ஜம்இய்யதுல் உலமா தலைவர் றிஸ்வி முப்திக்கு
ஒரு திறந்த மடல்!
சிலிங்கோ இலாப பங்கீட்டு நிறுவனம் முஸ்லிம்களின் பலகோடி ரூபாய்களுக்கு மோசடி இழைத்துள்ளது. இதற்கு யார் காரணம்?
உலமா சபையின் ஹலால் பத்வாவை நம்பி பலகோடி ரூபாய்களை சிலிங்கோ இலாப பங்கீட்டு நிறுவனத்தில் வைப்பிலிட்ட அப்பாவி முஸ்லிம்கள் பரிதவிப்பு!
இன்று பணத்தை இழந்தோர் நிர்க்கதியற்று நடுத்தெருவில்...!!
பல்லாயிரம் ரூபாய்களை சம்பளமாகப் பெற்று சிலிங்கோ இலாப பங்கீட்டு நிறுவனத்தில் ஆலோசகர்களாக கடமை புரிந்த உலமா சபை அங்கத்தவர்கள் ஆழ்ந்த மௌனம்!
குற்றவாளிகளும் அதற்குத் துணைபோனவர்களும் தண்டிக்கப்பட வேண்டும்!
29 மே 2012
.
அல்ஹாஜ் ரிஸ்வி முப்தி அவர்கள்
தலைவர்,
அகில இலங்கை ஜம்இய்யததுல் உலமா
கொழும்பு 10
அஸ்ஸலாமு அலைக்கும்
இந்தக்கடிதத்தை நாம் மிகுந்த கவலையுடன் எழுதுகின்றோம். எமது எண்ணற்ற மரியாதை மற்றும் வேண்டுதல்கள் இடம்பெற்ற போதும் ஸ்ரீலங்காவின் இஸ்லாமிய வங்கி என நன்கு அறியப்பட்ட சிலிங்கோ இலாப பங்கீட்டு கம்பனியில் முதலீடு செய்தவர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு அகில இலங்கை ஜம்இய்யததுல் உலமா சபை இதுவரை எத்தகைய முயற்சிகளையும் செய்யவில்லை.
கடந்த 2009 செப்டம்பர் மாதம் முதல் நாம் அகில இலங்கை ஜம்இய்யத்தல் உலமா சபையின் நிர்வாக குழுவை பல தடவைகள் சந்தித்துள்ளோம்.
அப்போதெல்லாம் மேற்படி இலாப பங்கீட்டில் முதலீடு செய்தவர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் விடயத்தில் அவர்கள் சார்பாக அகில இலங்கை ஜம்இய்யத்தல் உலமா சபை முனைப்புடன் செயற்படும் என ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஆனாலும் இதற்கான எந்த வித அடிப்படை அழுத்தங்களையோ முயற்சிகளையோ மேற்படி முதலீட்டாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அகில இலங்கை ஜம்இய்யத்தல் உலமா சபை முன்னெடுக்கவில்லை. இதன் காரணமாக அப்பாவி முதலீட்டாளர்கள் தொடர்ச்சியாக போராடி தமது பணத்தை மீளப்பெறுவதற்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
சிலிங்கோ இலாப பங்கீட்டு பிரிவும்;
அகில இலங்கை ஜம்இய்யத்தல் உலமா சபையின் பத்வா பிரச்சாரமும்
ரமழான் மாதத்தின் ஸஹர் வேளையில் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையூடாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பல அங்கத்தவர்கள் சிலிங்கோ இலாப பங்கீட்டு பிரிவை ஆர்வமூட்டி பிரச்சாரம் செய்தார்கள் என்பது மிகவும் தெரிந்த விடயம். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை அங்கத்தவர்கள் சிலிங்கோ இலாப பங்கீட்டு பிரிவைப்பற்றி விளம்பரப்படுத்தியதோடு முஸ்லிம்களை அதில் முதலீடு செய்யும்படி ஆலோசனையும் வழங்கினார்கள். பல சந்தர்ப்பங்களில் ; சிலிங்கோ இலாப பங்கீட்டு பிரிவின் கிளைகளை நாடு தோறும் திறப்பதற்காக அகில இலங்கை ஜம்இய்யத்தல் உலமா சபை அங்கத்தவர்கள் சிலிங்கோ இலாப பங்கீட்டு பிரிவின் முகாமைத்துவத்துடன் கலந்து கொண்டனர்.
