தைத் துறந்து, அமெரிக்காவுக்கு வேலை செய்யும் தியாகி நம்ம கமல். அமெரிக்காவைக் காப்பாற்ற இந்திய அரசு வெட்டியாக சம்பளம் கொடுக்கிறது. முல்லா ஒமர் 'தமிழ் பேசும் ஜிகாதி வான்டட்' என்று கேட்டதால் கமல் சென்று இறங்கிவிட்டார். உயிரையே பணயம் வைத்து முல்லா ஒமரை நெருங்கிவிட்டார்.
அமெரிக்க ராணுவம் தமது வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டார்கள் என்ற ஒரு நியாயமான காரணம் இருப்பதாலேயே ஆப்கனில் ஒரு கிராமத்தைத் தாக்குகிறது. காரணமில்லாமல் தாக்க மாட்டார்களாம்! ஹெலிகாப்டரில் இருந்து சுடும் அமெரிக்க வீரர் ஒரு பெண்ணைத் தவறுதலாக சுட்டுவிட்டதற்காக தன்னைத் தானே சபித்துக் கொள்கிறார். ஏனென்றால் அமெரிக்க வீரர் சாதாரண ஆப்கானிய மனிதனை சுட்டுவிட்டால் தன்னைச் சுட்டுவிட்டதாக எண்ணுவாராம்! கடைசி ஆபரேசனில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அனைவரும் நிற்கும்போது முஸ்லீம் அதிகாரியாகிய கமல் தொழுவதை வாஞ்சையுடன் ஒரு அமெரிக்க அதிகாரி சக அதிகாரிக்கு விளக்குகிறார்! ஏனென்றால் நேர்மையான முஸ்லீம் அதிகாரிகளை அவர்கள் மதிப்பார்களாம்!
ஆமாம் கமல், இந்த குவான்டனாமோ சிறைச்சாலை தெரியுமா? அதில் முஸ்லீம் சிறைவாசிகளை கழுத்தறுத்து வீடியோவில் காட்டுவது; ஒருவரின் உடல் முழுவதும் மலத்தைப் பூசி அவரது முகத்தில் ராணுவ அதிகாரி ஒருவர் தனது ஜட்டியால் மூடுவது; நிர்வாணமாக நிற்கும் ஒருவரின் மீது நாய்களை விட்டுக் குதறவிடுவது ஆகிய காட்சிகள் அனைத்தும் வெளியானதைத் தாங்கள் அறிவீர்கள் தானே.. இன்னும் வர்ணிக்க முடியாத கொடூரங்களை நிகழ்த்தியதன் காரணமாக அமெரிக்க மக்களின் எதிர்ப்பினால் அந்த சிறை மூடப்பட்டதையும் அறிவீர்களா? 
கருத்துச் சுதந்திரம் பாகம் - 4
சி.என்.என், ஐ.பி.என்., பி.பி.சி உட்பட சர்வதேச ஊடகங்களும் இந்தியாவிலுள்ள நூற்றுக்கணக்கான ஊடகங்களும் செப் - 11, 2011க்குப் பிறகு அடித்துத் துவைத்த ஒரு கருத்தைத்தான் இப்போது கமல் விஸ்வரூபம் எடுக்க வைத்திருக்கிறார். அதுதான் இஸ்லாமிய பயங்கரவாதம் என்பது. ஆனால் அமெரிக்க பயங்கரவாதத்தைப் பற்றி சொல்லத்தான் ஒரு ஊடகத்தைக் கூட காணோம்! அல்ஜசீரா தொலைக்காட்சி அந்த வேலையைச் செய்தது. அதன் அலுவலகத்தை அமெரிக்கா குண்டுவீசி அழித்தது. கருத்துச் சுதந்திரத்தை இப்படி குண்டு போட்டு அழிக்கலாமா என்று அமெரிக்காவுக்கு பாடம் சொல்லி கமல் ஒரு படம் எடுப்பாரா?
அமெரிக்காவுக்கு கைவந்த கலை, திரைப்படங்களில் அரசியல் செய்வது. ஜப்பானைக் அணுகுண்டு போட்டு அழித்துவிட்டு ‘பியர்ல் ஹார்பா’ என்று ஜப்பானையே வில்லனாக்கி ஒரு படம் எடுத்தார்கள். வெளியிட்ட திரையரங்கில் எல்லாம் நம்ம தமிழன் அதை வெற்றிப்படம் ஆக்கினான்.
இப்போது இரட்டைக் கோபுரத் தாக்குதலை வைத்து ஒரு படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அது இந்தியாவில் சக்கைப் போடு போடுவதற்குள், பேசாம நான் இந்தியாவை விட்டு வெளியேறிவிடலாம் என்று இருக்கிறேன்.
நம்ம கமல் அமெரிக்க லட்சியப் படங்களை தமிழ் மண்ணில் எடுக்க ஆரம்பித்துவிட்டார். இனி அமெரிக்க தூதரகத்தைத் தாக்க வந்த தமிழ்த் தீவிரவாதிகளைப் பற்றி நிறைய படம் வந்தாலும் வரும்.
கருத்துச் சுதந்திரம் பாகம் - 5
'உன்னைப் போல் ஒருவன்’ல் பயங்கரவாதத்தில் ஈடுபடும் முஸ்லீம்களை பயங்கரவாதத்தால் தான் அழிக்க வேண்டும் என்று சொன்னார். கேள்வி வருமே என்பதற்காக காவி அணியாமல் ஒரு நடுத்தர வர்க்கத்து குடும்பஸ்தரின் வேடம் பூண்டார். அடுத்து விஸ்வரூபத்தில் அவர் ஒரு நல்ல நேர்மையான முஸ்லீமுக்கு இலக்கணம் சொல்லி இருக்கிறார். 'நீ குரானைத் தொழு. ஜிகாதிகளைக் காட்டிக் கொடு. அமெரிக்காவின் அடியாளாக இரு. அணு ஆயுதங்களை அப்பாவி அமெரிக்காவின் மீது பிரயோகம் செய்ய முனையாதே. மனிதாபிமானமில்லாமல் இருக்காதே. சிறுவர்களை குண்டு கொடுத்து அனுப்பாதே. ஈவிரக்கமில்லாமல் கொலை செய்யாதே..' என்று ஒரு முஸ்லீமாக வந்து சொல்கிறார்.
