Thursday, 31 January 2013

ரிசானா விவகாரம் குறித்து மரணதண்டனைக்கு எதிரான இஸ்லாமிய படைப்பாளிகளின் கூட்டறிக்கை


இலங்கை இஸ்லாமியப் பெண்ணான ரிசானா நபீக் சவூதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்கு சென்ற நிலையில், அந்த வீட்டில் இருந்த நான்கு மாதக் குழந்தையை கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டு, அவ‌ளுக்கு ஜனவரி 9ம்தேதி மரண தண்டனை விதிக்கப்பட்டது.
கொலைக்குற்றங்களுக்கு தலை வெட்டு (Behead) தண்டனை வழக்கில் இருக்கும் ஒரு நாட்டில் அதன் தண்டனை முறைகள் அதற்கான நியாயப்பாடோடு இருக்கும் சூழலில் அதைத் தாண்டிய மனித உரிமைகள், குற்றத்தன்மை, குற்றத்தின் தர்க்கம் மற்றும் குற்றம் உருவாகும் சூழல் இவை ஆராயப்பட வேண்டும். மேலும் இஸ்லாம் போதிக்கும் ஆரம்பகால குற்றவியல் சட்டங்கள் தற்காலிக பரிகாரம் தான்; குற்றத்தை தடுப்பதற்கான ஒரு தற்காலிக தீர்வு தான். அதை விட நிரந்தரமான ஒன்று கருணையும், மன்னிப்பும் தான். மன்னிப்பு என்பதன் எதிரிணையாக தான் அது குற்றத்தை பார்க்கிறது. இஸ்லாம் இதை பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்தி இருக்கிறது.
ஆரம்பகால இஸ்லாமிய சட்டங்கள் அதற்கு முந்தைய பாபிலோனிய, சுமேரிய நாகரீகங்களின் தொடர்ச்சியே. மேலும் முறைப்படுத்தப்பட்ட நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் இல்லாத அந்த காலகட்டத்தில் நிச்சயமாக அது அப்போதைய சமூக இயங்கியலாக (Social Dialectics)தான் இருந்திருக்க முடியும். அதனால் தான் உலகின் பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள் அந்த சட்டங்களை பின்பற்றுவதில்லை. சில அரபு நாடுகள் ஐ.நா மனித உரிமை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளன. சவூதியில் அடிக்கடி இம்மாதிரியான நிகழ்வுகள் நடக்கின்றன. அவையெல்லாம் இம்மாதிரி சர்வதேச அரங்குகளில் விவாதப் பொருளாவதில்லை. சில தருணங்களில் மேற்கத்தியவர்கள் குற்றங்களை செய்து விட்டு பணம் செலுத்தி தப்பிய நிகழ்வுகளும் உண்டு. ஜார்ஜ் புஷ் காலத்தில் இதுபோன்ற நிகழ்வு ஒன்று நடந்தது.
மேலும் ரிசானா விஷயத்தில் சவூதிய சட்டம் சரியான முறையில் செயல்படவில்லை. விசாரணை, குற்றத்தின் உறுதித்தன்மை பரிசோதிக்கப்படவில்லை. அவளுக்கு மொழிபெயர்ப்பு உதவிகள் மற்றும் வழக்கறிஞர் உதவிகள் சரியான முறையில் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. மேலும் அவளிடம் ஒப்புதல் வாக்குமூலத்தில் கட்டாய கையெழுத்து பெறப்பட்டிருக்கிறது. இதை அவளின் கடித வரிகள் தெரிவிக்கின்றன. 'நான் அந்த குழந்தையை கொலை செய்யவில்லை' என்றே கடைசி நிமிடம் வரை தெரிவித்துக் கொண்டிருந்தாள். (கடிதம் இணைக்கப்பட்டுள்ளது). மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு சற்று நேரத்திற்கு முன்பு வரை அவளுக்கு தன் தலைவெட்டப்பட போகிறது என்பது தெரியாது. மேலும் முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களைத் தான் பணிப்பெண்ணாக அமர்த்த வேண்டும் என்ற விதி கடைபிடிக்கப்படவில்லை. அவளின் வயதை உறுதி செய்வதற்கான பரிசோதனைகள் நடத்தப்பட்டிருக்க‌ வேண்டும். வெறும் பாஸ்போர்ட் வயது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது தவறு. வெளிநாட்டினர் குற்றச்செயல்களில் ஈடுபடும் போது அவர்களின் வயது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். அதற்காக தடயவியல் பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும். ஆனால் ரிசானா விஷயத்தில் இவை எதுவும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.
