Monday 31 March 2014

துருக்கி தேர்தல்: பிரதமர் தயிப் எர்டோகனின் நீதி மற்றும் அபிவிருத்தி கட்சி வெற்றி


துருக்கி நாட்டில் இன்று நடந்த தேர்தலில் பிரதமர் தயிப் எர்டோகனின் நீதி மற்றும் அபிவிருத்தி கட்சி வெற்றி பெற்றுள்ளது.
60 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் நீதி மற்றும் அபிவிருத்தி கட்சி 47 சதவீத வாக்குகள் பெற்றுள்ளது, முக்கிய எதிர்கட்சி 27 சதவீத வாக்குகள் மற்றுமே பெற்றுள்ளதாக பி.பி.சி தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து பிரதமர் தயிப் எர்டோகன் தனது ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அண்மையில் சமூக வலைதளங்களுடாக எர்டோகனுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் திட்டமிட்டு பரப்பப்பட்டதாக துருக்கிய  அரசு குற்றம் சாட்டியிருந்தது. அவற்றிலிருந்து மீளும் வகையில் அவரது தற்போதைய வெற்றி அமைந்திருப்பதாக  அறிய வருகிறது..

Friday 28 March 2014

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதன் பிள்ளையின் இலங்கை தொடர்பான அறிக்கை!


ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதன் பிள்ளை, இலங்கை தொடர்பான தன்னுடைய அறிக்கையினை நேற்று மனித உரிமைகள் ஆணைக்குழு கூட்டத்தில் சமர்பித்தார். அவருயைடய அறிக்கையின் உள்ளடக்கம் பின்வருமாறு;

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் ஆகிய நான் இலங்கையின் மனித உரிமைகள் மற்aறும் நல்லினக்க செயற்பாடுகள் தொடர்பிலான அறிக்கையினை (A/HRC/25/23) இச்சபையில் சமர்பிக்கின்றேன்.

இவ்வறிக்கையானது இலங்கை அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உள்நாட்டினுள் நடைமுறைப்படுத்துவதற்காக அதாவது 2013ம் ஆண்டு ஆணைக்குழு கூட்டத்தொடரின் பின்னரான காலம் முதல் ஆவணி 2013 என்னுடைய இலங்கையிற்கான விஐயம் வரையிலான காலப்பகுதியில் முன்னெடுத்த செயற்பாடுகள் தொடர்பில் ஆய்வு செய்கின்றது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 24ம் கூட்டத்தொடரின் பொழுது இலங்கையில் மீள்கட்டமைப்பு வசதிகள், உள்ளக அளவில் இடம்பெயர்ந்த மக்களை மீள் குடியமர்தல், வடமாகாண சபைக்காக தேர்தல்களை நடாத்துதல், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துதல் அதாவது மும்மொழிக் கொள்கையினை அமுல்படுத்துதல் என்பன தொடர்பாக வலியுறுத்தப்பட்டது.

ஆணைக்குழு 22/1 தீர்மானத்தின் அடிப்படையில் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகள் என்பன கடந்த காலத்தில் இடம்பெற்ற சர்வதேச மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் சுதந்திரமான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டுமென வலியுறுத்துகின்ற போதிலும் அதனை உறுதிப்படுத்தும் வகையில் சிறு அளவிலேனும் முன்னேற்றங்கள் ஏற்படவில்லை என்பதனை நாம் இங்கே வருத்தத்துடன் அறிவிக்கின்றோம்.

மனித உரிமைகள் தலைமையகத்தினால் இலங்கையிற்கு தொடர்ச்சியாக வழங்கப்பட்ட தொழில்நுட்ப உதவிகள் தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் சரியான முறையில் பதிலுரைக்க தவறிவிட்டது. இவ்வாறான உதவிகள் நாட்டினுள் நல்லிணக்க செயற்பாடுகளை வெற்றிகரமான முறையில் முன்னெடுக்க உதவும்.

மேலும் உள்ளக ரீதியில் இடம்பெயர்ந்தோரிற்கான கல்வி மற்றும் குடியேற்றம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசேட திட்டத்திணை அமுல்படுத்துவதை வரவேற்கின்றோம். இவ்வாறான நடவடிக்கைகளிற்காக ஏனையோரும் ஊக்கமளிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம்.