ஆனால் பயங்கரவாதத்தில் ஈடுபடும் முல்லா ஒமர் மற்றும் அவரது குழுவை பயங்கரவாதத் தன்மையில் அழிக்கச் சொல்கிறார். 'ஒரே நேரத்தில் எத்தனை பேரை வேண்டுமானாலும் துவம்சம் செய். அனைவரையும் மரண அடி கொடு.. வெட்டிவீசு கண்களைப் பிடுங்கு.. கையை வெட்டு வாளால் சொருகு.. துப்பாக்கியால் கண்ணில் படுபவனை எல்லாம் போட்டுத் தள்ளு. இத்தனையும் ஒரே சண்டைக்காட்சி நேரத்தில் முடித்து விடு..' என்று ஆணித்தரமாக புரிய வைப்பதற்காக ஒரு சண்டைக்காட்சி வைத்திருக்கிறார். நியாயத்திற்காக கொடூர வன்முறையில் இறங்கு; நியாயத்தின் பேரால் பயங்கரவாதத் தாக்குதல் நடத்து என்கிறார். கமல்  ‘உன்னைப் போல் ஒருவன்’ படத்திலும், இந்தப்படத்திலும் ஒரு புனிதப்போர் நடத்தச் சொல்கிறார். அதாவது இவர் ஒரு புதியவகை ஜிகாதி. 
கருத்துச் சுதந்திரம் பாகம் - 6
கமலின் நியாயத் தீர்ப்பை அப்படியே எடுத்துக் கொள்வோம். அவர் சொல்கிறபடி பயங்கரவாதத்தில் ஈடுபடுவோரை பயங்கரவாதத்தால் அழிக்க வேண்டும்.
ஓசாமா இரட்டைக் கோபுரத்தைத் தகர்த்தவர் 2000 அமெரிக்கர்களைக் கொன்றார். அது கண்டிக்கத்தக்கது; ஏற்க முடியாதது. சரிதான். இதை வைத்தே அமெரிக்காவில் பல படங்கள் வந்துவிட்டன.
இப்ப கமலுக்கு ஒரு ஸ்கிரிப்ட் சொல்லுவோம். இந்த கதையை படமாக்க கமல் விரும்பினால் கதை இலவசம்.
இரட்டைக் கோபுரத் தாக்குதலிலிருந்து படத்தின் கதை விரிகிறது. பிளாஷ்பேக்கில் கேமரா ஆப்கானைக் காட்டுகிறது. இப்போது கதை.
ஆப்கனின் தலைநகரமான காபூலுக்கு உலகின் விதவைகளின் தலைநகரம் எனறு பெயர். கடந்த 30 ஆண்டுகாலப் போரில் 15 லட்சம் விதவைகள் அந்நாட்டில் உள்ளனர். அமெரிக்கப் படையும் அதன் கூட்டுப்படைகளும் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட ஆப்கானியர்களில் 37 சதவீதம் பேர் ஆண்கள். அவர்கள் அனைவரையும் விதிவிலக்கில்லாமல் தாலிபான்கள் என்றே வைத்துக் கொள்வோம். மீதி 63 சதவீதம் பேர் குழந்தைகளும் பெண்களும். இதயபலவீனம் உள்ளவர்களுக்காக இதை நாம் காட்சிப்படுத்தாமல் விடுவோம்.
15 லட்சம் விதவைகளின் கதைகள் எப்படியிருக்கும்? தகப்பன் இல்லாத 15 லட்சம் குடும்பங்களின் பிள்ளைகள் ஓயாத போரில் உணவுக்காக என்ன செய்யும்? படிப்புக்காக என்ன செய்வார்கள்? தன் தகப்பனைக் கொன்றவர்கள் மீது என்ன உணர்வைக் கொண்டிருப்பார்கள்?
அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடையால் மட்டும் ஈராக்கில் 5 லட்சம் குழந்தைகள் மாண்டனர். ஈராக்கை ஆக்கிரமித்து அதன் அதிபரை ஒரு போலி நீதிமன்றத்தால் கொன்றொழிக்கும் அமெரிக்காவின் நோக்கம் நிறைவேற கொல்லப்பட்ட மக்கள் பல லட்சம் பேர். பாலஸ்தீனம், லெபனான் என பட்டியல் நீளும் இந்த நாடுகளுக்குச் சென்றால் விதவிதமான கதைகள் கிடைக்கும்.
ஆப்கனில் ஒரு திருமணத்தில் குண்டு போட்டு 80 பேரையும், மற்றொரு விழாவில் குண்டு போட்டு 200 பேரையும் கொன்றது அமெரிக்கப் படை. அதை ஒரு சிறுவன் வர்ணிக்கிறான். “ நான் குண்டு சத்தம் கேட்டேன். விழித்துப் பார்த்தால் மருத்துவமனையில் கிடக்கிறேன். என் இரண்டு கால்களும் இல்லை. என் கால்களைப் பறித்தவர்களைப் பலி எடுப்பேன்”. கமல் இந்தக் காட்சியிலிருந்து கூட தங்களது படத்தைத் தொடங்கலாம். கதை இலவசம். 
கருத்துச் சுதந்திரம் பாகம் - 7
ஒரு பெரும் பணக்கார பின்னணி கொண்ட இளைஞன் ஒசாமாவை ரஷ்யாவுக்கு எதிராக முஜாகிதீன் படைகளுக்குத் தலைமை தாங்கப் பணித்தது அமெரிக்கா. அப்போது விடுதலை வீரனாக சித்தரிக்கப்ப‌ட்ட ஒசாமா, அமெரிக்காவின் அடியாளாக அரபுநாடுகளுக்கு எதிராக செயல்பட வேண்டுமென்ற அமெரிக்க நிர்பந்தத்தை உயிருக்கஞ்சாமல் எதிர்த்தான். அதற்கு தன் குடும்பத்தோடு தன் உயிரையும் விலையாகக் கொடுத்திருக்கிறான்.
ஓசாமாவின் லட்சியம் என்ன? அரபுலகம் அந்நிய ஆக்கிரமிப்பிற்கு ஆளாகக் கூடாது. அரபுலக மக்களின் எண்ணெய் ஆதாரம் அந்நியர்களால் களவாடப்படக் கூடாது என்பது தானே. அமெரிக்காவின் லட்சியம் என்ன? அரபுலகை அடிமைப்படுத்த வேண்டும்; உலகின் எண்ணை ஊற்றான அரபுலகை தனது பிடிக்குள் கொண்டுவர வேண்டும் என்பது தானே.
