Sunday 4 December 2022

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!


பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் சிறிதம்ம தேரர் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டி கடந்த 11ம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் முன்பாக சத்தியாக்கிரக போராட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

வழமை போல ரணில் ராஜபக்ஷவின் காக்கிச் சட்டை சண்டியர் படையணி தடிகள், கண்ணீர் புகைக்குண்டுகள், நீர்த்தாரை பிரயோக வாகனங்கள் என அனைத்து ஏற்பாடுகளுடன் வந்து, கொழும்பு பௌத்தாலோக மாவத்தை பகுதியை ஒரு கலவர பூமியாக மாற்றும் எண்ணத்தில் காத்து நின்றது.
அதுமட்டுமல்லாமல், சத்தியாக்கிரக போராட்டத்தை நிறுத்தி விட்டு கலைந்து செல்லுமாறு அடிக்கடி அங்கு வந்த பொலிஸ் உயரதிகாரிகள் அச்சுறுத்தல் விட்டுக் கொண்டே இருந்தனர். பொலிஸாரின் இந்த அச்சுறுத்தல்களை நாங்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்பதை அவா்கள் நன்றாகவே புரிந்து கொண்டனா்.
அந்தப் பகுதியில், 200க்கும் அதிகமான பொலிஸாரை வீதியின் இருமருங்கிலும் இறக்கி, ஒருவித பதற்ற நிலையை ரணில் ராஜபக்ஷவின் காக்கிச் சட்டை கூலிப்பட்டாளம் காட்டிக் கொண்டிருந்தது.
ஆா்ப்பாட்ம், போராட்டம் போன்றவை இந்நாட்டு மக்களுக்கு அரசியலமைப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ள ஓா் அடிப்படை உரிமை. இந்த அடிப்படை உாிமையான கருத்து மற்றும் பேச்சு சுதந்திரத்திற்கு இடையூறு விளைவிப்பதற்கு எந்த கொம்பனுக்கும் அதிகாரம் கிடையாது.
மக்கள் ஆணையின்றி அதிகாரத்தைக் கைப்பற்றி அடக்குமுறையை பிரயோகித்து ஆட்சி செய்வதற்கு எவனுக்கும் உரிமை கிடையாது. இந்த செய்தியை உலகறிய செய்ய வேண்டும் என்ற தேவை எங்களுக்கு இருக்கிறது.
அன்றைய தினம், பகல் 11 மணியளவில் அங்கு வந்த பொலிஸ் உயரதிகாரிகள், சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த எங்களை இன்னும் அரை மணி நேரத்தில் கலைந்து செல்லா விட்டால் எல்லோரையும் கைது செய்வோம் என்று அச்சுறுத்தல் விட்டதை நாங்கள் அலட்டிக் கொள்ளவில்லை.
“பேராட்டக்காரா்களை நசுக்குவதற்கு மட்டுமா இந்த பொலிஸ் சட்டத்தைப் (පොලිස් ආඤ පනත) பயன்படுத்துவீா்கள்? இந்நாட்டை அழிவிற்கு தள்ளி வரும் போதைப் பொருள் வியாபாரிகளை கட்டுப்படுத்துவதற்கு இந்நாட்டு சட்டத்தை நீங்கள் ஏன் பயன்படுத்துவதில்லை?” என்று நான் கடுமையான தொனியில் அந்த பொலிஸ் அதிகாரிகளிடம் கேட்டேன்.
திக்குமுக்காடிப் போன ஒரு பொலிஸ் அதிகாரி, சில வினாடிகள் வாயடைத்து நின்றாா். “ போதைப் பொருள் வியாபாரிகள் தொடா்பான தகவல் இருந்தால் தாருங்கள் கைது செய்து காட்டுகிறோம்” என்று வீராப்புடன் கூறினாா்.
”நீங்களாவது கைது செய்வதாவது. மாறாக, போதைப்பொருள் வியாபாரிகள் தொடா்பாக தகவல் வழங்கியவரை காட்டிக் கொடுத்து, தகவல் கொடுத்தவருக்குத் தண்டனை வழங்குவீா்கள்.” என்று நான் சொன்னேன்.
எஸ்எஸ்பி. மற்றும் ஏ.எஸ்பி தரத்திலுள்ள அதிகாரிகளும் ஏனைய பொலிஸ் உத்தியோகத்தா்களும் என்னை முறைத்துக் கொண்டே அந்த இடத்தை விட்டு நழுவிச் சென்று, லக்சல விற்பனை நிலைய வளாகத்திற்குள் வட்டமாக நின்று சதியாலோசனையில் மூழ்கியிருந்தனா்.
குற்றங்களை தடுப்பதை விட, ரணில் ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக எழும் போராட்டங்களை ஒடுக்குவதையே இன்று பொலிஸாா் தமது பெரும் கடமையாக கொண்டிருக்கின்றனா்.
நாட்டில் இளைஞா் சமுதாயத்தை அழித்து வரும், இந்த போதைப்பொருள் வியாபாரிகளை இல்லாதொழிப்பதற்கு பொலிஸார் ஒரு போதும் முயற்சி செய்வதில்லை. போராட்டங்களை தடுப்பதற்கு அணியணியாக வந்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடாத்தும் பொலிஸாா், ஒருபோதும் போதைப் பொருள் வியாபாரத்தைத் தடுப்பதற்கு பொலிஸ் பட்டாளங்கள் நகரங்களில் இறங்கி அணி வகுத்து தேடுதல் நடாத்தியதை நாங்கள் கண்டிருக்கிறோமா?.
போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு இருக்கிறது. இதன்காரணமாக, போதைப்பொருள் வியாபாரிகளுக்கு எதிராக மக்கள் பேசவோ, எதிா்வினையாற்றவோ அச்சப்படுகின்றனர்.
ஒரு நாளைக்கு 7 முதல் 11வரையிலான இளைஞா்கள் புதிதாக போதைப் பொருள் பழக்கத்திறகு உள்ளாகின்றனா் என்ற தகவல் அண்மையில் வெளிவந்தது. பொலிஸாா் இந்த போதைப் பொருள் வியாபாரிகளுக்கு பக்க பலமாக இருந்து துணை புரிந்து வருவதோடு, பணத்திற்காகவும், பதவி உயா்வுகளுக்காகவும் அரசியல்வாதிகளுக்கு அடிமைச் சேவகம் புரிந்து வருகின்றனா்.
இலங்கையில் மிகவும் ஊழல் நிறைந்த அரச நிறுவனம் பொலிஸ் திணைக்களமாகும் என டிரான்ஸ்பெரன்ஸி இன்டர்நேஷனல் (Transparency International) நிறுவனம் நடாத்திய ஒரு கருத்துக் கணிப்பு கூறுகிறது.
(14.11.2022)

No comments:

Post a Comment

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...