Saturday, 2 March 2013

ஹலாலும் பொது பல சேனாவும்


[21-02-2013 அன்று நடந்த "ஹலாலும் பொது பல சேனாவும்" என்ற தலைப்பிலான சமூக விஞ்ஞான கற்கை வட்டத்தின் கலந்துரையாடலின் போது பகிரப்பட்ட கருத்துக்களின் தொகுப்பாக இக்குறிப்பு அமைகிறது. அவ்வுரையாடலினைத் தொடக்கிவைத்து உரையாற்றிய அசீஸ் நிசார்தீன் ( badrkalam.blogspot.com ) அவர்களது கருத்துக்களும் கலந்துரையாடலில் கூறப்பட்ட கருத்துக்களும் சுருக்கமாக இக்குறிப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இக்குறிப்பு 28-02-2013 இல் வெளியான சமூக விஞ்ஞான கற்கைவட்டத்தின் செய்திமடல் - 91 இல் பிரசுரமாகியுள்ளது]

ஹலால் என்ற சொல் இஸ்லாமிய நம்பிக்கைகளின்படி "ஆகுமானது" என்ற பொருளிற் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு எதிர்ச்சொல் "ஹராம்" அல்லது "விலக்கப்பட்டது" என்பதாகும். உணவு தொடக்கம் மனிதரின் நடத்தை வரைக்கும் ஆகுமானது எது, விலக்கப்பட்டது எது என்று பிரித்தறியப்படுகிறது. எடுத்துக்காட்டாக, பொய் சொல்வது ஹராம்; உண்மையைப் பேசுவது ஹலால். நாணயமாக நடந்துகொள்வது ஹலால்; ஏமாற்றி மோசடி செய்வது ஹராம்.

எல்லாச் சமூகங்களிலும் இருப்பதுபோல இஸ்லாமியச் சமூகத்திலும் ஏற்கப்பட்ட உணவுகளும் விலக்கப்பட்ட உணவுகளும் உள்ளன. இவ்வேற்பும் விலக்கும் இஸ்லாமிய நம்பிக்கைகளின் அடிப்படையில் வந்தவை. இறந்த விலங்கு ஒன்றினை வெட்டி அதன் இறைச்சியை உண்பது விலக்கப்பட்டுள்ளது. பன்றி இறைச்சி விலக்கப்பட்டுள்ளது. அதுபோல விலங்கொன்றைக் குறித்த வழிமுறைகளின்படி வெட்டி எடுக்கப்படும் இறைச்சியே ஹலால் ஆக்கப்பட்டுள்ளது.

2005இல் ஹலால் சான்றிதழ் இலங்கையில் வழங்கப்படத் தொடங்கும் வரைக்கும், நம்பிக்கையான முஸ்லிம் கடைகளில் இறைச்சியை வாங்குவதன் மூலமும் சந்தேகத்துக்கிடமான நிறுவனங்கள் தயாரிக்கும் உணவுகளைத் தவிர்ப்பதன் மூலமும் உணவில் ஹலால் விடயத்தினை முஸ்லிம்கள் கையாண்டு வந்தார்கள்.

இலங்கையில் ஹலால் சான்றிதழ் முறைமை நடைமுறைக்கு வந்தமை இலங்கையிலுள்ள முஸ்லிம்களின் கோரிக்கை காரணமாக மட்டுமே அல்ல. அது இஸ்லாமியர் அல்லாதவர்களும் உள்ளடங்கிய பன்னாட்டு/உள்நாட்டு வணிகர்கள், முதலாளிகளின், பெரு நிறுவனங்களின் தேவைக்காகவும் நடைமுறைக்கு வந்தது.  உணவுப்பொருட்களை விற்பனை செய்த அப்பன்னாட்டு/உள் நாட்டு நிறுவனங்களுக்கு முஸ்லிம்களின் சந்தை மிகவும் தேவையானதாக இருந்தது. மரபான முஸ்லிம் உணவுப்பழக்கங்களை விட்டு வெளியில் வராத சமூகமாக இருந்த முஸ்லிம்களின் உணவுப்பழக்கத்தை மாற்றி தமது வாடிக்கையாளர்களாக ஆக்குவதன் மூலம் பெரும் இலாபம் சம்பாதிக்கவேண்டுமானால் அவர்களைத் தம்பக்கம் இழுப்பதற்கான ஒரு கருவி தேவைப்பட்டது. அக்கருவியாகவே ஹலால் சான்றிதழ் அந் நிறுவனங்களால் கருதப்பட்டது. இதுதவிர, அரபு நாடுகளுக்கு உணவுப்பொருட்களை ஏற்றுமதி செய்வோரின் நலனும் இதில் அடங்கியுள்ளது.