ஒசாமா 'எண்ணைய் வளங்கள் எமக்கே சொந்தம். நீ என்ன எண்ணை வயலுக்கு வந்தாயா? கிணறு தோண்டினாயா?' என்று கேள்வி கேட்கிறார். தமது சொந்தச் சகோதரிகள் கண்முன்னால் தெருக்களில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுவதற்கும், தம் சின்னஞ்சிறு குழந்தைகள் கொத்துக்குண்டுகளால் குதறி எறியப்பட்ட கோரத்தைப் பார்க்க சகியாமலும், மண்ணும் மக்களும் அடிமைப்பட்டப் புழுவாய் நெளியும் காட்சியைக் கண்டு குமுறி எழுந்தும் அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகளின் பொருளாதார - அரசியல் பயங்கரவாதத்திற்கு எதிராகக் களம் இறங்குங்களடா என் தம்பிகளே, செத்தால் பாடை பத்துமுறை வராது.. என்று பயிற்றுவிக்கிறார். இரட்டைக் கோபுரத்தைத் தாக்கி அழிக்கிறார்.
ஒசாமாவின் போராட்ட வழிமுறைகள் பயங்கரவாதத் தன்மை கொண்டதுதான். கொடிய துன்பங்களை விளைவிப்பவர்களுக்கு கொடிய தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்ற கமலின் தர்க்கம் தான் ஒசாமாவின் தர்க்கமும். கமலின் வரையைறையைத்தான் ஆப்கான் தேசத்துத் தாலிபான்கள் பயன்படுத்துகிறார்கள். ஆனால், தாலிபான்களை மட்டும் விமர்சிக்கும் கமல், நவீன வல்லரசுகளின் கொடூரமான பயங்கரவாதப் போரைப் பற்றி மௌனம் சாதிக்கிறார்.
ஒரு ஆய்வாளர் சொன்னது போல ‘தற்கொலை கார்குண்டு’ என்பது ‘ஏழைகளின் விமானப்படை’. ஆயுதம் தாங்கிய ரோபோக்களை ரத்தமும் சதையும் கொண்ட மனிதர்களைக் கொன்றொழிக்க அனுப்பும் வல்லரசுகளின் வக்கிரப்போர்களை எதிர்க்க கமலின் நியாயத்தைப் பொருத்துவோம்.. 63 சதவீதம் பெண்களையும் குழந்தைகளையும் கொன்ற செயல் பயங்கரவாதம் இல்லையா? பொதுமக்களைக் கொல்வது பயங்கரவாதம் எனும் போது, தம் நாட்டின் பொது மக்களைக் கொல்லும் வல்லரசுக்கு அந்த வலி எப்படியிருக்கும் என்று புரிய வைக்க ஒரு போராளிக் கூட்டம் எண்ணினால் அது கமலின் தர்க்கப்படி முழு நியாயம் தானே.
இஸ்லாமியப் போராளிகளின் பயங்கரவாதம் கூடாது என்று சொல்பவர், முதலில் அதனைத் தூண்டக் காரணமாக இருக்கும் அமெரிக்க மற்றும் நேட்டோ நாடுகளின் பயங்கரவாதத்தைத் தடை செய்தபிறகு பேசலாம். அல்லது இஸ்லாமிய நாடுகளின் எதிர்ப்பின் நியாயத்தை ஏற்றுக்கொண்டு, பயங்கரவாதமும் ஜனநாயக விரோத ஆட்சி முறையும் இஸ்லாமியப் போராளிகளின் விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்திவிடும் என்ற அக்கறையிலிருந்து சொல்லலாம். அப்போது ஏற்கலாம். ஆனால் அமெரிக்காவின் எடுபிடியாக நின்று கொண்டு பேசுபவர்களுக்கு எந்த தார்மீக உரிமையுமில்லை.
“யோக்கியர்களே கல்லெறியுங்கள்”
இஸ்லாமிய பயங்கரவாதம் என்று பொதுமைப்படுத்தும் வார்த்தையே கண்டிக்கத்தக்கது. அது குரான் படிப்பவர்களை எல்லாம் பயங்கரவாதி என்று அறிவிப்பு செய்கிறது. உலகிலேயே அதிகமாக முஸ்லீம்கள் இருக்கும் நாடான இந்தோனேசியாவில் பயங்கரவாதம் இல்லையே ஏன்? அங்கும் குரான் இருக்கிறது; இஸ்லாம் இருக்கிறது. ஆனால் எண்ணை இல்லை. அதனால் அங்கே அமெரிக்கா தாக்குதல் நடத்தவில்லை. அந்நாட்டை ஆக்கிரமிக்கவில்லை. எனவே முஸ்லீம்கள் ஜிகாத் நடத்தவில்லை. உலகிலேயே இரண்டாவதாக அதிக முஸ்லீம்கள் வசிக்கும் இந்தியாவில், முஸ்லீம்க‌ள் பயங்கரவாதத்தை கையிலெடுக்கவில்லை. நடக்கும் ஓரிரு சம்பவங்களும் இங்குள்ள பி.ஜே.பி.யும், ஆர்.எஸ்.எஸ்.சும் அவர்களை அழிக்க முயல்வதன் விளைவாக நடக்கின்றன. பாபர் மசூதிக்குப் பிந்தைய இந்தியாவையும் முந்தைய இந்தியாவையும் ஒப்பிட்டால் தெரியும். 
கருத்துச் சுதந்திரம் - 8
மற்றொரு விஸ்வரூபமாக, கருத்துச் சுதந்திரம் பற்றி வடஇந்திய ஊடகங்களும் தமிழ் ஊடகங்களும் கொதித்தெழுந்து விட்டன. நடிகர்கள், எழுத்தாளர்கள், பெண்ணியவாதிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலரும் கமலுக்குக் கருத்துச் சுதந்திரம் இல்லையா என்கின்றனர்.
அதிலும் தூய கருத்துச் சுதந்திரவாதிகளாக சிலர் கலைஞனுக்கு கருத்து வேலி கூடாது என்கின்றனர். சென்சார் போர்டே கூடாது என்கின்றனர். சமத்துவமற்ற சமுதாயத்தில் எது ஒன்றையும் வரம்பின்றி அனுமதிக்க முடியாது. ஒரு சமுதாயத்தின் உயர்ந்த அரசியல் விழுமியங்களால் அது கண்காணிக்கப்பட வேண்டும்.
