கொழும்பா? கொஸ்லந்தையா ? அரசாங்த்திற்கு எந்த நிலம் பெறுமதியானது?


பதுளை கொஸ்லந்தையில் ஏற்பட்ட மண் சரிவிற்கு ஏழைத் தமிழ் தோட்டத் தொழிலாளா்கள் இரையாகியிருக்கின்றாா்கள்.
இலங்கை வரலாற்றில் இடம்பெற்றுள்ள மிகவும் சோகமான ஒரு நிகழ்வுதான் இந்த கொஸ்லந்த சம்பவம். 2004 ம் ஆண்டு சுனாமிக்குப் பிறகு மனதை உலுக்கிய ஒரு உருக்கமான நிகழ்வு.

இந்த அனா்த்த சம்பவத்திற்குப் பின்னால் அரச அதிகாரிகளின் பொடுபோக்கு காரணமாக இருந்ததை மறுக்க முடியாமல் இருக்கிறது.
2005ம் ஆண்டு மற்றும் 2011 ஆண்டுகளில் நிலச்சரிவுக்கான எச்சரிக்கை தொடா்பான அறிவுருத்தல்கள் இப்பகுதியில் வாழும் மக்களுக்கு விடுக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.
இரண்டு தடவைகள் எச்சரிக்கை விடுத்த அரச அதிகாரிகள் உாிய நடவடிக்கை எடுக்காததன் மர்மம் என்ன? அவர்களுக்கான அடிப்படை வசதிகளுடனான புதிய குடியிருப்புகளை ஏற்படுத்தி ஏன் அவர்களை வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள வில்லை.
தோட்டத்தொழிலாளர்களை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகள் இது விடயத்தில் என்ன நடவடிக்கையை மேற்கொண்டன.
இன்று 31.10.2014 ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த இப்பிரதேச அரசாங்க அதிபா் கூட ஏற்கனவே இவா்களுக்கு அறிவுருத்தல் வழங்கப்பட்டதாக கூறிவிட்டு மாற்றுத் திட்டத்திற்காக மூன்று வீடுகள் அமைக்கப்பட்டதாகவும் கூறினாா். முன்னூறுக்கும் அதிகமாமோா் வாழ்ந்த லைன் வீடுகளுக்கு மாற்றீடாக மூன்று வீடுகள் அமைத்தாா்களாம். இது வேடிக்கையாக இருக்கிறது.
நிலச் சரிவு அச்சுறுத்தல் இருந்தும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருந்தது, இந்த ஏழை தோட்டத் தொழிலாளா்கள் தொடா்பான பொறுப்பற்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கின்றது.
அரசாங்கம் அக்கறையோடு செயற்பட்டிருந்தால் இவா்களை 2005ம் ஆண்டே வேறு இடங்களில் குடியமர்த்தி இருக்கலாம். அடிப்படை வசதிகளோடு கூடிய வீட்டுத்திட்டத்தை உருவாக்கி அவா்களை வேறு இடத்திற்கு மாற்றியிருக்கலாம். இது அரசாங்கத்தின் கடமை.
பன்னாட்டு கம்பனிகளுக்கு கொழும்பின் நிலம் போன்று கொஸ்லந்தையின் நிலம் பெறுமதியாக இருந்திருந்தால் என்றோ இந்த தொழிலாளா்கள் பலாத்காரமாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டிருப்பாா்கள்.
ஆனால் நடந்ததோ நிலச்சரிவின் அபாயத்தை அறிவித்து விட்டு அரசாங்கம் மௌனமாக இருந்ததுதான். அதற்குக் காரணம் தொழிலாளா்களது உயிா்களும் அவா்கள் வாழும் பிரதேசங்களும் இவா்களுக்கு பெறுமதியற்றதாக இருப்பதே.
தொழிலாளர்கள் வேறு இடங்களுக்கு செல்வதற்கு எவ்வித மறுப்பையும் தொிவித்திருக்கவில்லை. அப்படித்தான் மறுப்புத் தொிவித்திருந்தாலும், அவா்களை பலாத்காரமாக வேறு இடங்களுக்கு மாற்றியிருக்லாம். கொழும்பில் செய்யும் பலாத்காரத்தை ஏன் மலையகத்தில் செய்ய முடியாது போனது.
அரசாங்கம் கொழும்பில் தனக்கு தேவையான காணிகளை பெறுவதற்கு பல்லாண்டுகளாக குடியிருந்த மக்களை தனது குடியிருப்புகளிலிருந்து அகற்றி வீடுகளை தரைமட்டமாக்கி, மக்களை அடித்து விரட்டி காணிகளைக் கைப்பற்றுகிறது. கொழும்பு மக்களின் வாழ்க்கைத்தரத்தை கூட்டுவதற்கு இத்தகையை நடைமுறைகளை மேற்கொள்வதாக போலி காரணங்களையும் கூறி வருகின்றது.
இப்படி பறிக்கப்படுகின்ற காணிகள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு மிகப்பொிய விலைக்கு விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்து வருவதாகவும் அறிய வருகின்றது.
ஆனால் கொஸ்லந்த தொழிலாளா்களின் நிலங்கள் பெறுமதியற்றவை பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கு பொருத்தமற்றவை. எனவே அவா்கள் மீது கரிசனை கொள்ளப்படவில்லை.
இந்த தோட்டத் தொழிலாளர்கள் விடயத்தில் அரசாங்கம் ஏன் இன்னும் கண்ணை மூடிக்கொண்டிருந்திருக்கின்றது?
கொஸ்லந்த தொழிலாளா்களுக்கு ஏற்பட்ட இந்த அனர்த்தத்திற்கு அரசாங்கம் முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும்.
300 தோட்டத் தொழிலாளா்களின் உயர்களுக்கும், அனாதையாக்கப்பட்ட அவா்களின் பிள்ளைகளுக்கும் அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும். பொறுப்பற்ற முறையில் செயற்பட்ட அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்

Comments

Popular posts from this blog

ஆரியவதியும் சவுதியின் ஆணி அறைதலும்!

அதிகரிக்கும் பள்ளிவாசல்களும் அழிக்கப் படும் ஒற்றுமையும்.

சாதனை படைத்த நிலக்கரி கொள்ளை !