மேலும் பிறந்த குழந்தைக்கு இரண்டு வயது வரை தாய்ப்பால் ஊட்ட வேண்டும் என்பது இஸ்லாமிய விதி. இஸ்லாமிய சட்டத்தை பின்பற்றுவதாக சொல்லப்படும் சவூதி அரேபிய அரசு புட்டிப்பால் ஊட்டப்பட்டதற்கான மருத்துவ காரணத்தை தெரிவிக்கவில்லை. குற்றம் நடந்தபோது அவளின் வயது 17. சவூதியில் கொலைவழக்குகள் விரைந்து விசாரிக்கப்பட்டு உடனடியாக தண்டனை அளிக்கப்படுவது வழக்கம். ஆனால் ரிசானா விஷயத்தில் அது ஏழு வருடங்கள் தள்ளிப்போனது இவ்வழக்கில் மனித நியாயத்தை மேலும் வலுப்படுத்தவதாக உள்ளது. குற்றத்திற்கு ஈடாக ரத்தப்பணம் (Blood money)கொடுக்க அங்கிருந்தவர்கள் தயாராக இருந்தும் இறந்த குழந்தையின் தாய் சம்மதிக்காத காரணத்தால் இது மேலும் தள்ளிப்போனது. சவூதிய சட்டங்கள் சாசுவதமானதன் விளைவு இது.
மேலும் தண்டனைக்குள்ளாக்கப்பட்டது இலங்கைப் பெண் என்ற நிலையில் இலங்கை அரசு இதற்கான சரியான, உறுதியான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். ஆனால் வெறும் சம்பிரதாய அளவிலே இருந்தது ராஜபக்ஷே அரசின் நடவடிக்கைகள். ஏற்கனவே போரில் லட்சக்கணக்கான தமிழர்களை குண்டு வீசி கொலை செய்து , சர்வதேச அரங்கில் குற்றவாளியாக இருக்கும் ராஜபக்ஷே எப்படி இதை கவனிப்பார்? மொழிபெயர்ப்பில் தவறு நடந்து விட்டது என்று இலங்கை அரசின் வழக்கறிஞரே குறிப்பிட்டார். ரிசானாவிற்கு தண்டனை உறுதி செய்யப்பட்ட தருணத்தில் அது வலுவாக மேல்முறையீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். அதுவும் நிராகரிக்கப்படும் போது சர்வதேச அளவில் இந்தப் பிரச்சினையை கொண்டு சென்றிருக்க வேண்டும். தன் மீதான குற்றக் கறையைப் போக்க சர்வதேச உதவியை நாடும் ராஜபக்ஷே இதற்கு தேடாமல் இருந்தது மிகப்பெரும் அவலம்.
இந்த தருணத்தில் மரணதண்டனை விதிக்கப்பட்ட ரிசானாவிற்கு ஆழ்ந்த அனுதாபங்களை இந்த கூட்டறிக்கை தெரிவித்துக் கொள்கிறது. அவளின் இழப்பால் வாடும் குடும்பத்திற்கும் அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறது. வஹ்ஹாபிய மரபுகளை பின்தொடரும் சவூதிய நிலப்பிரபுத்துவ அரசிற்கும், அவளைக் காப்பாற்ற உரிய நடவடிக்கைகளை எடுக்காத ராஜபக்ஷேவிற்கும் கடும் கண்டனத்தை இந்த அறிக்கை பதிவு செய்கிறது.