இதனைத்தொடர்ந்தே முஸ்லிம்களை நம்பிச் சிறு சிறு இறைச்சிக்கடைகள், கோழிப்பண்ணைகள், உணவுக்கடைகள் வைத்துப் பிழைத்து வந்த சாதாரண முஸ்லிம் தொழில் முனைவோர்கள் நட்டப்பட்டுக் காணாமற்போனார்கள். மதம் சார்ந்த ஒரு விடயமான இந்த "ஹலால்" என்பது இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார மாற்றங்களுக்கும், சிறு உள்ளூர் வியாபாரிகள் ஒழிந்து பெரும் நிறுவங்கள் காலூன்றுவதற்கும் எவ்வாறு பங்களித்துள்ளது என்பதனை நுணுக்கமாக விளங்கிக்கொள்ளவேண்டியுள்ளது.

ஹலால் சான்றிதழினை நடைமுறைப்படுத்தும் உலமாசபையானது முழுக்க முழுக்க இலங்கையின் ஆளும் வர்க்கத்தின் நிழலில் அவர்களுக்குச் சார்பான அமைப்பாகவே இயங்குகிறது. இலங்கையில் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்களை மறுத்து இலங்கை அரசாங்கத்தை நியாயப்படுத்த ஜெனீவா வரை சென்று வாதாடிய மத அமைப்பாக அது இருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, "ஹலால்" பற்றிய சரியான விளக்கம் முஸ்லிம்களிடையே வலியுறுத்தப்படுவதற்கு மாறாக, உணவோடு சம்பந்தப்படுத்திய மிகக்குறுகிய மேலோட்டமான விளக்கமே பரவலாக்கப்பட்டிருக்கிறது. பன்றி இறைச்சியைக்கண்டு அருவருத்து வெறுத்து ஒதுங்கும் முஸ்லிம்கள் அதேயளவுக்கு ஹராமாக்கப்பட்டுள்ள வட்டி, மோசடி, மது, கடத்தல், வியாபாரத்தில் மோசடி, பொய் போன்றவற்றைக்கண்டு பொதுவாக அந்தளவு அருவருப்பதில்லை. இது இஸ்லாத்தின் "ஹலால்" பற்றிய அடிப்படைகளையே நடைமுறைப்படுத்தத் தவறும் ஒரு நிலையாகும்.

ஹலால் சான்றிதழானது உணவுகளை மேலோட்டமாக வகைபிரிக்க உதவுகிறதேயன்றி அதன் நடைமுறைச்சாத்தியம் கேள்விக்குரியதே. ஹராமான வட்டிப்பணத்தினை முதலிட்டு உருவாக்கப்படும் இஸ்லாமிய வட்டியில்லா வங்கிச்சேவைகளுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கப்படுகிறது. மக்களிடம் பொய் சொல்லி மோசடி செய்யும் நிறுவங்களின் உற்பத்திப்பொருட்கள் வெறுமனே அவற்றின் உணவுப் பொருட் கலப்பை மட்டுமே கருத்திற்கொண்டு ஹலால் சான்றிதழளிக்கப்படுகின்றன.

இவ்வாறாக, ஹலால் சான்றிதழின் தோற்றம், அதனால் ஏற்பட்ட விளைவுகள், அதன் நடைமுறைச்சாத்தியம் போன்ற கேள்விகள் இருக்கவே செய்யும் நிலையில் ஹலால் சான்றிதழுக்கெதிரான சிங்கள பவுத்த பேரினவாதிகளின் பிரசாரமும் போராட்டங்களும் தோன்றியுள்ளன. இவ்வமைப்புக்களின் நோக்கம் ஹலால் சான்றிதழின் நடைமுறை, நோக்கங்கள், இஸ்லாமிய சமூகத்தின் நன்மை போன்றவற்றின் மீதான அக்கறை அல்ல. மாறாக, இனவாதத்தைத்தூண்டிவிட்டு தமது சுயநல அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ளுவதேயாகும்.

இலங்கையில் இவ்வாறான அமைப்புக்களுக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. இவ் இனவாத அமைப்புக்கள் சிங்கள மக்களுடைய நன்மைகளுக்காகக்கூட என்றைக்கும் போராடியது கிடையாது. ஆளும் வர்க்கத்துக்கும், ஏகாதிபத்தியங்களுக்கும், பிற்போக்குவாதிகளுக்குமாகவே இவ்வமைப்புகள் இயங்கிவந்துள்ளன.  இவை நாட்டு மக்களிடையே தமது சுயநலங்களுக்காக உருவாக்கிவிடும் பிளவுகளும் சந்தேகக் கண்ணோட்டங்களும் மக்களது நல்ல எதிர்காலத்தையே நாசப்படுத்தி, போரும் அலைச்சலும் நிம்மதியற்றதுமான வாழ்வையே உருவாக்கியிருக்கிறது. இவ்வமைப்புக்களை அளவிற் சிறியனவென்றோ, கணக்கெடுக்கக்கூடாதென்றோ புறக்கணித்துவிட முடியாது. ஏனெனில் இவை சிறுகச்சிறுகச் சிங்கள பவுத்தர்கள் மத்தியில் விதைக்கும் இனவாதக்கருத்துக்கள் சிங்கள சமூகத்தின் அடியாழம் வரைக்கும் போய் நிலைத்துவிடக்கூடியனவாக இருக்கின்றன.