இந்தியா மதச்சார்பற்ற நாடு என்றால் மதச்சார்பின்மை என்ற நுண்ணோக்கி கொண்டு அனைத்துக் கருத்துக்களும் கண்காணிக்கப்பட வேண்டும். இந்தியா சோசலிச சனநாயகக் குடியரசு என்று பிரகடனம் செய்யப்பட்டால் அதனடிப்படையில் அனைத்துக் கருத்துக்களும் கண்காணிக்கப்பட வேண்டும். மேலும் வரம்பற்ற கருத்துச் சுதந்திரம் என்பது பணபலமும், அதிகார பலமும் கொண்ட கும்பல்களுக்கு சேவை செய்யும் கருத்தாகும். மக்களிடம் ஊதுகுழல் கூட இல்லாத நிலையில் உலகின் அனைத்து ஊடகங்களையும் வைத்துள்ளவர்கள் யார்? வரம்பற்ற கருத்துச் சுதந்திரம், உண்மையில் குரலற்ற மக்களின் குரல்வளையை நெறிக்கும் தூக்குக் கயிறாகவே மாறும்.
முஸ்லீம் அமைப்புகளின் எதிர்ப்பைப் பொருத்தவரை அவர்களின் எதிர்ப்பும் கருத்துச் சுதந்திரத்தின் அங்கமாகவே பார்க்கப்பட வேண்டும். எந்தத் தரப்பானாலும் இவ்விதமான தவறான சித்திரிப்புகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழும் உரிமையுள்ளது. டேம்’99 என்ற படத்தின் தவறான சித்திரிப்புக்கு எதிராக தமிழகம் கிளர்ந்ததைப் போல், பாதிக்கப்படும் தரப்பு தமக்கெதிரான அவதூறுகளுக்காக தடை கோர உரிமையுள்ளது.
ஆனால் குரானையோ அல்லது முஸ்லீம் தலைவர்களையோ அல்லது அதன் மரபுகளையோ, பழக்க வழக்கங்களையோ எவ்விதத்திலும் விமர்சிக்கவே கூடாது என்பது கருத்துரிமைக்கெதிரானது; ஜனநாயக விரோதமானது. உலகில் நிலவும் அனைத்தின் மீதும் கருத்து சொல்லவும் விமர்சிக்கவும் அனைவருக்கும் உரிமை உள்ளது.
ஆனால் சொந்த ஆதாயத்துக்காக யாரை வேண்டுமானாலும் ஆதரிக்கவும், மதவாதப் பற்களை மறைத்துக்கொண்டு பொதுவாக விமர்சிப்பதாக நாடகமாடும் ஆசாமிகளுக்கும் மத அடிப்படைவாதிகளுக்கும் மற்ற மதங்களை விமர்சிக்க எவ்வித தார்மீக உரிமையுமில்லை. 
கருத்துச் சுதந்திரம் பாகம் - 9
பொய்யின் துணையுடன் பயங்கரவாத தர்க்கம் பேசும் கமல் சாரே!
இதோ உண்மை பேசுபவரின் 'பயங்கரவாத' தர்க்கத்தின் சுருக்கம்.
2004ல் அல்ஜசீரா தொலைக்காட்சியில் ஒசாமா பின்லேடன் அமெரிக்க மக்களுக்கு ஆற்றிய உரையின் சுருக்கம்.                           
“அல்லா போற்றி!
அமெரிக்க மக்களே!
நான் பேசத் தொடங்குமுன் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். பாதுகாப்பு என்பது மனித வாழ்வின் அசைக்க முடியாத தூண். 'நாங்கள் சுதந்திரத்தை வெறுக்கிறோம்' என்று புஷ் சொல்வது மோசடி. சுதந்திர மனிதன் தனது பாதுகாப்பைப் கெடுத்துக் கொள்ளமாட்டான்.
மற்றவர்களின் பாதுகாப்போடு விளையாடும் ஒரு செவிட்டுக் கொள்ளையனைத் தவிர வேறு யாரும் விளையாடவோ, தாம் பாதுகாப்பாக இருப்போம் என்று நம்பவோ மாட்டார்கள். அதே நேரத்தில் சிந்திக்கும் திறனுடையோர் பேரழிவு தாக்கும் போது அது மீண்டும் நடைபெறாமல் தடுக்க அதன் விளைவுகளை பரிசீலிப்பதற்கு கவனம் கொடுப்பார்கள்.
ஆனால் உங்களைப் பார்த்து ஆச்சரியப்படுகிறேன். செப் - 11ன் சம்பவங்களுக்கப் பிந்தைய நான்காம் ஆண்டில் நாம் இருக்கும் போதும் புஷ் இன்னமும் பேரழிப்பை நடத்திக் கொண்டிகருக்கிறார். உங்களை ஏய்த்து, உங்களிடமிருந்து உண்மையான விளைவுகளை மறைத்து வருகிறார். இவ்வாறு ஏற்கனவே நடந்ததே திரும்பவும் நடப்பதற்கு காரணங்களை உருவாக்குகிறார்.
ஆகவே அந்த முடிவை எடுத்தற்கான தருணங்களைப் பற்றிய உண்மையைச் சொல்கிறேன். அந்நிகழ்வுகளுக்குப் பின்னுள்ள கதையைச் சொல்கிறேன். தங்களின் பரிசீலனைக்காக...
அல்லா அறிவார். நாங்கள் அந்த கோபுரங்களைத் தாக்கும் நிலை ஒருபோதும் நேர்ந்திருக்கக் கூடாது என்பதை அல்லா அறிவார். அமெரிக்க - இஸ்ரேலிய கூட்டுப் படைகள் பாலஸ்தீனிலும் லெபனானிலும் உள்ள எமது மக்கள் மீது நடத்திய ஒடுக்குமுறையும் கொடுங்கோன்மையும் தாங்க முடியாததாக இருந்தது. அது என் மனதைப் பிசைந்தது.
1982ல் இஸ்ரேலியர் லெபனானை ஆக்கிரமிக்க அனுமதித்ததும் 6வது போர்க்கப்பலை அனுப்பியதும் தான் என் ஆன்மாவை நேரடியாக பாதிக்கத் தொடங்கியது. குண்டுவீச்சு தொடங்கியது. பலர் கொல்லப்பட்டனர்; பலர் படுகாயமுற்றனர். மீதி இருந்தவர்கள் அச்சுறுத்தப்பட்டு இடம்பெயர்க்கப்பட்டனர்.
கண் முன் ஓடும் அக்காட்சிகளை என்னால் மறக்க முடியாது. இரத்தமும் சிதறிய உறுப்புகளுமாய் பெண்களும் குழந்தைகளும் எங்கெங்கும் சிதறிக் கிடந்தனர். குடியிருந்தவர்களோடு சேர்த்து வீடுகள் அழிக்கப்பட்டன. எமது வீடுகளின் மேல் ராக்கெட் மழை பொழிந்து தகர்த்தது.