இவற்றை திறந்து வைத்த பின் உலமாக்கள் ஆற்றிய உரைகள் அப்பாவி முஸ்லிம்களை இந்த நிறுவனத்தின் பால் ஈர்த்தன. பொதுவாக முஸ்லிம் சமூகம் வங்கி உரிமையாளர்கள் பற்றி ஓரளவே தெரிந்திருந்த நிலையில் சமயத்தலைவர்கள் சமூகத்தை சரியான பாதையில் கொண்டு செல்லக்கூடியவர்கள் என உயரிய மதிப்பை அளித்ததுடன் அவர்கள் மீது நம்பிக்கையும் வைத்திருந்தனர்.
சரியாக இயங்காத உலமா சபையின் ஷரீயா பிரிவு
சிலிங்கோ இலாப பங்கீட்டு நிறுவனம் தனது பணமாற்றுதல்களில் இஸ்லாமிய வங்கி நடைமுறையை பேணுகிறதா என்பதை கவனிப்பதற்காக அகில இலங்கை ஜம்இய்யத்தல் உலமா சபை ஷரீயா பிரிவை நியமித்தது.
இதன் அங்கத்தவர்களாக மறைந்த நியாஸ் மௌலவி, யூசுப் முப்தி, அப்துல் நாசர் மௌலவி, சலாஹுத்தீன் மௌலவி, பாசில் பாரூக், லாபிர் மௌலவி ஆகியோர் இடம் பெற்றனர்).
கவலைக்குரிய விடயம் என்னவென்றால் மேற்படி ஷரீயா பிரிவு தமது கடமையை சரிவர நிறைவேற்றவில்லை என்பதுடன் இது விடயங்களில் அறிவீனமாகவும், கவலையீனமாகவும் நடந்து கொண்டது என்பதே.
ஷரீயா பிரிவால் ஏற்பட்ட மறுக்க முடியாத சில விளைவுகள் பின்வருமாறு
1.
1988ம் ஆண்டின் நிதிச்சட்டத்தின் படி மத்திய
வங்கியில் பதியப்படாத எந்தவொரு நிறுவனமும்
பொது
மக்களிடமிருந்து பணத்தை பெற முடியாது.
சிலிங்கோ இலாப பங்கீட்டு பிரிவை நிதி
சட்டத்தின்படி மத்திய வங்கியில் பதிவு
செய்யப்படவுமில்லை என்பதுடன் சிலிங்கோ இலாப
பங்கீட்டு பிரிவை நாட்டின் அடிப்படை சட்டத்தை
மீறியுள்ளது.
நாட்டின்அடிப்படை சட்டத்தை மீறிய
ஒரு நிறுவனத்தில் பணத்தை வைப்பிலிடுமாறு அகில
இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை பத்வா
வழங்கியதன் மூலம் இந்த சட்டவிரோத செயலுக்கு
அதரவளித்து
உதவி செய்து இந்நாட்டின்
சட்டப்படி குற்றமிழைத்திருக்கிறது. வளர்த்தது
என்பது ஆச்சர்யமாக உள்ளது.
2.
உலமா சபையால் ஹலால் பத்வா வழங்கப்பட்ட சிலிங்கோ இலாப பங்கீட்டு பிரிவு பல சந்தர்ப்பங்களில் முஸ்லிம்களின் பணத்தை ஹலாலான வர்த்தக நடவடிக்கைகளில் முதலீடு செய்யாமல் ஹராமான வர்த்தக நடவடிக்கைகளில் முதலீடு செய்திருப்பது அம்பலத்திற்கு வந்திருக்கிறது.