இலங்கையில் தொடர்ச்சியாக மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படுகின்ற வன்முறைகள் தொடர்பில் மனம் வருந்துகின்றோம்.

இக்கூட்டத்தொடர் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியிலும் அரசசார்பற்ற நிறுவனமொன்றில் சேவையாற்றும் இரு மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர். அவர்களுடைய விடுதலையை வரவேற்கின்றோம். செயற்பாட்டாளர்கள் மீதான தொடர்ச்சியான கட்டுப்பாடுகள் தொடர்பில் ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்துகின்றோம்.

யுத்தம் நிறைவடைந்து ஐந்து ஆண்டுகள் கழிந்துவிட்டன. யுத்த காலப்பகுதியில் அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகளால் முன்னெடுக்கப்பட்ட வன்முறை நடவடிக்கைகள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு ஆய்வு மேற்கொள்ள வேண்டியது அதன் கடமையாகும்.

இவ் வன்முறைகளின் பொழுது ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காயமுற்றனர், இறந்தனர் மற்றும் காணமற்போயினர். இவ் வன்முறைகளிலிருந்து உயிர்பிழைத்தோர் மற்றும் பாதிப்புற்றோரிற்கு நாட்டிலுள்ள நல்லிணக்க செயற்பாடுகள் மீதான நம்பிக்கை குறைவடைந்து செல்கின்றது.

அதேவேளை புதிய சாட்சிகள் சர்வதேச பொறிமுறையின் முன்னர் தங்களிற்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் தொடர்பில் எடுத்துரைக்க முன்வருகின்றனர். இதன் மூலமாக தங்களுடைய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுமென நம்பிக்கை கொள்கின்றார்கள்.

இச்செயற்பாடு சர்வதேச விசாரணையினை மாத்திரம் கூறவில்லை மாறாக புதிய தகவல்களை பெற்றுக் கொள்வதற்கான வழிமுறையாகவும், ஜனநாயக செயன்முறை தோல்வியடைந்த ஓர் இடத்திலிருந்து பல உண்மைகளை வெளிக்கொணரவும் வழிகோலும்.

ஜனநாயக செயற்பாட்டினை தொடர்ச்சியாக அவதானிப்பதற்காகவும், சர்வதேச மனித உரிமைகள் மீறல்களை தடுப்பதற்காகவும் சுதந்திரமான சர்வதேச விசாரணையினை இலங்கை மீது மேற்கொள்ள வேண்டுமென இவ்வாணைக்குழுவை கேட்டுக்கொள்கின்றோம்.

இப்பொறிமுறை புதைந்து போயுள்ள மேலதிக உண்மைகளை வெளிக்கொணரவும், நீதியை நிலைநாட்டுவதற்கு இலங்கையர்களுக்கு மேலுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இறுதியாக நீங்கள் இறுதி தீர்மானத்திற்கு வருவதற்கு முன்னர் உங்கள் அவதானத்தை அண்மையில் மனித உரிமைகள் தொடர்பில் நாட்டில் ஏற்பட்ட முன்னேற்றம் அதாவது சிறுபான்மையினரின் மத தலங்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் கருத்து சுதந்திரத்திற்குள்ள தடங்கல் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன் என ஆணையாளர் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்தார்.

Thursday 27 March 2014

மனித உடல் உறுப்புகளின் சந்தை!

மனித உறுப்புகளின் களவு, விற்பனை, மோசடி, ஏழை நாடுகளின் மக்களை ஏமாற்றி அவர்களுடைய உடல் பாகங்களைத் திருடும் பன்னாட்டு நிறுவன வியாபாரிகளைப் பற்றி விரிவாகப் பேசுகின்றது The Red Market.



நல்ல உடல் வளத்துடன் இருக்கும் நான் ஒரு கோடி ரூபாய்க்கு விலை போவேன் என்கிறார் “The Red Market”  புத்தகத்தின் ஆசிரியர் ஸ்கார்ட் கார்னி.  அவர் அமெரிக்கக் குடிமகனாக இருப்பதால் தன் உடல் பாகங்களுக்கான உண்மையான சந்தை விலையைச் சொல்கிறார் போலும். ஒருவேளை அவரே இந்தியா மாதிரியான ஏழை நாடுகளில் வாழ்ந்தால் இதில் 100ல் ஒரு பங்கு விலைக்குக் கூட அவரது உடல் பாகங்கள் விற்காது என்ற உண்மையை அவர் எழுதியுள்ள புத்தகமான “The Red Market”  ஐ படித்தால் எவராலும் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.