அந்தச் சூழ்நிலையைப் பார்க்கையில் ஆதரவற்ற நிலையில் கதற மட்டுமே திராணி கொண்ட ஒரு குழந்தையை ஒரு முதலை சந்திப்பது போல் இருந்தது. முதலை ஆயுதங்கலக்காத உரையாடலைப் புரிந்து கொள்ளுமா? உலகமே பார்த்தது. கேட்டது. ஆனால் ஏதும் செய்யவில்லை.
அந்தக் கடினமான தருணத்தில் என் மனதில் குமிழ்விட்ட எண்ணங்களை விளக்குவது கடினம். இறுதியில் அது கொடுங்கோன்மையை மறுதலிக்கும் தீவிர உணர்வை உண்டு பண்ணியது. ஒடுக்குமுறையாளர்களை தண்டிக்க வேண்டும் என்ற தீவிர வைராக்கியத்தைப் பிறப்பித்தது.
லெபனானின் இடிந்த கோபுரங்களை நான் பார்த்தபோது ஒடுக்குமுறையாளர்களை அவர்களது வழிமுறையிலேயே தண்டிக்க வேண்டுமென்றும் நமது குழந்தைகளையும் பெண்களையும் காக்கவும், நாம் ருசித்ததை அவர்களையும் ருசிக்க வைக்கவும் அமெரிக்காவின் கோபுரங்களை அழிக்க வேண்டும் என்று என் மனதிற்குப் பட்டது.
அந்த நாளில் தான், பெண்களையும் குழந்தைகளையும் திட்டமிட்டே கொல்வதும் ஒடுக்குமுறை செய்வதும் அமெரிக்காவின் உள்நோக்கமுடைய கொள்கை என்பது உறுதியானது. அழிவே சுதந்திரம் ஜனநாயகம் என்று போற்றப்ப‌ட்டு, எதிர்ப்பு என்பது பயங்கரவாதமாகவும் சகிப்பின்மையாகவும் சித்தரிக்கப்பட்டது.
இது, சீனியர் புஷ் மனிதகுலம் இதுவரைக் கண்டிராத அளவில் இராக்கில் குழந்தைகளை மொத்தப் படுகொலை செய்ததைப் போலவும், ஜீனியர் புஷ், ஒரு ஏஜென்டின் ஆட்சியை அகற்றுவதற்காகவும் இராக்கிலிருந்து எண்ணெயைச் சுரண்டவும் தனது கைப்பாவையை ஆட்சியலமர்த்துவதற்காகவும் இராக்கிலும் மற்ற பகுதிகளிலும் பல மில்லியன் பவுண்டு கணக்கான குண்டுகளை பல மில்லியன் குழந்தைகள் மீது வீசியதையும் பொருள்படுத்துகிறது.
எனவே அவர்களின் மாபாதகத் தவறுகளுக்கான பதில், பெரிய ஒளிவட்டத்தையும் இப்படிப்பட்ட பிம்பங்களையும் கொண்டவர்கள் மீது செப்- 11 ஆக வந்தது. தனது சரணாலயத்தை ஒருவன் காக்க முற்பட்டதற்காக இதில் குற்றம் சொல்லலாமா?
தனது ஆக்கிரமிப்பாளனை தக்க வழிமுறைகளில் தண்டித்து தன்னைத் தற்காத்துக் கொள்வது ஆட்சேபிக்கத்தக்க பயங்கரவாதமா? அப்படித்தான் என்றால் எமக்கு வேறு வழியில்லை.
முடிவாக ஒன்றைச் சொல்கிறேன். உங்களின் பாதுகாப்பு புஷ்ஷின் கையிலோ ஜான் கெர்ரியின் கையிலோ அல்கொய்தாவின் கையிலோ இல்லை. அது உங்கள் கையில் தான் இருக்கிறது. எமது பாதுகாப்போடு விளையாடாத எந்த அரசும் தானாகவே அதன் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்திக் கொள்கிறது.
அல்லாவே பாதுகாவலன்.. உதவியாளன்.. உங்களுக்குப் பாதுகாவலனோ உதவியாளனோ இல்லை. இந்த வழிகாட்டலை பின்பற்றுவோருக்கே பாதுகாப்பு.”
-              ஓசாமா, Aljazeera.net (online publication), Doha, Qatar, October 30, 2004 
இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கும் பாடல், நாயகன் விஸ்வநாதன் (எ) கமலைவிட, ஒசாமா பாத்திரத்துக்கும் ஒமர் பாத்திரத்துக்கும் தான் மிகப் பொருத்தம்.
“யாரென்று தெரிகின்றதா
இவன் யாரென்று தெரிகின்றதா
இவன் யாருக்கும் அடிமையில்லை
யாருக்கும் அரசனில்லை’
ஊரைக்காக்கும் போருக்கு ஒத்திகை செய்கின்றோம்
சாவே எங்கள் வாழ்வென்று சத்தியம் செய்கின்றோம்
பூமியைத் தாங்க வரம் கேட்கின்றோம்
புயலை சுவாசிக்க வரம் கேட்கின்றோம்
போர்களை நாங்கள் தேர்ந்தெடுக்கவில்லை
போர்தான் எங்களைத் தேர்ந்தெடுத்துக்கொண்டது
நீதி காணாமல் போர்கள் ஓயாது..”
கருத்துச் சுதந்திரம் பாகம் - கடைசி.
கமலின் விஸ்வரூபம் உலக அர்த்தத்தில் அமெரிக்க பயங்கரவாதத்திற்கு அடியாள் வேலை செய்கிறது. இந்திய அர்த்ததில் வளர்ந்துவரும் இந்துத்துவ பயங்கரவாதத்திற்கு கொம்பு சீவுகிறது. தமிழ்நாட்டு அர்த்தத்தில் மதுரையையும் கோவையையும் குறிவைக்கச் சொல்கிறது.
கமல் தனது திரைப்படம் வெற்றியடைவதை ஒரு வியாபாரியின் துல்லியத்துடன் திட்டமிடுகிறார். இந்தியளவில் முஸ்லீம் வெறுப்புக்கும் அமெரிக்க மோகத்திற்கும் ஒரு சந்தை வாய்ப்பு இருப்பதை உள்ளுணர்வாக அறிந்து வைத்திருக்கிறார். அதைத் தொடர்ந்து திரைப்படமாக்கி வருகிறார். அதற்காக எந்த நியாயத்தையும் குழிதோண்டிப் புதைக்கவும் தயாராக இருக்கிறார். ஒரு வகை பயங்கரவாதத்தை ஆதரிக்கிறார்.