முஸ்லிம்களால் ஹலால் என நம்பி வைப்பிலிடப்பட்ட பணத்தை சிலிங்கோ இலாப பங்கீட்டு பிரிவு கொழும்பி லுள்ள பிரபல இரவு விடுதிகளில்
(Night Club) களில் முதலீடு செய்து அவற்றிலிருந்து அதிகளவு இலாபங்கள் பெற்றிருக்கிறது.
இந்த ஹராமான பணம் உலமா சபையின் பத்வாவை நம்பி வைப்பிலிட்ட முதலீட்டாளர்களுக்கு அவர்களின் இலாபமாகவும் வழங்கப்பட்டிருக்கிறது.
இதிலிருந்து ஹலாலான உழைப்பை விரும்பும் நம்பிக்கையாளர்களான முஸ்லிம்கள் மீது உலமா சபை யின் ஷரீயா பிரிவும் துரோகம் செய்துள்ளது என்பது மிகத்தெளிவாக தெரிகிறது.
3.
உலமா சபையின் ஷரீயா பிரிவின் கடமைகளில் ஒன்றுதான் கொந்தராத்து மற்றும் உடன்படிக்கைகள் அல்லது விசேட பண மாற்றுதலில் சட்டப்படியான ஏனைய ஆவணங்கள் போன்றவற்றை பொருத்தமான ஒப்பு நோக்குதலும் நிர்ணய படுத்தலுமாகும். (ஷரியாவுக்கு பொருத்தமான மக்கள் குத்தகை வருடாந்த அறிக்கையிலிருந்து பெறப்பட்டது)
4.
சிலிங்கோ இலாப பங்கீட்டு பிரிவின் மூலம் முதலீடு செய்யப்பட்ட அல்லது கடன் வழங்கப்பட்டவை சிலிங்கோ குழுமத்தின் கம்பனிகளாகும். இந்த சிலிங்கோ கம்பனிகள் ஷரீயா வழிமுறைக்கெற்ப தமது வியாபாரங்களை கொண்டுள்ளதா என்பதற்கு (இன்று வரை) எந்த ஆதாரமும் இல்லை. மாறாக உலமா சபையின் ஷரீயா பிரிவு இத்தகைய அனைத்து பண மாற்றுதல்களையும் அனுமதித்ததுடன் அவற்றுக்கு சாட்சியாகவும் இருந்துள்ளது.
5.
மேலும் இங்கு குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் சிலிங்கோ இலாப பங்கீட்டு பிரிவுக்குரிய ஷரீயா நிர்வாகத்தில் சேவையில் இருந்த சில உலமாக்கள் தங்களுக்கான தனிப்பட்ட கடன்களையும் பெற்றிருந்தார்கள்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை என்பது அதன் ஷரீயா நிர்வாக அங்கத்தவர்களின் மிகச்சிறந்த ஒழுக்க மேன்பாட்டை கொண்டிருக்க வேண்டும் என நாம் நம்புகிறோம். ஆனாலும் சாதாரண நிகழ்வுகளின் போதும் விளக்கங்களின் போதும் நீங்கள் தனிப்பட்ட இலாபங்களுக்குள் நுழைந்துவிட்டால் மூன்றாவது தரப்பின் நன்மைக்காகன குறிக்கோளின் அவசியத்தை நடைமுறைப்படுத்த உங்களால் முடியாது.
ஷரீயா பிரிவு தமது கடமையை சரிவர நிறைவேற்றுமாயின் அது முஸ்லிம்களுக்கு உதவக்கூடியதாகவும் மிக சிறந்ததாகவும் இருந்திருக்கும்.
ஏனென்றால்
அ.
உலமாக்களின் ஆலோசனை என்பது
உயிரோட்டமுள்ளதாகும் என்பதுடன் அவர்கள் எல்hம் வல்ல அல்லாஹ்வின்; கோட்பாட்டை
நிறைவேற்றுபவர்கள். ஷரீயா பிரிவால் சரியான
முறையில் அல்லாஹ்வின் கோட்பாட்டை நடைமுறைப்படுத்த முடியவில்லையாயின் அவர்கள் இத்தகைய முக்கியமான விடயங்களில் தலையிட்டிருக்கக்கூடாது.