உலக அளவில் இன்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடக்குமளவு மருத்துவத் துறை முன்னேறி இருக்கின்றது. ஆனால் உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய மாற்று உறுப்புகள் வேண்டுமே? அது தான் இன்றைய விற்பனைப் பொருள். சந்தையில் பல பில்லியன்கள் இலாபம் தரும் நல்ல சரக்கு. உலகம் முழுவதும் மனித உறுப்புகளின் களவு, விற்பனை, மோசடி, குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் வாழும் ஏழை மக்களை ஏமாற்றி அவர்களுடைய உடல் பாகங்களைத் திருடும் இதயம் இல்லா பன்னாட்டு நிறுவன வியாபாரிகளைப் பற்றி விரிவாகப் பேசுகின்றது “”The Red Market”  .
மாற்று உறுப்புகளை யார் விற்பார்கள்? ஏழைகள் தான். ’அமெரிக்காவில் உள்ள ஒரு பணக்காரர் தன் பழுதடைந்த உறுப்புக்கு மாற்று வேண்டும் என்று விளம்பரம் செய்தால் அமெரிக்காவில் இருக்கும் ஒரு ஏழையிடம் இருந்தா அது கிடைத்து விடப் போகிறது? மிக எளிதாகவும், சட்டப்படியும் தெரியும் இந்த வியாபாரத்தின் “சிவப்புப் பக்கங்களை (இது உடல் உறுப்பு சார்ந்த ரத்தமும், தசையுமான கதை என்பதால் சிவப்புச் சந்தை என்று புத்தகத்திற்கு பெயரிடப்பட்டிருக்கிறது) தோலுரித்துக் காட்டுகிறார் அமெரிக்கப் பத்திரிகையாளாரான ஸ்கார்ட் கார்னி.
உலகம் முழுவதும் பல பணக்கார நாடுகளின் உடற் தேவைகளை அதாவது ரத்தம் முதல் எலும்பு, தசை, கிட்னி, கண், பெண்ணின் கரு முட்டை, தலைமுடி வரை தேவைப்படும் அனைத்தையும் ஈடு செய்வது மூன்றாம் உலக நாடுகளின் மக்கள் தான், குறிப்பாக இந்தியா. அதோடு இலவசச் சேவையாக பல பன்னாட்டு மருந்து கம்பெனிகளுக்கு சோதனை எலிகளாகவும் இருக்கிறார்கள் இந்திய மக்கள். ஏன்?
’தேவைப்படுபவர் வாங்குகிறார், இருப்பவர் விற்கிறார்’ என்ற சராசரி சந்தைப் பொருளாக நம் உடல் உறுப்புக்களைப் பார்க்க முடியாது. உயிருக்குக் கொடுக்கப்படும் அதே மதிப்பு உடல் உறுப்புகளுக்கும் கொடுக்கப்படுகின்றது. ஒவ்வொரு நாட்டின் காகிதச் சட்டமும் இந்த உடல் உறுப்பு தானத்தை மிக உன்னதமாகக் கருதி,  பாதுகாப்பாகவும், சட்டப்பூர்வமாகவும் தானம் செய்ய மக்களை அனுமதிக்கின்றது.
ஆனால் ஸ்கார்ட் கார்னி இந்தப் புத்தகத்தினூடே  பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து, அந்தந்த  நாடுகளில் உடல் உறுப்பு சம்பந்தமான திருட்டு, விற்பனை, அதில் கொள்ளை இலாபம் பார்க்கும் ஏஜெண்டுகள், கண்டுகொள்ளாமல் விடும் அரசுகள் என சகல கருப்புப் பக்கங்களையும் போட்டு உடைக்கிறார்.
பணத்தின் முன் ஒரு ஏழையின் உடல் என்பது ரத்தமும் தசையுமான விற்பனைப் பண்டம். எப்படி? கொஞ்சம் இதயத்தைக் கடினப்படுத்திக் கொண்டு மேலே தொடருங்கள்.
அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் மருத்துவம் பயிலத் தேவைப்படும் மனித எலும்பு மாதிரிகள் முழுக்கவும் இந்தியாவில் இருந்து அனுப்பப்படுகின்றன. இந்தியாவில் எலும்பு மாதிரிகள் ஏற்றுமதி செய்யும் நிறுவனம் அதை எப்படிச் செய்கின்றது?