ஆஸ்கர் விருது வாங்குவது அவருக்கு வாழ்வின் லட்சியமாக இருக்கிறது. சென்ற முறை “ஹர்ட் லாக்கர்” என்ற திரைப்படம் ஆஸ்கர் விருது வாங்கியது. ஈராக் போரை நியாயப்படுத்தி எடுக்கப்பட்ட படம் அது. கமல் சார் அந்தப் போட்டியில் இறங்கிவிட்டார். கொஞ்சம் மாற்றி அமெரிக்காவின் ஆப்கன் போரை நியாயப்படுத்தி எடுத்தாலாவது கொடுக்க மாட்டார்களா என்ற ஆசைதான். ஆசை வெட்கம் மட்டுமல்ல, உண்மையும் அறியாது போலும். மனிதப் பிணங்களின் மீது டாலர்கள் புரள்வதைப் பார்த்து அதன் விளம்பர வியாபாரத்தில் இறங்கிவிட்டார். அது அவருக்கு சாகச வெற்றியாகத் தெரிகிறது. நமக்கு அது சவப்பெட்டி வியாபாராமாகத் தெரிகிறது. 
“தீயை, பெருந்தீ கொண்டு அணைக்காதே
 காயத்தை ரத்தத்தால் கழுவாதே” – ஜலாலுதீன் ரூபி.
               
“யாரென்று தெரிகின்றதா          
இவர் யாரென்று தெரிகின்றதா
எந்த ரூபம் எடுப்பான்
எவருக்குத் தெரியும்
சொந்த ரூபம் மாற்றி மாற்றி
எடுப்பான் விஸ்வரூபம்.”              நன்றி – வைரமுத்துவுக்கு           
http://www.badrkalam.blogspot.com/2013/01/blog-post.html

Thursday, 14 February 2013

சீறிப்பாயும் அஸாத் சாலி ! நேர்காணல் (ஓடியோ)

பலியாடுகளையே ஜ. உலமா அனுப்பியது : பொதுபல சேனா!


நேற்றைய தினம் டி.என்.எல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய கலந்துரையாடலை அடுத்து ஜம் இயத்துல் உலமா ஏன் இந்நிகழ்ச்சியில் பங்கு கொள்ளவில்லை எனும் கேள்வி ஒவ்வொரு இலங்கை முஸ்லிமின் மனதிலும் எழுந்துள்ளது. இன்றைய நிலையில் வெறும் பொதுபல சேனா எனும் அமைப்பின் ஹலால் எதிர்ப்பு எனும் நிலை மாறி பல சிங்கள பெளத்தவாத இயக்கங்களின் முஸ்லிம் எதிர்ப்பாக விஸ்வரூபம் எடுத்து வரும் சமூகப் பிரச்சினைகளைக் கையாள்வதும் உண்மைகளை வெளிக்கொண்டுவருவதும் கூட ஊடகங்களின் கடமையாகும். அந்த வகையில் இது தொடர்பாக நாம் பொதுபல சேனாவை இன்று (13-12-2013 , இலங்கை நேரம் 17.30 ) தொடர்பு கொண்டு  நேர்காணல் ஒன்றை நேரடியாக அதன் முகவரியாக விளங்கும் அத்தேஞான சேர தேரரிடமே மேற்கொண்டிருந்தோம். அதன் போது நாம் கேட்ட கேள்விகளும் அவர் தந்த பதில்களையும் இங்கே பிரசுரிக்கிறோம்.
இது தொடர்பாக நாம் ஜம் இயத்துல் உலமாவிற்கும் அறிவித்திருப்பதோடு அவர்கள் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டிற்கான விளக்கத்தையும் தரும்படி தொடர்பு கொண்டிருக்கிறோம். எனினும், இப்பதிவு மேற்கொள்ளப்படும் வரை எமக்கு எந்தப் பதிலும் கிடைக்காத நிலையில் இதனைப் பிரசுரிக்கிறோம்.  ஜம் இயத்துல் உலமாவின் பதில் கிடைக்குமிடத்து அதனை வாசகர்களுக்காக இணைத்துக்கொள்வோம்.
நேர்காணல் :
“முதலில் எமக்காக நேரம் ஒதுக்கி இணைந்து கொண்டமைக்கு நன்றி உங்களுக்கு, இன்றைய நிலையில் நம் நாட்டில் நிலவும் இனங்களுக்கிடையிலான பதட்ட சூழ்நிலை மற்றும் நேற்றைய தினம் டி.என்.எல் தொலைக்காட்சியில் உங்கள் கலந்துரையாடல் சம்பந்தமாகவும் நேரடியாக சில விளக்கங்களைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறோம்”.
கேள்வி: பொது பல சேனா முஸ்லிம்களையும் ஹலாலையும் எதிர்க்கிறது என்பது இன்று வெளிப்படையாக எங்களுக்கு இருக்கும் கவலை, இதை நீங்கள் ஏன் எதிர்க்கிறீர்கள் என்பது தொடர்பாக பல விளக்கங்கள் தருகிறீர்கள், எனினும் அது குழப்பகரமாகவே இருக்கிறது. நீங்கள் உண்மையில் முஸ்லிம்கள் ஹலால் உணவை உண்பதை எதிர்க்கிறீர்களா அல்லது ஜம் இயத்துல் உலமா இதில் ஈடுபட்டதனால் அதனை எதிர்க்கிறீர்களா?
தேரர்: முதலில் எம்மோடு தொடர்பு கொண்டு இதைப்பற்றிப் பேசவும்  உரையாடவும் வந்தமைக்கு உங்கள் ஊடகத்திற்கு நன்றி. நான் நேரடியாகவே சொல்வதானால் ஜம் இயத்துல் உலமா எனும் அமைப்பு கிட்டத்தட்ட “பிரபாகரனின்” எல்.டி.டி.ஈ போன்றது. அதன் கொள்கைகளும் செயற்பாடுகளும் இந்த நாட்டினைப் பிளவு படுத்தும் வகையிலும், இனங்களுக்கிடையிலான ஒற்றுமையைக் குழப்பும் வகையிலும் இருக்கிறது என்பதே எமது ஆதங்கம். மற்றும் படி முஸ்லிம்கள் ஹலால் உணவை உண்பது அவர்களது உரிமை அதை நாங்கள் நிராகரிக்கவில்லை.
கேள்வி: ஹலால் உணவை உண்பது முஸ்லிம்களின் உரிமையென்றால் அதனை நெறிப்படுத்த ஒரு அமைப்பு இருப்பது அவசியம் தானே? அதைத்தானே ஜம் இயத்துல் உலமா செய்கிறது? அப்படியானால் நீங்கள் அவர்களை எதிர்ப்பதாக முஸ்லிம்களின் உரிமையை மீறுவது போன்றல்லவா இது இருக்கிறது?