(கவனிக்க வேண்டியது, முதலீட்டாளர் ஒருவர் இது பற்றி ஷரீயா பிரிவை சேர்ந்த (புத்தளத்தை சேர்ந்த) மௌலவி ஒருவரிடம் கேட்ட போது தாங்கள் சி இ ப இ பிரிவில் கஜானாவை திறக்க எமக்குக் கடமையில்லை. என்றும் என்ன நடக்கின்றது என்பதை பார்ப்போம் என்றும் கூறினார்.)
அன்புள்ள றிஸ்வி முப்தி அவர்களே!
அல்லாஹ்வின் கோட்பாடு இவ்விதம் சாதாரணமானதா? மேற்படி ஷரீயா பிரிவு உறுப்பினர் சொன்னதற்கிணங்க கஜானவில் என்ன இருக்கிறது என்பதை பார்க்கவும் கணக்குகளை கண்காணிக்கவும் கணக்கிடவும் எத்தனை முறைகள் உள்ளன?
இந்த உயர்வான விளக்கம் இன்றுவரை செல்லுபடியாகும் என்பதுடன் இஸ்லாமிய வங்கி சூழலில் உள்ள அனைத்து அகக்கட்டுப்பாட்டு சேவைகளையும் பொருத்த முடியும்.
ஆ.இரண்டாவதாக, ஷரீயா பிரிவின் ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் அவர்களது ஒவ்வொரு கலந்து கொள்தலுக்கும் சிலிங்கோ இ ப பிரிவால் கொடுப்பனவு வழங்கப்பட்டது. இதுவும் ஏழை முதலீட்டாளர்களின் பணம்தான். ஆகவே சரியான முறையின் கீழ் செயற்படுவதற்கான பொறுப்பும் கடமையும் ஷரீயா நிhவாக உறுப்பினர்களுக்கு உண்டு. தமது பொறுப்பை அவர்கள் உணராமல், சிலிங்கோவின் செயற்பாடுகளைக் கண்காணிக்காமல் வெறுமமே கொடுப்பனவை மற்றும் பெற்றுக்கொண்ட உலமா சபை அங்கத்தவர்களின் பணம் எப்படி ஹலாலாகுமா?
சிலிங்கோ இலாப பங்கீட்டு பிரிவின் பண மோசடியும்
பதுங்கித் திரியும் உலமா சபையின் பத்வாக் குழுவும்
இந்த பண மோசடி தொடர்பாக உங்களுடனும் உங்கள் உறுப்பினர்களுடனுமான எமது பல சந்திப்புக்களின்; போது அ.இ.ஜ.உலமா சபையும் அதன் உறுப்பினர்களும் சிலிங்கோ இ ப இ பிரிவின் ஷரீயா நிர்வாகத்திலிருந்து வாபஸாகி விட்டதாக காட்டுவதற்கே தொடர்ந்தும் முயற்சித்தீர்கள்.
.
ஆனாலும் அ இ ஜ உ சபை 29 ஒக்டோபர் 2008ம் திகதி சி இ ப இ பிரிவுக்கு எச்சரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியிருந்ததை தை நாம் அவதானித்தோம்.
அதுவும் அனைத்து பாதிப்புக்களும் நடந்தேறிய பின்னா யாருக்கும் தெரியாமல் உலமா சபை சிலிங்கோ ப. பிரிவிலிருந்து வாபசாகி விட்டது.
நீங்கள் கூட குறிப்பிட்டீர்கள் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை, சிலிங்கோ இ ப இ பிரிவின் ஷரீயா நிர்வாகத்திலிருந்து வாபஸ் பெற்று விட்டதாக ஆங்கில பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளதாக.