முதலில் கம்பெனியில் இருக்கும் 4 தொழிலாளிகள் நோட்டம் விட்டு தங்கள் ஊரைச் சுற்றியுள்ள சுடுகாடுகளில் பிணங்கள் வருகிறதா எனத் தெரிந்து கொள்வார்கள். புதைக்கப்பட்ட பிணம் என்றால் அப்படியே அலேக், எரிக்கப்படும் பிணம் என்றால் சொந்தக்காரர்கள் திரும்பிப் பார்க்காமல் சென்ற பின், வெட்டியானிடம் பேசி வைத்துப் பாதி எரியும் போதே தூக்கி விடுவார்கள்.
தூக்கிய பிணத்திலிருந்து பதப்படுத்தி எலும்புகளை மட்டும் எடுப்பார்கள். அந்த பதப்படுத்தும் முறை கொடூரமாக இருக்கும். பின்பு எலும்புகளை சுத்தமாக பாலிஷ் செய்து பேக்கிங் செய்து விடுவார்கள். ஆன்மாவுக்கு சொர்க்கமோ நரகமோ, அடுத்த பிறவியோ, என்ன கருமமோ, யாருக்குத் தெரியும்? உயிர் கடவுளுக்கு, உடல் அமெரிக்கப் பல்கலைக்கழகத்திற்கு.
மேற்கு வங்க மாநிலத்தில் இருக்கும், புர்பஸ்தலி  எனும் ஊரில் உள்ள  “யங் ப்ரதர்ஸ் (Young Brothers)” என்ற  ஏற்றுமதி நிறுவனத்தை நடத்தும் முக்தி பிஸ்வாஸுக்கு குடும்பத் தொழில் இது தான். அந்த யங் ப்ரதர்ஸ் நிறுவனம் என்பது ஒரு எலும்புத் தொழிற்சாலை. 150 ஆண்டு காலப் பாரம்பரியம் உடையது. கொள்ளுத் தாத்தாவுக்குத் தாத்தா காலத்தில் இருந்து இப்பொழுது முக்தி பிஸ்வாஸின் மகன் வரை செய்யும் ஒரே குடும்பத் தொழில். நல்ல இலாபம். அவர்களின் கம்பெனியில் இருப்பு வைக்கப்பட்டுள்ள எலும்புகளின்  மதிப்பு மாத்திரம் 70,000 அமெரிக்க டாலர்கள்.
ஏன் அமெரிக்காவில் கிடைக்காத எலும்புகளா அல்லது அங்கு சாகாத மக்களா? என்று ஒரு கேள்வி எழும். நல்ல கேள்வி! முன்னர் அமெரிக்கா, இங்கிலாந்து முழுவதும் கூட பிணத்திருடிகள் (Grave Robbers) உண்டு.  அவர்கள் பிணத்தைத் திருடிப் போனபிறகு அதனை மீட்க பிணைப்பணம் கேட்பார்கள். இது போல் சார்லி சாப்ளினின் பிணத்தையும் திருடி, அதனை  மீட்ட கதையெல்லாம் கூட உண்டு. பின்பு அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் கடுமையான சட்டங்கள் வந்து விட்டன. அங்கு உடல் உறுப்பு சம்பந்தப்பட்ட வியாபாரம் என்றால் ’சட்டம் தன் கடமையைச் செய்யும்’!
அமெரிக்காவில் தான் இந்தச் சட்டம் கடுமையானது, அதே அமெரிக்க அரசு  இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் இருந்து வரும் மனித உறுப்புகளைக்  கண்டுகொள்வதில்லை.  ஒரு பக்கம், ’ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் செய்யும் தொண்டு’ என்று சால்ஜாப்பு. இன்னொரு பக்கம், பணத்தின் மூலம்  சட்டத்தை வளைத்து விடுவது. இந்த எலும்புத் தொழிற்சாலைகள் நேர்த்தியான கார்ப்பரேட்டுகளாக இயங்குகின்றன.
மூன்றாம் உலக நாடுகள், குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளில் இருக்கும் இந்த உடல் உறுப்புச் சந்தையான சிவப்புச் சந்தை (Red Market) பல பில்லியன் டாலர்கள் புழங்குகின்ற ஒரு துறை. சட்டப்படி இதைச் செய்தால் அதிக செலவு பிடிக்கும். அப்படியே சட்டத்துக்குப் புறம்பாகச் செய்தால் நல்ல கமிஷன் கிடைக்கும். கிட்னி  சந்தையைப் பார்ப்போம், அப்பொழுது புரியும்.