தேரர்: இல்லை, நீங்கள் தவறான தகவலை வெளியிடக்கூடாது. ஜம் இயத்துல் உலமா சபை 3000 பேரை வேலைக்கமர்த்தி ஹலால் எனும் ஒரு விடயத்தைப் புகுத்தி நாட்டில் இருக்கும் சமூகங்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்துகிறது. இந்த நாட்டின் சட்டங்கள் அனைவருக்கும் பொதுவானது, அப்படியிருக்க ஜம் இயத்துல் உலமா எப்படி ஹலால் உணவுகள் தான் சுத்தமானது என்று அறிவித்து அதனை சிங்கள மக்கள் மத்தியில் பலவந்தமாகப் புகுத்த முடியும்? ஒரு பேச்சுக்காகக் கேட்கிறேன், நீங்கள் பன்றி இறைச்சி உண்பதில்லை, ஆனால் அதை உண்ண விருப்பம் உள்ளவர்கள் இருப்பார்கள், அதே போன்று மாட்டிறைச்சி உண்ணும் முஸ்லிம் அல்லாதவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் சேர்ந்து எங்களுக்கு ஹலால் இல்லை எனும் சான்றிதழ் வேண்டும் என ஒரு அமைப்பை ஆரம்பித்தால் என்ன நடக்கும்? இந்துக்கள் எல்லோரும் சேர்ந்து மாட்டிறைச்சியை இந்த நாட்டில் தடை செய்ய வேண்டும் என்று கேட்டால் என்ன நடக்கும்? நாட்டிற்குள் இப்படி ஒவ்வொருவரும் தத்தமது சமய முறைகளுக்கேற்ப சட்டங்களைக் கொண்டுவர விட முடியுமா? சொல்லுங்கள் பார்க்கலாம்.
கேள்வி: நாட்டின் சட்டதிட்டங்களைப் பாதுகாக்க அரசு இருக்கிறது, இப்போது நீங்கள் நம்பும் இந்த விவகாரம் தொடர்பாக அரசிடம் முறையிட்டீர்களா? அதற்கு அவர்கள் என்ன பதில் தந்தார்கள்?
தேரர்: ஆம், நான் நேரடியாகவே இந்த விடயத்தினை ஜனாதிபதியிடம் தெரிவித்தேன், அதற்கு அவர் இதை ஜம் இயத்துல் உலமாவிடமும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறினார். நாங்களும் இதைப்பற்றி அவர்களிடம் எத்தனையோ தடவை பேச முனைந்து விட்டோம் ஆனால் அவர்கள் ஓடி ஒளிக்கிறார்கள் .அதற்கான காரணம் எமக்கும் தெரியவில்லை.
கேள்வி: அப்படியானால் இது அரசு சம்பந்தப்பட்ட விடயம் தானே? அரசு ஏன் இந்த விடயத்தைக் கையாளக்கூடாது? அதை ஏன் நீங்கள் கையிலெடுத்திருக்கிறீர்கள்?
தேரர்: நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம், அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகக் கூறுகிறது, இது குறித்து மேலதிக தகவல்களையும் ஆதாரங்களையும் நாங்கள் சேர்த்துக் கொடுக்கிறோம்.
கேள்வி: ஹலால் சான்றிதழை யாருக்கும் பலவந்தமாக ஜம் இயத்துல் கொடுக்கவில்லை, மாறாக நாடிவருவோருக்குத்தான் அது வழங்கப்படுவதாக ஜம் இயத்துல் உலமா தெளிவாகக் கூறுகிறதே?
தேரர்: இது சுத்தமான பொய்! நான் ஏற்கனவே கூறியது போன்று 3000 பேர் கொண்ட குழுவொன்று இதில் இயங்குகிறது, அவர்கள் ஒவ்வொரு நிறுவனத்துக்கும் சென்று ஹலாலின் மகத்துவம் என்று மார்க்கெட்டிங் (சந்தைப்படுத்தல்) செய்கிறார்கள், அவ்வாறுதான் எல்லா நிறுவனங்களும் இதில் மாட்டிக்கொள்கின்றன. சிங்கள மக்களை இப்படி மாட்டிக்கொள்ள இனியும் அனுமதிக்க முடியாது.
கேள்வி: முஸ்லிம்கள் ஹலால் பொருட்களை விரும்பி வாங்குவார்கள், மத்திய கிழக்கு போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் ஹலால் சான்றிதழ் தேவைப்படுகிறது. எனவே, நாடி வருவோருக்கு மாத்திரம் தான் ஹலால் சான்றிதழ் வழங்கப்படுகிறது என்று ஜம் இயத்துல் உலமா கூறுகிறதே?
தேரர்: இதுவெல்லாம் நம்பத்தகுந்த கதையல்ல, இந்த நாட்டில் இருக்கும் உணவுப் பண்டங்களுக்கு ஹலால் சான்றிதழ் கொடுக்க ஜம் இயத்துல் உலமா யார்? அவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?
கேள்வி: அதாவது உங்கள் கருத்துப்படி ஜம் இயத்துல் உலமா எந்தவித அரச அனுமதியுமில்லாமல் இதைச் செய்கிறதா?
தேரர்: அதைத்தானே நாங்கள் சொல்கிறோம், ஜம் இயத்துல் உலமா தன்னிச்சையாக இதைச் செய்கிறது, அதன் மூலம் சமூகங்களுக்குள் பிளவும் நாட்டில் ஒரு குறிப்பிட்ட மதத்தவருக்காக புதிய சட்டமுமாக இருப்பதை எவ்வாறு அனுமதிக்க முடியும்? முஸ்லிம்கள் எம்மோடு எப்போதும் சகோதரத்துவத்துடன் தான் வாழ்கிறார்கள் ஆனால் இந்த ஜம் இயத்துல் உலமா தான் அதைப் பிரிக்கிறது. எமக்கு முஸ்லிம்களது சமய வழிமுறைகளில் எந்தக் குரோதமும் இல்லை. அப்படித்தானே இவ்வளவு காலம் வாழ்ந்திருக்கிறோம். இப்போது திடீர் என முளைத்த ஜம் இயத்துல் உலமா எவ்வாறு இந்த நாட்டை ஒரு சமயத்துக்கு ஆதரவான சட்டங்களுக்கு அடிபணிய வைக்க முடியும்? அண்மைக்காலங்களில் ஜம் இயத்துல் உலமா பொருளாதார ரீதியாக வேகமாக முன்னேறியிருக்கிறது, அதற்கான பணம் எங்கிருந்து வந்தது? இது ஒரு சிங்கள பெளத்த நாடு, இந்த நாட்டில் சகல இனங்களும் வாழ்வதற்கு சமமான சட்டதிட்டங்கள் இருக்கிறதே தவிர ஒரு இனத்தின் தேவைக்காக நாட்டின் வளங்களை சுரண்ட அனுமதிக்க முடியாது.