ஆனாலும் நாம் ஆயிரரக்கணக்கான முதலீட்டாளர்களை இதுவரை சந்தித்துள்ளோம். அவர்கள் எவருமே இவ்வாறு அ இ ஜ உலமாவின் வாபஸ் பெறல் சம்பந்தமான விளம்பரத்தையோ செய்தியையோ கண்டதாக அறியவில்லை. எவ்வாறாயினும் முஸ்லிம் சகோதரர்களில் மிக அதிகமானோர் தமிழ் பத்திரிகைகளையே வாசிப்பவர்கள் என்பதால் இவ்வாறான அதி முக்கிய விடயங்களை தமிழ் பத்திரிகைகளை நிராகரித்து விட்டு ஆங்கில பத்திரிகையில் மட்டும் பிரசுரிப்பது முஸ்லிம் மக்களை ஏமாற்றும் உங்கள் தந்திரத்தையே காட்டுகிறது.
அதே போல் இது சம்பந்தமாக அ இ ஜ உ சபை பொருளாதார தயாரிப்புகளுக்கான ஹலால் பத்திரம் வழங்கும் போது அல்லது அதனை செயலிழக்கச்செய்யும் போது அனைத்து பள்ளிவாயல்களுக்கும் அறிவித்தல் கொடுப்பது போல் இது விடயத்தையும் அனைத்து பள்ளிவாயல்களுக்கும் அறிவித்திருக்க வேண்டுமே! சமூகத்துடனான சலக தொடர்புக்கு எப்போதும்; மிக சிறந்த வழியாக இருக்கும்; பள்ளிவாசல்களை சிலிங்கோ விடயத்தில் மட்டும் நீங்கள் ஏன் மறந்து போனீர்கள்.
சிலிங்கோ ப. பிரிவின் சுரண்டலோடு
வேறு ஹலால் (?) நிதி நிறுவனங்களுக்கு தாவிப்பாயும் உலமா சபை உறுப்பினர்கள்.
சிலிங்கோ இ ப இ பிரிவின் ஷரியா நிர்வாகத்தில் இயங்கி முஸ்லிம்களின் பணத்தை சூறையாடுவதற்கு துணைபோன அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் உறுப்பினர்கள் தற்போது வேறு இஸ்லாமிய வங்கி, நிதி நிறுவனங்களின் ஷரீயா பிரிவுகளில் பணி புரிகிறார்கள்.
ஏனைய நிதி நிறுவனங்களில் நிர்வாகக் கதிரைகளில் வீற்றிருந்து பல்லாயிரம் ரூபாய்களை கொடுப்பனவாக பெறும் இவர்கள் கடந்த காலத்தில் சிலிங்கோ பங்குப் பிரிவு போன்ற மோசடி நிறுவனங்கள் செய்த பகற்கொள்ளைகளுக்கு துணை போக மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
மேற்படி உலமா சபையின் உறுப்பினர்கள் சிலிங்கோ இலாப பங்கீட்டு பிரிவில் இயங்கியபோது அவர்களின் அக்கறையின்மை மற்றும் பொருத்தமற்ற நடவடிக்கைகள் பற்றி ஆய்வு செய்வதில் உலமா சபையும் அதன் தலைமையும் தோல்வி அடைந்துள்ளது. அதற்கு பகரமாக உலமா சபையின் இந்த உறுப்பினர்கள் தங்களால் பாதிக்கப்பட்ட சிலிங்கோ இலாப பங்கீட்டு நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் பாதிப்புக்களையெல்லாம் குப்பையில் போட்டு விட்டு இப்போது வேறு ஹலால் (?) வங்கிகளுக்கு தாவிப்பாய்ந்திருக்கிறார்கள்.
அடுத்த கேள்வியும், கோரிக்கையுமாவது. அதாவது, இந்த ஷரீயா உறுப்பினர்கள் இலங்கையிலுள்ள இஸ்லாமிய வங்கிகளுக்கு ஆலோசனை வழங்குவதற்கும், சமூகமும் ஏனைய இஸ்லாமிய வங்கிகளும் இஸ்லாமிய ஷரீயா அடிப்படையிலான கண்காணிப்பை கொண்டுள்ளதா என்பதை கவனிப்பதற்குமுரிய தகுதிகளை இவர்கள் கொண்டுள்ளார்களா என்பதாகும்.
இத்தகைய உலமா சபையின் ஷரீயா பிரிவு உறுப்பினர்கள் வேறு வங்கிகளில் பணிபுரிய முன் உலமா சபை இவர்களை விசாரணை செய்திருக்க வேண்டும்.