சென்னை மணலிக்கு அருகில் இருக்கும், சுனாமியில் அடிபட்ட ஒரு  குப்பத்தின் பெயர் கிட்னிவாக்கம். அங்கு கிட்னி விற்காதவர்கள் பிறந்த குழந்தைகள் மாத்திரம் தான்.
சுனாமி நகரில் வாழும் மக்கள் கடற்கரையோரம் வாழ்ந்து, சுனாமியால் வாழ்க்கையை இழந்து, அரசால் மறு-குடியமர்த்தப்பட்டவர்கள். இவர்களைப் பார்த்து புகைப்படம்  எடுத்துக்கொண்டு,  நலம் விசாரிக்க ஜப்பானின் ஜாக்கிசான் முதல் அமெரிக்காவின் மைக்கல் ஜாக்ஸன் வரை வருவார்கள், நடுநடுவே கிளின்டன், நம்ம ஊர் விஜயகாந்த் கூட வருவார்.  இத்தகைய மேன்மக்களுக்குக் காட்சிப் பொருளாக இருக்கும் இம்மக்களது வாழ்க்கை நிலைமை மிகவும் மோசம்.
கலா எனும் பெண்மணியின் கணவர் சுனாமியில் இறந்து விட்டார். அவர்களுடைய தொழிலும் போயிற்று. வரதட்சணை கொடுக்க முடியவில்வில்லை என்பதால் மகள் வாழாவெட்டியாகத் திரும்ப வந்து விட்டாள். அருகில் இருந்த சில கிட்னி ஏஜெண்டுகள் மூலம் தன் கிட்னியை விற்க கலா ஒப்புக்கொண்டார். 50 ஆயிரம் வரும்; பெண்ணுக்கு வரதட்சணை 30,000 போக, மீந்த பணத்தில் இட்லிக் கடை வைத்து சம்பாதித்து விடலாம் என்பது அவரது யோசனை. இப்பொழுது செய்யும் சித்தாள் வேலையை விட்டுவிடலாம். மதுரையில் ஆபரேஷன், முடிந்தவுடன் காசு.
மதுரைக்குச் சென்றார் கலா, ஆபரேஷனில் ஏதோ சிறு தவறு. காயம் ஆற ஒரு மாதம் ஆகும் எனச் சொல்லிவிட்டார்கள், சரி பணம்? ஏஜெண்ட் கமிஷன் போக 40 ஆயிரம் ரூபாய் கைக்கு வந்தது. கிட்னி எடுக்கும் ஆபரேஷன் வரை தான் மருத்துவச் செலவு அவர்களுடையது, அதன் பின் கலா தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.
கலா அந்தத் தனியார் மருத்துவமனைக்குக் கட்டணம் கட்ட முடியாமல் மதுரை அரசு மருத்துவமனைக்குச் சென்றார். உடலைக் காப்பாற்ற 15 ஆயிரம் செலவானது. 25,000 வரதட்சணைக்குக் கொடுத்து விட்டார். ஆபரேஷனுக்குப் பின், முன் போல சித்தாள் வேலையும் பார்க்க முடியவில்லை. சரி காவல்துறையிடம் புகார் கொடுக்கலாம் என்று போனார். ஏட்டு  சட்டத்தை எளிமையாக அவரிடம் எடுத்துச் சொல்லிவிட்டார். “இந்திய சட்டப்படி உங்கள் உடல் உறுப்பைத் தானம் தான் கொடுக்க வேண்டும், விற்பனை செய்தால் விற்றவர் கடுமையான தண்டனை பெற வேண்டும்”.
ஏழையால் வேலை செய்து வாழ முடியாத சமுக அவலம், அந்த சமுக அவலத்தைப் பணமாக்கிக் கொள்ளும் இன்னொரு அவலம். இந்த சமூக அவலத்தில் இந்தியாவில் கிட்னி திருட்டும் வியாபாரமும் தழைத்தோங்குகிறது. GDP சேர்த்தால் பல புள்ளிகள் அள்ளலாம். விவசாயிகள் முதல், நெசவாளிகள், மீனவர்கள், மலை வாழ் மக்கள் என பல இலட்சம் பேர் கிட்னி விற்பனை செய்து இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்குப் ’பங்காற்றுகின்றனர்’.
-courtesy: vinavu.com

