Saturday, 13 September 2025

நெல்சன் மண்டேலாவின் பேரன் – பாலஸ்தீன மக்களுக்காக களத்தில்....!


 

🌍✊ நெல்சன் மண்டேலாவின் பேரன் – பாலஸ்தீன மக்களுக்காக களத்தில்....!

“சுதந்திரம் என்பது எனது மக்களுக்கு மட்டுமல்ல, உலகில் அடக்குமுறையில் வாழும் ஒவ்வொரு மக்களுக்கும் அது உரியது” என்று தென்னாப்பிரிக்க விடுதலைப் போராட்டத்தின் சின்னமாக விளங்கிய நெல்சன் மண்டேலா ஒருமுறை கூறியிருந்தார்.

“நிறவெறியிலிருந்து தென்னாபிரிக்கா விடுதலை பெற்று விட்டது. என்றாலும், பாலஸ்தீன் விடுதலை பெறும் தினத்தில் தான் எமது இந்த விடுதலைப் போராட்டம் நிறைவு பெறும்” என்று அவா் சொன்னார்.
நெல்சன் மண்டேலாவின் பாலஸ்தீன் தொடர்பான அந்தச் சிந்தனையை, இன்று அவரது பேரன் மண்ட்லா மண்டேலா தன் செயலால் உயிர்ப்பிக்க களம் இறங்கியிருக்கின்றார்.

பாலஸ்தீனின் காஸா பகுதியில் வாழும் அந்த மண்ணின் மைந்தர்கள் இன்று கடும் துன்பத்திற்கு உள்ளாகியிருக்கின்றனா்.
வேறு நாடுகளில் இருந்து நாடோடிகளாக அடைக்கலம் தேடி வந்து பாலஸ்தீன் என்ற அரபு பூமிக்குள் குடியேறியவா்கள் தான் இந்த ஸியோனிஸ யூதா்கள். பிறகு பலாத்காரமாக அந்த பூமியில் உருவாக்கபட்டதுதான் இஸ்ரேல் என்ற சட்டவிரோத நாடு.

இன்று, இஸ்ரேலின் காட்டமிராண்டித்தனமான முற்றுகையில் சிக்கி பாலஸ்தீன் மக்கள் கடும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.
உணவு, தண்ணீர், மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களை இஸ்ரேலிய கொலைகார அரசு தடுத்து வருகிறது.
தனது சொந்த உறவுகள் கொடுமைக்குள்ளாகி, பசியிலும் பட்டினியிலும் மரணத்தின் விளிம்பில் தத்தளிக்கும் வேளையில்...

உலக ஆசாபாசங்களில் மூழ்கி ஸியோனிஸ எதிரிகளோடு கைகோர்த்துக் கொண்டு, உணர்வுகள் மறத்துப்போன நிலையில் மத்திய கிழக்கின் மௌட்டீக மன்னர்கா்கள் வாழ்கிறார்கள்.
உலகளாவிய ரீதியில் மதம், மொழி, இனம் என்ற எல்லைகளைக் கடந்து மனித நேயம் கொண்ட மக்கள் அனைவரும் பாலஸ்தீன் மக்களுக்காக குரல் கொடுப்பதில் இன்று முன்னணியில் நிற்கின்றார்கள், போராடுகிறார்கள்.

உலகம் முழுவதும் இலட்சக்கணக்கில் மக்கள் வீதிகளில் இறங்கி காஸா மக்களுக்காக போராடும் போது, பாலஸ்தீனத்தை சுற்றியிருக்கின்ற ஸியோனிஸ சார்பு அரபு ஆட்சியாளா்கள் இந்த கொடுமைகளைப் பார்த்து உணர்வுகள் மறத்துப்போன ஜடங்களாக இருக்கின்றனா். இது மிக மிக துா்ப்பாக்கிய நிகழ்வாகும்.
அதுமட்டுமல்லாமல், மறைமுகமாகவும், நேரடியாகவும் இஸ்ரேலிய கொடுமைக்கார நாட்டுக்கு எண்ணெய், எரிவாயு, உணவுப்பொருட்கள் என்பனவற்றை வழங்கி உதவி புரிந்தும் வருகின்றனர்.

