Thursday, 29 October 2020

அமெரிக்கா, சீனா போன்ற ஆதிக்க சக்திகளின் ஆடு களமாகும் இலங்கை!


அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற ஆதிக்க சக்திகளின் ஆடு களமாக இலங்கை மாறிக்கொண்டிருக்கிறது.
இன்று (27.10.20202) இரவு அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியொ இலங்கை வருகிறார். இந்தியாவிற்கான பயணத்தை முடித்துக் கொண்டு அவர் இலங்கை வருகிறார்.
அமெரிக்கா அரசு இந்தியாவுடன் இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்களை செய்ததாக இந்திய ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவுடான இந்தியாவிற்கு இருக்கும் முறுகல் நிலையை மையமாக வைத்தே இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டிருக்கின்றன.
அமெரிக்காவின் இந்த நகர்வின் மூலம் இந்திய இலங்கை கடற்பிராந்தியத்தில் சீனா கட்டமைத்து வரும் ஆதிக்கத்தை தகர்க்கும் நிகழ்ச்சி நிரல் ஒன்றுக்கு அமெரிக்க தயாராகி இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது.
இலங்கைக்கான மைக் பொம்பியோவின் வருகை தொடர்பாக சீனா தனது கடும் அதிருப்தியையும் ஆத்திரத்தையும் வெளியிட்டுள்ளது.
இந்த நிகழ்வுகளின் மூலம் பூகோள மற்றும் பிராந்திய அரசியல் ஆதிக்க சக்திகளின் இலக்காக மாறிவரும் இலங்கையின் எதிர்காலம் இருள் மயமானதாக மாறிவிடுமோ என்ற அச்சமும் ஏற்படுகிறது.
அமெரிக்காவின் இந்த நகர்வு ஏற்கனவே ராஜபக்ஷ குடும்பத்தோடு மிக நெருங்கிய உறவு வைத்திருக்கும் சீனாவுக்கு கடும் சீற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
பெற்று பாலூட்டி சீராட்டி வளர்த்த தனது பிள்ளைக்கு பெயர் வைக்க வேறொருவன் வந்தால் எப்படியிருக்கும்? இலங்கை விவகாரத்தில் சீனாவின் சினமும், சீற்றமும் அவ்வாறு தான் இருக்கிறது.
யாரை திருப்தி படுத்துவது? இந்தியாவை திருப்தி படுத்துவதா? சீனாவை திருப்தி படுத்துவதா? அமெரிக்காவை திருப்தி படுத்துவதா? என்ற திண்டாட்டத்தில் ராஜபக்ஷ அரசு திணறிப் போய் இருக்கிறது.
அமெரிக்காவினதும், இந்தியாவினதும் பொது எதிரியாக சீனா இருப்பதால் இலங்கை விவகாரத்தில் சீனாவின் சீற்றத்தின் தொனி உரிமையோடும் கடுமையாகவும் இருக்கிறது.
அமெரிக்காவோடு முரண்படும் எந்த நாடும் நிம்மதியாக வாழ்ந்ததாக வரலாறே இல்லை என்ற யதார்த்தைத்தை சமகால உலக வரலாறு சான்று பகர்ந்துக் கொண்டிருக்கிறது.
தன்னை நிராகரிக்கும் நாடுகளுக்கு தலை தூக்க முடியாத “தலையிடி” வழங்கும் தீய தந்திரோபாயம் அமெரிக்காவிடம் இருக்கிறது.
தீவிரவாதத்தையும், இனமோதல்களையும், சிவில் யுத்தங்களையும் பரிசாக வழங்கி அந்த நாடுகளை சீர்குலைக்கும் சித்தாந்தத்தை அமெரிக்கா ஏகாதிபத்தியம் கொண்டிருக்கிறது.
1979களில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா வடிவமைத்த ஆதிக்க அரசியல் வியூகம், சோவியத் என்ற ஒரு மகா ராஜ்யத்தை உடைத்து உருக்குலைத்து பூஜ்ஜியமாக்கியதை எம்மால் மறந்து விட முடியாது.
அன்று ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மூட்டிய தீவிரவாத நெருப்பு முஜாஹிதீன்கள், அல்காயிதா, ஐஎஸ்ஐஎஸ் என்று பற்பல தீவிரவாத கும்பல்களாய் பரிணாமம் பெற்றுள்ளது..
அந்தத் தீவிரவாத நெருப்பு இன்று பல நாடுகளை பற்றி எரித்து சுடுகாடாக மாற்றிக்கொண்டிருக்கிறது.
உலகில் பல நாடுககளில் தீவிரவாத கூலிப்பட்டாங்களை உருவாக்கி, அந்த தீவிரவாதத்தை காரணம் காட்டி பல நாடுகளைின் வளங்களை விழுங்கி ஏப்பம் விட்டு வரும் அமெரிக்காவின் இலங்கை மீதான ஆதிக்கம் ஆரோக்கியமானதல்ல, மிகவும் ஆபத்தானது.
இன்று பல நாடுகளில் தீவிரவாதத்தை “இயங்கு நிலையில்” வைத்துக் கொண்டே அமெரிக்கா தனது ஆதிக்க அரசியல் வியூகத்தை வகுத்து வருகிறது.
ஐஎஸ்ஐஎஸ், தாலிபான் போன்ற தீவிரவாத அமைப்புகளை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு தனது தேவைக்கேற்றால் போல ஒடுக்குவது போல் காட்டிக்கொண்டும், இயக்கியும் வருகிறது.
இலங்கையில் கடந்த 2019 ஏப்ரல் மாதம் இடம்பெற்ற தீவிரவாத கூலிப்படைகளின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களின் பின்னணி கூட இந்த பூகோள அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் ஒரு வடிவமே என்பதை தெளிவாக புரிந்து கொள்ள அதிக காலம் செல்லாது என்பதே உண்மையாகும்.

No comments:

Post a Comment

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...