இவண்
தமிழ்நாடு மற்றும் இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கலைஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் கூட்டமைப்பு 
கவிஞர் ரியாஸ் குரானா (இலங்கை) 
கவிஞர் பைசல் (இலங்கை) 
கவிஞர் அஸ்மின் (இலங்கை) 
இம்தாத் (இலங்கை) 
மஜீத் (இலங்கை) 
கவிஞர் ரிஷான் செரீப் (இலங்கை) 
கவிஞர் பஹீமா ஜஹான் (இலங்கை) 
கவிஞர் லறீனா ஹக் (இலங்கை) 
எ.பௌசர் (ஆசிரியர் எதுவரை இணைய இதழ், லண்டன்) 
கவிஞர் ஏ.ஆர். பர்ஸான் - (இலங்கை) 
ஏ.பி.எம். இத்ரீஸ் (இலங்கை) 
அப்துல் ரசாக் (எழுத்தாளர், இலங்கை) 
கவிஞர் சல்மா (சென்னை) 
கவிஞர் ஹெச்.ஜி. ரசூல் (தக்கலை) 
பேராசிரியர் ஹாமீம் முஸ்தபா (தக்கலை) 
எழுத்தாளர் முஜிபு ரஹ்மான் (தக்கலை) 
நாவலாசிரியர் மீரான் மைதீன் (நாகர்கோவில்) 
இடலாக்குடி ஹசன் (எழுத்தாளர்) 
குளச்சல் மு.யூசுப் (மொழிபெயர்ப்பாளர்) 
அகமது கபீர் (இலைகள் இலக்கிய இயக்கம், இடலாக்குடி) 
சம்சுதீன் (இலைகள் இலக்கிய இயக்கம், இடலாக்குடி) 
கவிஞர் பைசல் (தக்கலை) 
எச்.பீர்முஹம்மது (எழுத்தாளர், வேலூர்) 
நதீம் (மனித உரிமை ஆர்வலர், வாணியம்பாடி) 
ஆபிதீன் (எழுத்தாளர், நாகூர்) 
சதக்கத்துல்லா ஹசனீ (பதிப்பாசிரியர் அல் ஹிந்த் மாத இதழ், மதுரை) 
அன்வர் பாலசிங்கம் (எழுத்தாளர், புதுக்கோட்டை) 
பீர்முகமது (செய்தியாளர், சென்னை) 
ரபீக் இஸ்மாயில் (திரைப்பட இயக்குநர், சென்னை) 
வழக்கறிஞர் உமர் (இன அழிப்புக்கு எதிரன இஸ்லாமிய இளைஞர் இயக்கம், திருப்பூர்) 
கவிஞர் சாகிப் கிரான் (சேலம்) 
தாஜ் (எழுத்தாளர், சீர்காழி) 
வஹீதா பானு (கரூர்) 
சபீலா தஸ்னீன் (மென்பொருள் பொறியாளர், சென்னை) 
முனைவர் லைலா பானு (நாகர்கோவில்) 
அனுஷ் கான் (பதிப்பாளர், பொள்ளாச்சி) 
பைசல் மசூத் (பத்திரிகையாளர், சென்னை) 
களந்தை பீர்முஹம்மது (எழுத்தாளர், சென்னை) 
கீரனூர் ஜாகிர் ராஜா (எழுத்தாளர், சென்னை) 
சிராஜுதீன் (புத்தகம் பேசுது இதழ், சென்னை) 
அர்ஷியா (எழுத்தாளர், மதுரை) 
மௌலவி முஹம்மது ரபீக் மிஸ்பாஹி (மதுரை) 
முனைவர் அன்வர் பாஷா (திருப்பத்தூர்) 
அனார்கலி (முனைவர் பட்ட ஆய்வாளர், டெல்லி பல்கலைகழகம்) 
அமீர் அப்பாஸ் (திரைப்பட உதவி இயக்குநர், சென்னை) 
பப்பு சிராஜ் (மனித உரிமை ஆர்வலர், தக்கலை) 
அஷ்ரப்தீன் (மானுட விடுதலைக் கழகம், அருப்புக்கோட்டை) 
அமீர் (வழக்கறிஞர், மதுரை உயர்நீதிமன்றம்)
***
சவுதியில் மரண தண்டனைக்கு உள்ளான ரிசானா நஃபீக் எழுதிய கடிதம்!