அண்மையில், ஜொ்மன் நாட்டிலிருந்து இஸ்ரேலுக்கு 🇮🇱 கொண்டு செல்வதற்காக, நாசகார ஆயுதங்களை ஏற்றிக் கொண்டு இத்தாலி துறைமுகத்திற்கு வந்த சவுதி அரேபியாவின்🇸🇦 “பஹ்ரி யன்பு” Bahri Yanbu என்ற கப்பலை இத்தாலிய துறைமுக ஊழியா்கள் ‘துரத்தியடித்த’ செய்திகள் ஊடகங்களில் வெளிவந்தன.

காஸாவில் சுமார் 65 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இதுவரை படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். பாலஸ்தீனில் குழந்தைகளும், பெண்களும், முதியவர்களும் கடும் பட்டினியில் மரணத்தோடு போராடிக்கொண்டிருக்கின்றார்கள். இந்த மனித அவலத்தை ஸியோனிஸ சார்பு முஸ்லிம் நாடுகளின் தலைவா்களும், அவா்களின் எஜமானா்களும் நயவஞ்கத் தனத்துடன் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கின்றனா்.

இந்தச் சூழலில் குரலற்ற பாலஸ்தீன் மக்களுக்காக களம் இறங்கியுள்ளார் மண்ட்லா மண்டேலா.
“Global Sumud Flotilla” எனப்படும் இந்த மிகப்பெரிய மனிதநேயப் பேரணியில் அவரும் பங்கேற்றுள்ளார். 44 நாடுகளில் இருந்து புறப்பட்டு வரும் 50 கப்பல்களை கொண்ட இந்தக் கப்பற்படை, காஸா மக்களுக்கு உணவு, தண்ணீர், மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் நோக்கத்துடன் பயணமாகியுள்ளது.

இது இஸ்ரேலின் முற்றுகையைத் தகா்த்துக் கொண்டு சென்று, காஸாவில் அல்லல்படும் மக்களுக்கு உணவுப் பொருட்கள், தண்ணீர், மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் ஒரு போராட்ட நடவடிக்கையாகும்.
பாலஸ்தீன ஆதரவு, இஸ்ரேல் எதிர்ப்பு ஆர்வலர்களின் கப்பல் படையில் சேர்வதற்காக டியூனிசியாவிற்கு விமானத்தில் ஏறுவதற்கு முன்னதாக 51 வயதான மண்ட்லா மண்டேலா ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

“நாங்கள் தென்னாப்பிரிக்காவில் அனுபவித்த நிறவெறி கொடுமையை விட, பாலஸ்தீனர்கள் இன்று அனுபவிக்கும்கொடுமை, துயரம் நிறைந்ததாகும்” என்று அவா் உருக்கமாகச் சொல்லி இருக்கிறார்.

நெல்சன் மண்டேலா தனது வாழ்நாளையே இனவெறி எதிர்ப்புக்கு அர்ப்பணித்தவா், அதில் வெற்றி கண்டவா். இன்று அவரது பேரன், அதே பாதையில் நடந்து, இஸ்ரேலிய அடக்குமுறைக்கு எதிராக பாலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுக்க முன்வந்திருக்கிறார்.

உலக மக்களின் ஆதரவு பாலஸ்தீன் மக்களின் மீது திரும்புவதைக் கண்டு கலங்கிப்போயிருக்கும் இஸ்ரேலும், அதன் ஸியோனிஸ அடிவருடிகளும் பாலஸ்தீன் போராட்டத்திற்கு அதரவளிப்பவா்களை தீவிரவாதத்திற்கு துணை போகின்றவா்களாக முத்திரைக் குத்த காத்துக் கொண்டிருக்கின்றன.

அஸீஸ் நிஸாருத்தீன்
05.09.2025
8.25am

No comments:

Post a Comment

எளியவனுக்கு ஒரு சட்டம், வலியவனுக்கு ஒரு சட்டம் !

  எளியவனுக்கு ஒரு சட்டம், வலியவனுக்கு ஒரு சட்டம் என்ற தாரகமந்திரத்தில் சளைக்காமல் சுழன்றுக் கொண்டிருக்கும் நாடு இலங்கை. ரணில் கைது செய்யப்ப...