ஏழை எளிய முஸ்லிம்களின் பிரச்சினைகளை மூடி மறைப்பதுடன், முஸ்லிம் அதிகார வர்க்கத்தினால் சாதாரண முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் ஒடுக்குமுறைகளையும், முஸ்லிம்களிடையே உள்ள பல்வேறு வேறுபாடுகள் முரண்பாடுகள் போன்றவற்றையும் ஒரேயடியாக மறுத்து, "முஸ்லிம்கள்" என்றொரு வெறுப்பு முலாம் பூசப்பட்ட ஒற்றை அடையாளத்தினுள் ஒட்டுமொத்த இஸ்லாமியச்சமூகத்தையே அடக்கி முத்திரையிட்டு அவ்வடையாளத்தின் மீதான வெறுப்பாயும் தாக்குதலாயும் இவ்வரசியல் கட்டமைக்கப்படுகிறது.

இப்பேரினவாத இயக்கங்கள் இன்று ஹலால் சான்றிதழைச் சாட்டாக வைத்து முன்னெடுக்கும் அரசியலானது இந்நாட்டின் பல்லினத்தன்மையையும் மதசார்பற்ற தன்மையையும் கேள்விக்குள்ளாக்கி, இதனைச் சிங்கள பவுத்த நாடு என்று நிறுவுவதன் பாற்பட்டது. இத்தகைய போக்கு ஓர் இராணுவச் சர்வாதிகார ஆட்சிக்குச் சாதகமானதாகும்.

எனவே, இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் ஹலால் சான்றிதழின் தேவை பற்றியும் அதன் நடைமுறைகளைப்பற்றியும் ஆக்கபூர்வமாக விமர்சிப்பதும் உரையாடுவதும் ஒருபுறம் நடைபெற்றுக்கொண்டிருக்க, ஹலாலை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் இத் தீவிர இனவாதப் பரப்புரையினை முறியடிக்க வேண்டிய தேவையும் உள்ளது.

ஹலாலோடு நின்றுவிடாத இந்தப் பேரினவாத நிகழ்ச்சிநிரல் படிப்படியாக இலங்கையின் சிறுபான்மைத் தேசிய இனங்கள், குழுக்கள் யாவற்றின் மீதும் தனது தாக்குதலைச் செய்யும். தாமே உருவாக்கும் குண்டுவெடிப்புக்கள், கலவரங்களைச் சாதகமாக்கிக்கொண்டு ஆயுதப்போராட்டத்தைக்கூட இவை முஸ்லிம்கள் மீது திணிக்கலாம். அதன்போது சிறுபான்மைத் தேசிய இனங்களும் குழுக்களும் சிங்கள பவுத்தர்களுள் இருக்கும் நட்புச்சக்திகளையும் இணைத்துக்கொண்டு ஒன்றிணைந்து போராடவேண்டிய தேவை உருவாகும்.

முஸ்லிம்கள் மீதான ஒடுக்குமுறையைச் சாதமாக்கிக்கொண்டு குறுகிய அடிப்படைவாதக் கண்ணோட்டங்களை முஸ்லிம்கள் மத்தியில் விதைக்க முயற்சிக்கும் சக்திகளை இனங்கண்டு முறியடிப்பதும் இப்போது முஸ்லிம்கள் முன்னால் எழுந்துள்ள சவாலாகவிருக்கிறது. ஒவ்வொரு நாடுகளிலும் வாழும் இஸ்லாமியர்களின் பலவகையான பண்பாட்டுக்கூறுகளை மறுதலித்தும், அவர்களது வரலாற்றுச் சின்னங்களைச் சிதைத்தழித்தும் பரப்பப்பட்டுவரும் ஒற்றைப்படுத்தப்பட்ட வகாபிச சிந்தனைகள் இத்தகைய போக்குக்களுக்கான ஓர் எடுத்துக்காட்டாகும்.

தமிழர்கள் மீதான ஒடுக்குமுறையைச் சாதகமாக்கிக்கொண்டு குறுகிய தமிழ்த்தேசியவாதம் தமிழரின் விடுதலைப்போராட்டத்தினுள் ஊடுருவி இடம்பிடித்துக்கொண்டமை பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தியது. இந்நிலை முஸ்லிம்களுக்கும் ஏற்படாமல் முஸ்லிம் அரசியல் இயக்கங்கள் கவனம் செலுத்தவேண்டியுள்ளது.

முஸ்லிம்களின் அரசியல் அமைப்புக்கள் தம்மை ஏனைய ஒடுக்கப்படும் சமூகங்களிலிருந்து தனிமைப்படுத்திக்கொள்ளாமல், எல்லா ஒடுக்கப்படும் மக்களுடைய போராட்டங்களிலும் தம்மை இணைத்துக்கொண்டு இலங்கையின் பேரினவாத ஒடுக்குமுறையை முறியடிப்பதன் மூலம் மட்டுமே சனநாயக விரோத ஆட்சி ஒன்றின் அடிப்படைகளையும் இனப்பிளவுகளையும் இலங்கையிலிருந்து அகற்ற முடியும்.

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...