இக்கட்டுரை கீற்று இணையதளத்தில் சகோதர மத்ததைச் சேர்ந்த சகோ.ஆத்மார்த்தி என்பவரால் எழுதப் பட்டது.
நீங்கள் குற்றமிழைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
ஆம். குற்றமிழைத்துக் கொண்டிருப்பவர்களைத் தேடிக் கண்டுபிடித்து தண்டிப்பது தீர்வாகாது என்பதால் இரண்டு நிலங்களைப் பிரிக்கும் ஒற்றைச் சுவரில் உடைப்பொன்றை ஏற்படுத்தும் கலகக்காரனாய்ச் செயல்படுவதே இக்கட்டுரையாளனின் நோக்கம்.
தென் இந்திய சினிமாக்களில் அதுவும் குறிப்பாக தமிழ் சினிமாக்களில் காலம் காலமாக அல்ல, சரியாக சொல்வதானால் 1995 ஆண்டுக்குப் பிறகு இஸ்லாமியர்கள் பல்வேறு படைப்பாளிகளால் தவறாகவும் மிகையாகவும் புண்படும் வண்ணமும் கேலிப் பொருட்களாகவும் எதிர்மறைப் பாத்திரங்களாகவும் சித்தரிக்கப்படுவது சென்ற வாரம் வெளியான வானம் (தெலுங்கு வேதம் படத்தின் மீள்வுருவாக்கம்) வரை தொடர்வது பலரும் எழுதிவரும் தொடர்கதை. இதற்கொரு முற்றுப் புள்ளி வேண்டும் என யாருமே எண்ணாமல் இருப்பதற்கும், ஏன் திரைத்துறையிலேயே இயங்கக் கூடிய இஸ்லாமியர்களும், மதப்பாரபட்சமற்றவர்களும் ஏன் முயல்வதே இல்லை என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