கேள்வி: சரி, நேற்றைய பகிரங்க விவாதம் குறித்து நீங்கள் ஜம் இயத்துல் உலமாவுக்கு அறிவித்தீர்களா? அல்லது அவர்களை அழைத்திருந்தீர்களா?
தேரர்: ஜம் இயத்துல் உலமா சபை ஒளித்துப் பிடித்து விளையாடியதே தவிர ஒழுங்கான பதில் தரவில்லை. நேற்றைய தினம் நிகழ்ச்சி நடைபெற இருக்கும் வரை நாங்கள் முயன்றோம். நிகழ்ச்சியை நடத்திய சுகத் முடியாமல் போன கட்டத்தில் தான் வேறு மூவரை அணுகினார். அந்த மூவரையும் பலியாடுகளாகத்தான் அனுப்பியது ஜம் இயத்துல் உலமா.
கேள்வி: அவர்கள் மூவரையும் அனுப்பியது யார்? ஜம் இயத்துல் உலமாவா?
தேரர்: இல்லை, ஆனால் இப்போது பதில் சொல்கிறோம், அப்போது பதில் சொல்கிறோம் என்று காலத்தை இழுத்தடித்து விட்டு இறுதி வரை ஜம் இயத்துல் உலமா பதில் சொல்லாததால் சுகத் மூலம் தான் இவர்கள் அழைக்கப்பட்டார்கள். என்னைப் பொறுத்தவரை அவர்கள் வெறும் பலியாடுகள்.அவர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை. நாம் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லும் திறனோ தகவலோ அவர்களிடம் இருக்கவில்லை. ஜம் இயத்துல் உலமா திரை மறைவில் இருந்து வேடிக்கை பார்க்கிறது, ஆனால் அவர்களால் இந்த நாட்டில் சமூகங்களுக்கிடையில் பிளவு ஏற்படுகிறது, அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
கேள்வி: நல்லது, உங்கள் பேட்டிகள் மற்றும் அறிக்கைகளில் கூட நீங்கள் அடிக்கடி “சம்பிரதாய முஸ்லிம்கள்” என்று ஒரு பிரிவினர் பற்றிக் குறிப்பிடுகிறீர்கள் அவர்கள் யார்?
தேரர்: நாங்கள் சம்பிரதாய முஸ்லிம்கள் என்று குறிப்பிடுவது இந்த நாட்டில் சமத்துவத்துடன் காலகாலமாக வாழும் முஸ்லிம்களை ஆனால் ஜம் இயத்துல் உலமா இறக்குமதி செய்யும் வஹாபிஸமும், ஸலபிசமும் தான் அவர்களையும் எம்மிடமிருந்து பிரிக்கிறது.
கேள்வி: நல்லது, உங்களிடம் இறுதியாக ஒரு கேள்வி, இப்போது நாங்கள் விபரம் அறியும் நோக்கிலேயே உங்களைத் தொடர்பு கொண்டோம். எனினும், முஸ்லிம் மக்களுக்கு உங்களிடம் கேட்பதற்கு ஏராளமான கேள்விகள் இருக்கிறது. அவற்றை எமது வாசகர்களிடமிருந்து பெற்றுத்தந்தால் அவற்றுக்கு நீங்கள் பதிலளிப்பீர்களா?
தேரர்: நிச்சயமாக பதிலளிப்பேன், நீங்கள் கேள்விகளைக் கொண்டு வாருங்கள், அதற்கான பதில்களை எனது குரலிலேயே ஒலிபரப்புங்கள் அதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. முஸ்லிம் மக்கள் எம் சகோதரர்களே அவர்களை நாங்கள் பிழையாக நினைக்கவில்லை அவர்களுக்கு எங்களிடம் கேள்வியிருந்தால் அதற்கான பதிலை எந்நேரத்திலும் தரத் தயாராக இருக்கிறோம்.
நேர்காணலின் போது தேரர் நிதானமாகக் காணப்பட்டாலும் ஒரு சில இடங்களில் உணர்ச்சிவசப்பட்டதுடன் ஜம் இயத்துல் உலமா சார்ந்த  இடங்களில் ஜம் இயத்துல் உலமாவை சாடும் போது “சங்கடத்துக்கரிய” வார்த்தைகளையும் பிரயோகித்ததனால் அதன் ஒலி வடிவம் இங்கு தவிர்க்கப்படுகிறது. எனினும், எமது கேள்விகளுக்கு பதில் தர அவர் இணங்கியிருப்பதனால் வாசகர்கள் உங்கள் கேள்விகளை ஆங்கிலத்திலோ, தமிழிலோ, சிங்களத்திலோ இங்கே பின்னூட்டம் மூலம் அல்லது எமது பிரதான மின்னஞ்சலுக்கு வேண்டுமானாலும் அனுப்பலாம்.
பொதுபல சேன அமைப்பினுள் மும்மொழிகளிலும் தேர்ச்சிபெற்றவர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் ஞாயிறன்று தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் இது குறித்த கலந்துரையாடல் ஒன்றிலும் அவர்கள் பங்கெடுக்கவிருப்பதாகவும் அறிய முடிகிறது.
எவ்வாறாயினும், பொதுபல சேனாவின் கையில் நாட்டின் சட்டத்தைக் கையளிக்க சமாதானத்தை விரும்பும் எந்த இலங்கையரும் விரும்பப் போவதில்லை. பொதுபல சேனா ஒரு அமைப்புத்தானே ஒழிய அது நாட்டின் காவலர்களில்லையே என்று நாம் சுட்டிக்காட்டிய போது நாம் பெளத்த மதத்தின் காவலர்கள் என்று அவர்கள் கூறுகிறார்கள், அதே நேரம் அவர்களின் முழு நேர வேலையே ஜம் இயத்துல் உலமாவை எதிர்ப்பதாகவும் இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இது இலங்கையின் முஸ்லிம் சமூகத்தைப் பெருமளவு பாதிக்கிறது ! முஸ்லிம்களின் மனது புண்பட்டிருக்கிறது ! அதைப் பார்த்து அரசும் மெளனமாக இருக்கிறது எனும் உண்மையையும் மறுக்க முடியாது.
நன்றி - சோனகர் டொட் கொம்    http://www.sonakar.com/2013/02/

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...