அமெரிக்கா மற்றுமொரு படுகொலை ஆக்கிரமிப்பிப்பை ஆரம்பித்திருக்கிறது. சதாமை ஒழித்த அதே பாணியிலான நாடகம் லிபியாவில் அரங்கேறிவிட்டது. அந்த ஆக்கிரமிப்பிற்கான பச்சைக் கொடியை பத்வாவாக அதன் அடிவருடி களினால் வழங்கப்பட்டும் விட்டது.
லிபியாவின் எண்ணெய் வளத்தை சூறையாட எதிரிகள் அணிதிரண்டு விட்டனர். வளங்களை கொள்ளையிடும் ஆதிக்க சக்திகள் உலக ஊடகங்களை திசை திருப்ப உள்நாட்டுப் போர் ஒன்றை உடனே அங்கு உருவாக்கியும் விடுவார்கள்..
அங்கு இனி குண்டு வெடிப்புகளும் தற்கொலைத் தாக்குதல்களும் சகஜமாய் நடக்கும் சம்பவமாய் மாறிப்போகும்.
சொந்த நாட்டுக்குள்ளேயே பிரிவுகளை உருவாக்கி ஒருவரை மற்றவர் குதறித் தின்னும் ஜிஹாதிய வெறியை ஊட்டி இரத்தத்தால் அந்த மண்ணை ஈரமாய் ஆக்கும் பத்வாக்கள் மீண்டும் மீண்டும் காற்றில் பறக்க விட பலர் காத்து நிற்கின்றார்கள்.
இதுதான் அமெரிக்காவின் எதிரிக்கு, எதிரிகள் ஆளும் நாடுகளுக்குக் கிடைக்கும் பரிசு!
ஆப்கானிஸ்தானில், ஈராக்கில், செச்னியாவில், பொஸ்னியாவில் நடந்து முடிந்த நரவேட்டைகளின் அடுத்த நகர்வு லிபியாவை நோக்கியிருக்கிறது. மேற்சொன்ன நாடுகள் அத்தனையும் அமெரிக்காவின் சுரண்டலுக்காகவும் அரசியல் தேவைகளுக்காகவும் துவம்சம் செய்யப்பட்ட தேசங்கள்.
ஆப்கானிஸ்தான் அரசு ரஷ்யாவை சார்ந்திருந்து அதன் இராணுவ உதவியை வேண்டி நின்ற போது, ரஷ்யப்படைகள் ஆப்கானுக்குள் நுழைந்தன. ரஷயப் படைகளுக்கு பாடம் கற்பிக்கவும், ஆப்கானை ஆக்கிரமிக்கவும் அமெரிக்கா வியூகம் வகுத்தது.
ஏகாதிபத்தியத்தின் எடுப்பார் கைப்பிள்ளையான முல்லாக்களை வைத்து அமெரிக்கா மார்க்கத் தீர்ப்புகளை வெளியிட வைத்தது.
யூசுப் அல் கர்தாவி ரஷ்ய படைகளுக்கு எதிராக போராடுமாறு முஸ்லிம்களுக்கு அறைகூவல் விடுத்தார். அந்த நாட்டின் சிறுவர் முதல் பெரியோர் பெண்கள் உட்பட அனைவரும் இராணுவ மயப்படுத்தப்பட்டனர். ரஷயா விரட்டியடிக்கப்பட்டதும். போராளிகளுக்கிடையில் பிணக்குகளைத் தோற்றுவித்து சீ.ஐ.ஏ ஆப்கானைக் கைப்பற்றிக்கொண்டது.
கர்தாவியின் பத்வாவை நம்பி களத்தில் குதித்த முஜாஹிதீன்களுக்கு, அமெரிக்கா அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தது. வெற்றியின் பின்னர் ஆப்கான் தேசம் அமெரிக்காவிற்கு கைமாறியது. கர்தாவி அமைதியானார்.
அன்று ஆப்கானிலிருந்து ரஷ்யாவை விரட்ட கூக்குரலிட்ட கர்தாவி இன்று அங்கிருந்து அமெரிக்காவை விரட்ட ஜிஹாதை பிரகடனம் செய்யாமல் மௌனம் காக்கிறார்.
இன்று அந்நாட்டு சிவிலியன்கள் நாளுக்கு நாள் கொலை செய்யப்பட்டுக கொண்டிருக்கின்றனர்.
எகிப்தின் போராட்டத்தை ஏற்றுக்கொண்ட கர்தாவி, பஹ்ரைன் போராட்டத்தை எற்றுக்கொள்ள மறுக்கின்றார். அதற்கு முக்கிய காரணம் வளைகுடாவில் அமெரிக்காவிற்கு முக்கியமான தளமாக பஹ்ரைன் திகழ்வதாகும்.
அமெரிக்காவின் மிகப்பெரிய படைத்தளம் பஹ்ரைனில் இருக்கிறது. பஹ்ரைனை இழக்க அமெரிக்கா ஒரு போதும் தயாரில்லை. எனவே கர்தாவி அவரது பத்வா பல்டியை மாற்றி அடித்துள்ளார். பஹ்ரைன் போராட்டம் மக்களின் போராட்டம் இல்லையென்று அமெரிக்காவை அவர் ஆறுதல் படுத்தியிருக்கிறார்.
காஸாவுக்குள் புகுந்து 1400 மக்களைக் கொன்ற இஸ்ரேலுக்கு எதிராக எதுவுமே செய்யாத சவுதி அரேபியா, இன்று தனக்கும் அமெரிக்காவுக்கும் சாதகமாக இருக்கும் பஹ்ரைனைப் பாதுகாக்க தனது இராணுவத்தை அங்கு அனுப்பியிருக்கிறது. கத்தார் நாடு இஸ்ரேலோடு கொஞ்சி குலாவுவதை மௌனமாக பார்த்திருக்கும் கர்தாவி, கதாபியைப் பார்த்து கர்ஜிக்கிறார்.
சுருங்கச் சொன்னால் பூகோள அரசியல் ஒன்றிற்காக முஸ்லிம் தேசங்கள் உள்நாட்டு வெளிநாட்டு யுத்தங்களால் சிதைக்கப்படுகின்றன. ஆக்கிரமிக்கப்படுகின்றன.
காட்டிக்கொடுத்து, எதிரிகளுக்கு கூஜா தூக்கும் கோடரிக்காம்புகளாக கர்தாவிகளும், அப்துல்லாஹ்க்களும் அணிவகுத்து நிற்கின்றனர்.