ஜெனிவாவில் “இந்த நிலம் இராணுவத்துக்கு சொந்தமானது“ ஆவணப்படம்!

ஐ.நா.வில் இலங்கை மனித உரிமைகள் தொடர்பாக நடைபெற்ற துணைக் கூட்டத்தில் இராணுவமயமாக்கப்பட்ட இன்றைய இலங்கையை பற்றிய ஆவணப்படம் 'இந்த நிலம் இராணுவத்துக்கு சொந்தமானது' திரையிடப்பட்டது.
இந்த ஆவணப்படம் இராணுவ மயமாக்கப்பட்ட பகுதிகளில் இன்றைய நிலையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நில அபகரிப்பு பற்றியும், போரின் போது இலங்கை இராணுவம் எப்படி நடந்து கொண்டது என்பதையும் மையப்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆவணப்படம் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் மகா பிரபாகரன் அவர்களால் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது.
கடந்த டிசம்பர் மாதம் கிளிநொச்சியில் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாகச் வந்து ஆவணப்படத்திற்கான தகவல்களை சேகரிக்கும் போது தமிழ் மகா பிரபாகரன் இராணுவத்தினரால் கைது செய்யப்படடிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை இராணுவத்தின் போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா.வில் மீண்டும் ஒரு ஆவணப்படம் திரையிடப்பட்டது.
இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் 25 வது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படுகிற நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் பல்வேறு உப மாநாடுகள் இலங்கையின் மனித உரிமைகள் பிரச்னை தொடர்பாக நடக்கின்றன.
அப்படி இலங்கை மனித உரிமை பிரச்சினைகள் தொடர்பாக நேற்று அறை எண் 22 யில் உபமாநாடு ஒன்று நடைப்பெற்றது. அதில் இலங்கை மனித உரிமை செயற்பாட்டாளர் நிமல்கா பெர்னான்டோ, சுனந்த தேசப்பிரிய, பாதர் போன்ட்காலன்ட் உள்பட ஆம்னெஸ்டி இன்டர்நேசனல் போன்ற சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளும் இந்தியாவை சேர்ந்த மனித உரிமையாளர்களும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, சிறீதரன், செல்வம் அடைக்கலநாதன் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வின் இறுதியாக இலங்கையில் கைது செய்யப்பட்ட சுதந்திர ஊடகவியலாளர் மகா.தமிழ்ப் பிரபாகரனின் “இந்த நிலம் இராணுவத்துக்கு சொந்தமானது” ஆவணப்படம் திரையிடப்பட்டது.
பிரித்தானியா பாராளமன்றத்தில் ஜனவரி மாத இறுதியில் இப்படம் வெளியான போதே அதிலிருந்த காட்சிகளும் பேட்டிகளும் இலங்கைத் தரப்பை பதற்றத்துக்கு உள்ளாக்கியது.
சில நாட்களுக்கு இப்படத்திலிருந்த இராணுவ சிப்பாயின் பேட்டி இந்தியாவின் ஆங்கிலத் தொலைக்காட்சியில் ஒன்றில் வெளியாகி இருந்தது.
அதில் இரசாயன ஆயுதங்கள் தொடர்பாகவும் மக்கள் படுகொலைகள் தொடர்பாகவும் ஆதாரப்பூர்வமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
இதோடு இன்றைய வட கிழக்கின் இராணுவமயமாக்கலை உள்ளடக்கிய காட்சிகளே இன்று ஐ.நா.வில் இலங்கை மனித உரிமைகள் தொடர்பாக நடந்த உபமாநாட்டில் திரையிடப்பட்டது.
நன்றி - தமிழ்வின்