எனது உண்மையான வயது 19. நான் பிறந்த தேதி 02-02-1988. எனது வயது ஏஜெண்ட் அஜிர்தீன் என்பவரால் 02-02-1982 என மாற்றப்பட்டு எனக்காக கடவுச்சீட்டு வழங்கப்பட்டது. 01-04-2005-ல் நான் சவுதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்காக வந்தேன். சுமார் ஒன்றரை மாதங்கள் ஒரு செல்வந்தரின் வீட்டில் வீட்டு வேலை செய்தேன். இந்த வீட்டில் சமைத்தல், பாத்திரங்களைக் கழுவுதல், நான்கு மாதக் குழந்தையைக் கவனித்துக் கொள்ளுதல் உள்ளிட்ட வேலைகளை நான் பார்த்து வந்தேன்.
குறித்த சம்பவம் நடந்த தினம் எனக்கு நினைவில் இல்லை. அது ஒரு ஞாயிற்றுக் கிழமை, பகல் 12-30 மணியிருக்கும். அப்போது யாரும் வீட்டில் இருக்கவில்லை. நான் மட்டுமே இருந்தேன். அங்குள்ள நான்கு மாதக் குழந்தைக்கு நானே பால் கொடுப்பேன். அன்றைக்கும் வழமை போல பால் கொடுத்த போது குழந்தையின் மூக்கிலிருந்து பால் கொட்டியது. அப்போது நான் குழந்தையின் தொண்டையை தடவிக் கொடுத்தேன். குழந்தை கண் மூடியிருந்தபடியால் நான் அது அயர்ந்து உறங்குகிறது என நினைத்துக் கொண்டேன்.
குழந்தையின் தாய் எஜமானி சுமார் 1-30 மணியளவில் வந்து சாப்பிட்டு விட்டு குழந்தையைப் பார்த்தார். பின்னர் என்னை செருப்பால் அடித்து விட்டு குழந்தையைத் தூக்கிச் சென்றார். அப்போது அவர் அடித்ததில் என் மூக்கில் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. பின்னர் என்னை போலீசில் ஒப்படைத்தார்கள். அவர்கள் என்னை ஒரு பட்டியில் அடைத்து அடித்தார்கள். குழந்தையின் கழுத்தை நெறித்ததாக எழுதிக் கொடுக்குமாறும், கையொப்பமிடுமாறும் மிரட்டினார்கள்.
கையெழுத்திடவில்லை என்றால் மின்சார வதை கொடுக்கப் போவதாக மிரட்டிய போது நான் பயந்து போய் அவர்களுக்கு கையொப்பமிட்டுக் கொடுத்தேன். அப்போதுதான் நான் பயங்கரமாக உணர்ந்தேன். சரியான நினைவு எனக்கில்லை, குழம்பிய மன நிலையில் கையொப்பமிட்டேன்.
அல்லாஹ் மீது ஆணையாகச் சொல்கிறேன், நான் அக்குழந்தையின் கழுத்தை நெறிக்கவில்லை.
ரிஸானா நபீக்.
அல் த்வாத்மி சிறைச்சாலை,
அல் தவாத்மி, சவுதி அரேபியா.
நன்றி - கீற்று

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...