கொழும்பு பல்கலைக்கழகத்தின் அமைவிடம் இலங்கையின் அதி முக்கியமான வர்த்தக ரீதியில் பெறுமதிமிக்க பகுதியில் இருக்கிறது. பல ஆயிரம் கோடிகளை எட்டும் அதன் அதன் நிலப் பெறுமதியின் காரணமாக எதிர்காலத்தில் அதன் இருப்புக்கு அச்சுறுத்தல் வருமா என்ற அச்சம் ஏற்படுகிறது.
சுதந்திர சதுக்கத்தில் உருவாக்கப்பட்ட நடைப்பயிற்சி பாதையில் நடைப்பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு கழிப்பறைகள் அமைப்பதற்கு கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதி அப்போதைய மஹிந்த அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டது.
இன்று, கொழும்பு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள, கொழும்பு 2ல் ஒரு பெறுமதியான நிலத்தில் அமைந்துள்ள முத்தையா விடுதியை அரசாங்கம் கையகப்படுத்தி, அபகரிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது.
இந்த முத்தையா விடுதி கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு மிக அண்மையில் சுமார் இரண்டரை ஏக்கர் காணியில் அமையப்பெற்றுள்ளதுடன், சுமார் 550 மாணவிகள் இதில் தங்கி வருகின்றனர். குறிப்பாக மாற்றுத் திறனாளி மாணவிகள் கணிசமான தொகையினர் இந்த விடுதியிலேயே தங்கியுள்ளனர்.
நாட்டின் பல பாகங்களிலிருந்தும் தொிவு செய்யப்படும் மாணவிகளுக்கு இந்த முத்தையா விடுதி மிகவும் பாதுகாப்பான அமைவிடமாக இருப்பதோடு, கொழும்பு பல்கலைக்கழத்திற்கு மிகவும் அண்மித்த பகுதியிலும் இருப்பதால் மாணவிகள் பல்கலைக்கழகம் சென்று வருவதற்கும், பாதுகாப்பிற்கும் மிகவும் உத்தரவாதமுள்ள இடமாகவும் இருக்கிறது.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் முத்தையா விடுதியின் இந்த பெறுமதி மிக்க நிலத்தை அபகரிக்க கடந்த காலங்களில் நகர அபிவிருத்தி அதிகார சபை தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அபகரிப்பதற்கு நடவடிக்கையில் இறங்கிய போதும் அந்த முயற்சிகள் பயனற்று போனதாக மாணவர்கள் தொிவிக்கின்றனர்.
தற்போதைய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் நகர அபிவிருத்திய அதிகார சபை ஊடாக மீண்டும் குறித்த விடுதி நிலத்தை அபகரிக்கும் முயற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.
தற்போது கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக விடுதிகள் மூடப்பட்டுள்ள நிலையில் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படத்தி பெருமதியான கொழும்பு பல்கலைக்கழக விடுதி நிலத்தை கொள்ளையிட அரசாங்கம் தயாராகி வருவதாகக் கூறி மாணவ அமைப்புகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன.
முத்தையா விடுதி அபகரிப்பு தொடர்பாக அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தொிவித்த அமைச்சர் பந்துல குணவர்தண இந்த விடுதியில் மாணவிகள் இடநெருக்கடியால் அதிகம் சுகாதார பிரச்சினைகளை எதிர்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாகவே விடுதியை தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாக அவர் கூறினார். ஆனால் அமைச்சரின் கூற்றில் எவ்வித உண்மையுமில்லை என்று பல்கலைக்கழக மாணவர்கள் மறுத்துள்ளதோடு வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கு இந்த பெறுமதியான நிலத்தை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் முயற்சி மேற்கொள்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழக விடுதிகளிலும் இடநெருக்கடி பிரச்சினை என்பது ஒரு சாதாரண விடயமாகும், அவற்றை நிவர்த்தி செய்ய கடந்த அரசாங்கங்களால் எவ்வித உறுதியான வேலைத்திட்டங்களும் மேற்கொள்ளப்படாத நிலையில், கொழும்பு பல்கலைக்கழக மாணவியரின் முத்தையா விடுதியில் இருக்கும் இடநெருக்கடியை மட்டும் வைத்து அமைச்சர் பந்துல குணவர்தணவிற்கு கவலையும், கண்ணீரும் வந்திருப்பது இங்கு கவனிக்கத்த முக்கிய விடயமாகும்.
“இடநெருக்கடி இருப்பதால் தான் மாணவிகளை வேறு இடத்திற்கு மாற்றுகிறோம்“ என்ற அமைச்சர் பந்துல குணவர்தணவின் இந்தக் கூற்று பெறுமதியான இந்த நிலத்தை கையகப்படுத்தி “காப்பரேட்“ கம்பனி ஒன்றுக்கு கை மாற்றுவதற்கான நாடகமே அன்றி வேறில்லை என்று துணிந்து கூறலாம்.
முத்தையா விடுதியில் மாணவிகள் எதிர் நோக்கும் இடநெருக்கடியிலும், சுகாதார பிரச்சினையிலும் கண்கலங்கி, கரிசனை கொள்ளும் இந்த அரசாங்கம், குறித்த பெறுமதிமிக்க இரண்டரை ஏக்கர் நிலத்தில் புதிய கட்டிடங்களை உருவாக்கி மாணவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க மறுத்துள்ளது. இதன் மூலம் அரசாங்கத்தின் மறைமுக நிகழ்ச்சி நிரல் வெளிச்சத்திற்கு வந்தள்ளது.
முத்தையா விடுதியை கையகப்படுத்தி விட்டு குறித்த மாணவிகளுக்கு பல்கலைக்கழகத்தில் நின்றும் தூர இடமொன்றான ஒருகொடவத்தையில் விடுதி வசதியை ஏற்படுத்திக் கொடுக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“விடுதி நிலம் விற்பனை“ விவகாரம் சந்திக்கு வந்ததைத் தொடர்ந்து, வைக்கப் போன குண்டு கையிலேயே வெடித்த நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.
தற்போது நகர அபிவிருத்தி அதிகாரசபை கதையை வேறுபக்கம் நகர்த்தியிருக்கிறது. அதாவது முத்தையா விடுதி அமைந்திருக்கும் இரண்டரை ஏக்கர் நிலத்தில் பசுமை பூங்கா ஒன்றை அமைப்பதற்கு திட்டமிட்டு இருப்பதாக அது கூறி வருகிறது.
விடுதியை கையகப்படுத்தும் விடயத்தில் குறைந்தது விடுதியில் தங்கி கற்று வருகின்ற மாற்றுத் திறனாளி மாணவிகளைப் பற்றியாவது அதிகார வர்க்கம் கரிசனைக் காட்டுவதாக தொியவில்லை.
சர்வதேச ஒப்பந்தங்களால் (Ramsar Convention) பாதுகாக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ள நாட்டிலுள்ள ஈர நிலங்களை, மற்றும் ஏனைய வனங்களான ஆற்று மணலை, கனிம வளங்களை கொள்ளையிடும் தனது அடியாட்களை எப்படியும் பாதுகாத்திட முயற்சி செய்யும் அரசாங்கம், மிக மிக பெறுமதி மிக்க கொழும்பு பல்கலைக்கழக மாணவிகளின் விடுதி நிலத்தை அபகரித்து அந்த இடத்தில் பசுமை பூங்கா அமைக்கப் போவதாய் சொல்வது வேடிக்கையும், நகைச்சுவையும் நிறைந்த விடயமாகும்.