அப்பாவி முதலீட்டாளர்களின் கலக்கம்
சிலிங்கோ இ ப இ பிரிவில் தமது கடின உழைப்பினால் சேர்த்த பணத்தை முதலீடு செய்த அப்பாவி முதலீட்டாளர்கள் இன்று மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் மத்தியில் விதவைகள். ஓய்வு பெற்றவர்கள், தமது பெண்பிள்ளைகளின் திருமணத்துக்காகவும் பிள்ளைகளின் படிப்புக்காகவும் பணத்தை சேமிப்பிலிட்ட பெற்;றோர் ஆகியோரின் எதிர் பார்ப்புக்கள் சிதறடிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் முஸ்லிம் அனாதைகள், வயதானவர்கள், வீடு மற்றும் பள்ளிவாயல்களுக்கான நிதிகளும் இதில் அடங்கியுள்ளன. இந்த முதலீட்டாளர்கள் அனைவருக்கும் அ இ ஜ உலமா சபையை மட்டுமே அறிந்தவர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் தமது பணத்தை முதலீடு செய்தது உலமா சபையின் பத்வா காரணமாகவே தவிர லலித் கொத்தலவலையின் மீதான நம்பிக்கையினால் அல்ல.
இந்த முதலீட்டாளர்களின் கலக்கம் பாரிய மன அழுத்தத்தை கொடுக்கிறது. நீங்கள் எம்மோடு இணைந்த வரவிருப்பமானால் நாம் உங்களை நாடு முழுவதும் அழைத்துச்சென்று மேற்படி முதலீட்டாளர்கள் எந்தளவுக்கு தாம் சிலிங்கோ இ ப இ பிரிவில் முதலீடு செய்த பணத்தையும் இஸ்லாமிய நிதி நடவடிக்கையிலான உலமாக்களின் பத்வாவையம் நம்பிக்கொண்டிருக்கிறார்கள் என்பதையும் உங்களுக்கு காட்ட முடியும்.
விதவைகள் வாழ வசதியற்ற நிலையில் தமது கணவரால் விடப்பட்ட பணத்தை இழந்து நிற்கிறார்கள். ஓய்வு பெற்றவர்களின் குடும்பங்கள் தமது முழு வாள்நாள் உழைப்பையும் இழந்து நிற்கிறார்கள். பெற்றோர்கள் தமது பெண் பிள்ளைகளுக்கான திருமணத்தை நடத்த முடியாமல் உள்ளனர். இவையனைத்தும் சமூகத்தை பாரிய நெருக்கடிகளுக்கு இட்டுச்சென்றள்ளதால் அவற்றில் உலமா சபைக்கும் பாரிய பொறுப்பு உள்ளது.
அகில இலங்கை ஜ. உலமா சபையிடமிருந்தான எதிர்பார்ப்புகள்
நாம் ஒரு குழுவாக எமது பணத்தை திருப்பி எடுக்க எடுக்கும் முயற்சிகளுக்கு அ இ ஜ உலமா சபையும் செயற்படத்தக்க வகையில் இணைந்து கொள்ள வேண்டும். ஆனாலும் இது விடயத்தில் உலமா சபை எத்தகைய தெளிவான நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை. இலங்கையில் வேறு பல இஸ்லாமிய வங்கிகள் உள்ளதால் அவற்றின் பல நிகழ்வுகளில் சிலிங்கோ இ ப இ பிரிவினரிடமிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என நாம் அவற்றிடம் கேட்டிருந்தோம். ஆனாலும் இந்த வேண்டுகோள் சம்பந்தமாக எந்த வித திருப்தியான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.