Wednesday 26 March 2014

CCTV சிசிரீவி காட்சி - மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) யின் மேல்மாகாண சபை வேட்பாளர் சுமதிபால மானவடு விபத்தில் சிக்கும் காட்சி


மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) யின் மேல்மாகாண சபை வேட்பாளரும், தொழிற்சங்க தலைவருமான சகோதரர் சுமதிபால மானவடு அவர்கள் கடந்த 25.03.2014 அன்று இரவு 8.10 மணியளவில் கொழும்பு கண்டி வீதியில் இபுல்கொட பகுதியில் இரண்டு சக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த போது ஏற்பட்ட வாகன விபத்தில் உயிரிழந்தார்.

இந்த விபத்துச் சம்பவம் சிசிரிவி கமெராவில் இப்படி பதிவாகியிருந்தது

.

Tuesday 25 March 2014

அஸ்ஸாம் இனக்கலவரம் - 2012 குறித்த ஆவணப்படம் ‘THE WOLVES'


கற்பனைகளை காட்சியாக்குவதுதான் சினிமா. சற்றே மாறுபட்டு நிகழ்வுகளை, காட்சித் தொகுப்பாக்குவதை “ஆவணப்படம்” என்கிறோம்.

ஆய்வுகள், வரலாறு, வன்முறை நிகழ்வுகளின் பதிவுகள் என ஆவணப்படங்கள் பல்வேறு தளத்தில் எடுக்கப்படுகின்றன. உண்மைச் சம்பவங்கள் சினிமாக்களாக எடுக்கும்போது பாதிப்புகள் வர்ணிக்கப்பட்டாலும், வலிதனை உணரச் செய்வது ஆவணப்படங்கள் மட்டுமே. நாயகர்களின் ஒவ்வொரு கண்ணீர்த் துளியும் இரத்தத்தின் சாட்சியல்லவா?
அந்த வரிசையில் அஸ்ஸாமின் இருள் முகத்தினை விவரிக்கும் படமாய் வெளிவந்திருக்கிறது “ஓநாய்கள்” (The Wolves).

அஸ்ஸாமின் அவலம்
ஜூலை 20, 2012… அந்தி  மாலைப்பொழுதில் அனைவரின்  கவனமும் ரமழான் முதல் பிறை பார்த்திடும் ஆவலில் இருக்கையில், திடீர் சப்தம் திடுக்கத்திற்கு உள்ளாக்கியது ஜோய்பூர் கிராம (கோக்ரஜார் மாவட்ட) மக்களை!
பீதிக்குள்ளான மக்கள் ஒன்று கூடினர். இராணுவ சீருடையில் வானை நோக்கி துப்பாக்கியால்  சுட்டுக் கொண்டே சென்ற நால்வர்தான் வெடி சப்தத்திற்கு காரணம் என்றறிந்த மக்கள், அவர்களை மடக்கி பிடித்து நையப்புடைத்தனர். பின்னர் அவர்கள் போடோ லிபரேஷன் டைகர் (BLT ) அமைப்பை சேர்ந்தவர்கள் என்று தெரிந்து கொண்டனர்.
இது அம்மக்களுக்கு புதிதல்ல. அவ்வப்போது வன்முறை குழுக்களை எதிர்கொள்வதும், அவர்களால் உயிரிழப்பு ஏற்படுவதும் வாடிக்கையே என அஸ்ஸாம் கிராமத்தின் பாதுகாப்பற்ற சூழலை விளக்கியவாறு துவங்குகிறது படம்.

போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் அவர்களுக்கு அரசின் எந்தவொரு பாதுகாப்பு உறுதியையும் பெற்றுத் தந்திடவில்லை. மாறாக போராட்டத்திற்கு தலைமையேற்றவர்களின் உயிரையே பறித்தது.

கலவரத்தின் பின்னணி
பதட்ட சூழ்நிலைகளை கட்டுக்குள் கொண்டுவர வேண்டிய பொறுப்பிலிருக்கும் அரசியல்வாதிகள் (?), தங்களின் சுய இலாபத்திற்காக மூட்டிய “தீ”தான்  அஸ்ஸாம்-2012 இனப்படுகொலையின் பின்னணி என காட்சிகள் விரிகின்றன.
இவர்களது வெறுப்புப் பேச்சால் 90 நபர்கள் பலி கொடுக்கப்பட்டும்,  244 கிராமங்களில் சுமார் 5000 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டும், 4.5 இலட்சம் மக்கள் வீடுகளை இழந்தும் தவிக்கின்றனர் என்பதும்தான் பெருத்த சோகம்.

திசை திருப்பும் பாஜக
போடோ இனத்தவருக்கும் முஸ்லிம் சமூகத்தினருக்குமான பிரச்னையை, பாஜக அரசியலாக்க முனைவதையும் படம் பிடிக்கிறார் இயக்குனர். சுதந்திரம் அடைவதற்கு முன்னால் ஆங்கிலேயர்களால் இங்கு கொண்டு வரப்பட்ட வங்கதேச முஸ்லிம்கள், சுதந்திரத்திற்குப் பின் இந்தியர்களாகவே வாழ்ந்து வருகின்றனர்.

அவர்களை ஊடுருவல்காரர்களாக சித்தரித்து, அவர்களால் நாடு மீண்டும் ஒரு பிரிவினைக்கு உள்ளாகும் எனும் துவேஷ கருத்தினை பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான (லாஹூரில் பிறந்து சுதந்திரத்திற்கு பிறகு இந்தியா வந்த) வந்தேறி எல்.கே. அத்வானி பாராளுமன்றத்தில் வெளிப்படுத்துகிறார்.

தேசம் முழுவதுமுள்ள முஸ்லிம்களுக்கு தங்கள் தேசப்பற்றை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் என்றால்,  அஸ்ஸாமிய முஸ்லிம்களுக்கு தங்கள் குடியுரிமையையே நிரூபிக்க வேண்டிய கட்டாயம். அந்தோ பரிதாபம்!
முஸ்லிம்களின் அடர்த்திமிக்க மாநிலமாக அஸ்ஸாம் இருப்பதும், அவர்களின் மக்கள்தொகை (1991-2001 கணக்கின்படி) 4 சதவிகித அளவில் சற்றே உயர்ந்திருப்பதும் காவி அரசியலின் கண்களுக்கு அஸ்ஸாமை இலக்காய் ஆக்கியிருக்கிறது. ஆனால் மேகாலயா பிரிக்கப்படும்போது மற்ற சமூகத்தித்தினர் அம்மாநிலத்திற்கு  சென்றதே முஸ்லிம்களின் சதவிகித உயர்வுக்கு காரணம் என விளக்குகிறார் இயக்குனர்.

போராட்டம் தொடர்கிறது
கலவரங்களில்  வாக்காளர் அட்டை உட்பட, தங்களிடமிருந்த   அனைத்து ஆவணங்களையும் இழந்து அகதி முகாம்களில் வாடும் அஸ்ஸாமிகள், தங்களை இந்தியர்களாய் நிரூபிக்கும் போராட்டம் தொடர்கிறது.
அம்மக்களின் நிலையை ஆவணப்படுத்தி நியூ இந்தியா தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. இதனை மிகுந்த சிரமங்களுக்கிடையில் உருவாக்கிய இஸ்மாஈல் பின் ஸக்கரிய்யா, அஹமத் இக்பால் தன்வீர் ஆகியோரை எத்தனை பாராட்டினாலும் தகும்.

அவர்கள் இதே போன்று பல படங்களை வெளியிட்டு உறங்கிக் கிடக்கும் உண்மைகளையும், மண்டிக் கிடக்கும் மர்மங்களையும் உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிட வேண்டும் என்பதே எம் அவா!

வீடியோவை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்
http://www.newindia.tv/tn/review/2676-the-wolves-a-documentary-on-assam-riots-2012
நன்றி : http://www.thoothuonline.com

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...