இப்பிரச்சனைகள் பற்றி ஆராய சிலிங்கோ தலைவர் லலித் கொத்தலாவலையுடன் ஒரு சந்திப்புக்கான ஏற்பாட்டை செய்யும்படி நாம் உங்களிடம் கோரியிருந்தோம். ஏனென்றால் உங்களின் ஷரீயா பிரிவு உறுப்பினர்கள் லலித் கொத்தலாவையுடன் ஒவ்வொரு சிலிங்கோ இ ப இ பிரிவின் கிளை திறப்பு நிகழ்வுகளுக்கும் கூடவே சென்றனர். ஆனால் முதலிட்டாளர்கள் சார்பில் நீங்கள் லலித் கொத்தலாவையை சந்திக்காமல் விட்டு விட்டீர்கள்.
பிரதி அமைச்சர் ஹிஸ்புள்ளா தனது மனைவியின் பெயரில்; சிலிங்கோ பங்கு இலாப நிதி நிறுவனத்தில் இருந்து அப்பாவி முஸ்லிம்களால் வைப்பிலிடப்பட்ட பணம் 140 மில்லியன் ரூபாயை கடனாக பெற்று ள்ளார். ஆனால் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பொது மக்களின் இந்தப் பணத்தை இதுவரை திருப்பி செலுத்தவில்லை. அப்பாவி முஸ்லிம்களின் பணம் ஹிஸ்புல்லாஹ்வால் இப்படி ஏப்பம் விடப்பட்டிருக்கிறது. இதற்கும் உலமா சபை உடந்தையாக இருந்திருக்கின்றது.
எவ்வித ஆவணங்களுமின்றி உலமா சபை அங்கத்தவர்களின் சிபார்சின் பேரிலேயே சிலிங்கோ இ ப இ பிரிவு இவருக்கு கடன் வழங்கியிருப்பதாக அறிய வருகிறது.
உலமா சபையின் உதவியோடு அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் மனைவியின் பெயரால் ஏப்பமிடப்பட்ட அந்தப் பணம் சிலிங்கோ இ ப இ பிரிவிலிருந்து 2004ம் ஆண்டு கடனாக பெறப்பட்டது. காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமாவுடன் தொடர்பு கொண்டு பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹவை இது பற்றிய விசாரணைக்கு அழைத்து வரும்படி நாம் உங்களிடம் கோரினோம்.
ஏனென்றால் அவர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல்வாதி என்பதால் பொது மக்களிடத்தில் பொறுப்புச் சொல்ல வேண்டியவர். இது விடயத்தில் அவருக்கான அழுத்தத்தை கொடுப்பதற்கு அ இ ஜ உலமா சபைக்கு உரிமை உண்டு. எனெனில் உலமா சபை முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல் உலமா சபை ஹலால் என்று அங்கீகரித்த நிதி நிறுவனம் ஒன்றிலிருந்து பெற்ப்பட்ட பணத்தை திருப்பி கொடுக்க மறுக்கும் போது அவரை கண்டிக்கும் உரிமை உலமா சபைக்கு இருக்கிறது.
அப்பாவி முஸ்லிம்களின் பணத்தை பகற் கொள்ளையடித்த அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வோடும் அவரது கட்சியான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸோடும் உங்களுக்குள்ள தனிப்பட்ட உறவின் காரணமாக இன்று வரை நீங்கள் அதற்கு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. மாறாக நீங்கள் அடிக்கடி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் வீட்டில் அருசுவை உணவருந்தி அவரை ஆசிர்வதித்து வருகின்றீர்கள்.
அதுமட்டுமல்லாமல் உங்களது உலமா சபையின் உறுப்பினர்கள் பலர் டொக்டர் ஸாகிர் நாய்க்குடன் இணைந்து காத்தான்குடியில் உள்ள ஹிஸ்புள்ளாவின் இல்லத்தில் பணம் திரட்டும்; நிகழ்விலும்; கலந்து கொண்டு உண்டு புரண்டு களிப்புற்று கிடந்தார்கள்.
பொதுப்பணத்தை சூறையாடியவர்களை கண்டிக்க, தண்டிக்க வேண்டிய உங்கள் உலமாக்கள் அவரை தட்டிக் கொடுத்துக்கொண்டிருக்கின்றார்கள். ஹலால் பத்வாவை வழங்குவது மடடும்தானா உங்கள் பணி? ஹராமான முறையில் பொதுப்பணத்தை அபகரிப்பது ஹராம் அந்த அமைச்சருக்கு சொல்ல உங்கள் அரசியல் நட்பு உங்கள் நாவை அடக்குகிறதா?
அன்புள்ள றிஸ்வி முப்தி அவர்களே!
;இந்த நாட்டில் குறிப்பாக ஆதம் (அலை) அவர்கள் சுவர்க்கத்திருந்து பூமிக்கு வந்த போது கால் பதித்ததாக நம்பப்படும் இந்த நாட்டில் இஸ்லாமிய நிதி அபிவிருத்தியை காண நாம் அனைவரும் விரும்புகிறோம்.
இதற்காக என்ன தேவை என்றால் சரியான கண்காணிப்பும் வழிகாட்டலும் கொண்ட பணம், பதவி, பேராசை போன்ற உலகாயத தேவைகளை புறந்தள்ளிய தூய்மையாக அமைப்பு ஒன்றின் அவசியத் தேவை இன்று உணரப்படுகின்றது.
உங்கள் தூர நோக்கற்ற ஹலால் பத்வாவினாலும், சிலிங்கோ பங்கு இலாப நிறுவனத்தின் மோசடியினாலும் பாதிப்புற்று நடுத்ததெருவில் நிர்க்கதியற்று நிற்கின்ற மக்களின் பிரார்த்தனைக்கு பயந்துகொள்ளுங்கள். அநீதியிழைக்கப்பட்டவனரின் பிரார்த்தனை திரையின்றி அல்லாஹ்வால் ஏற்றுக்ககொள்ளப்படும் என்று அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் சொன்ன உயரிய வாக்கை உலமா சபையின் தலைவரான உங்களுக்கு நினைவு படுத்துகிறோம். பொதுப்பணத்தை சூறையாடுவதற்கு துணைபோன உங்களை மறுமையில் அல்லாஹு தஆலா கேட்காமல் விட மாட்டான்.
அல்லாஹ்வின் உதவியால் நாம் எமது பணத்தை மீளப்பெறுவதில் இன்னமும் போராட்டத்தை விட்டு விடவில்லை. நாம் இந்தப்பணத்தை ஹலாலான வழியில் சம்பாதித்தோம் என்பதும் அதனை மீளப்பெறுவோம் என்பதும் எமக்குத்தெரியும். இது சம்பந்தமாக அனைத்து நடவடிக்கைகளையும் சட்ட நடவடிக்கைகளையும் எடுக்கவுள்ளோம்.
எனினும் இது விடயத்தில் அ இ ஜ உலமா சபை இன்னமும் மௌனமாக இருப்பது மட்டுமல்லாமல் அந்தப்பணத்தை சூறையாடிய அரசியல்;வாதிகளோடு; கூடிக்குலாவுவதும் கவலைக்குரிய விடயமாகும்.
பணத்தை இழந்து பாதிக்கப்பட்ட மக்க்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, அந்த ஊநலடinஉழ Pசழகவை ளூயசiபெ என்ற மோசடி நிதி நிறுவனத்திற்கு ஹலால் பத்வா வழங்கியவர்கள் என்ற ரிதியில் உங்களுக்கு இருக்கும் தார்மீக பொறுப்பை உதாசீனம் செய்யாதீர்கள். பணம், பட்டம், பதவி போன்ற உலக ஆதாயங்களையும் விட்டு தூய்மையான உலமாக்களின் தலைமைத்துவம் ஒன்றை அல்லாஹு தஆலா இந்த முஸ்லிம் உம்மத்திற்ககு வழங்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றோம்.
صدقة تطفئ الخطيئة كما يطفئ الماء النار
ஒரு சதக்கா என்பது தண்ணீர் நெருப்பை அணைப்பது போல் பாவத்தை அழித்து விடும் என முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சொல்லியுள்ளார்கள்.
வஸ்ஸலாம்
இவ்வண்ணம்
சிலிங்கோ இலாப பங்கீட்டு முதலீட்டாளர்கள் சங்கம்
இல. 17, சுமனராம றோட். கல்கிஸ்ஸ